SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி அட்ரஸ் கொடுத்து வேளாண் அதிகாரிகளை தூங்கவிடாமல் செய்த போலிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-15@ 00:22:02

‘‘கடல்ல உயிரை பணயம் வைத்து போராடும் மக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கும் கல் நெஞ்ச கூட்டத்தை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் இருக்கு. இங்கு ஏகப்பட்ட முறைகேடு நடக்குதாம். இதுதொடர்பாக தலைவர் மீது புகார் கொடுத்தும் அந்த காகிதத்தை கசக்கி அதிகாரிகள் காசாக்கியதுதான் மிச்சம்... இந்த கூட்டுறவு சங்கத்துல 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்காம். உறுப்பினர் ஒவ்வொருவரும் வருஷத்துக்கு ஒரு முறை ரூ.1,500 பணம் வேண்டுமாம். இந்த தொகையோடு மத்திய அரசு அளிக்கும் தொகையையும் சேர்த்து, ஆண்டுக்கு ஒரு முறை மானியம் போல தருவாங்களாம்.

ஆனால், இந்த முறை சங்கத்துல 400 ரூபா கூடுதலா வாங்கியிருக்காங்களாம். ஏன்னு கேட்டா, ‘அங்கே தரணும்... இங்கே தரணும்...இது மேலிடம் சம்பந்தப்பட்ட விஷயம்’னு சம்பந்தமில்லாத காரணத்தை சொல்றாங்களாம்... இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் கலெக்டருக்கு தகவல் கொடுத்தும் பயனில்லையாம். இதனால கொதித்து போன மீனவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்க தலைவரை கண்டித்து போராட்டம் செய்யப்போறாங்களாம்... அதை உளவுத்துறை நோட் போட்டு மேலிடத்துக்கு அனுப்பி உள்ளதாம்... ஆனால் தலைவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தன் வசூலிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல உயரதிகாரிகள் சந்தோஷமாக இருக்க... கீழ் உள்ள காக்கிகள் வருத்தத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘காவலர் நலனை காப்பதில் மாங்கனி மாநகர உயரதிகாரிகள் மொத்தமும் மோசமுன்னு காக்கிகள் குமுறுகிறார்களாம். கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் சம்பளம் பிடிச்சாங்களாம். பிறகு அதனை திரும்ப கொடுக்க அரசு உத்தரவு போட்டிருச்சாம். ஆனா அந்த தொகை மாநகர காக்கிகள் கணக்குல இன்னும் ஏறலயாம். இதுமட்டுமா.. பெட்ரோல் அலவன்ஸ் ரூ.370 வழங்க, அரசு போட்ட உத்தரவு பக்கத்து மாவட்டத்துல எல்லாம் வாங்கிட்டாங்களாம். அதுவும் மாங்கனி மாநகர காக்கிகளுக்கு வந்து சேரலயாம்.

1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.க்களை விட 5 மாதம் பிறகு சேர்ந்தவர்களுக்கு ₹1400 கூடுதலா சம்பளம் வாங்குறாங்களாம். அது நிவர்த்தி பண்ணி கொடுங்கன்னு சிறப்பு எஸ்.ஐக்கள் கமிஷனர் ஆபீசுக்கு நடையா நடக்காங்களாம். அது ஒருபோதும் நடக்காதுன்னு அங்குள்ள அதிகாரிகள் உறுதியா இருக்காங்களாம். காக்கிகளின் உரிமையை காக்காத அதிகாரிகள் என்ன பண்றாங்கன்னு புலம்பி தள்ளுறாங்களாம். அதைவிட தற்போது டிராவலிங் அலவன்ஸ் வழங்குவதிலும் உயர்அதிகாரி ஒருவர் கேள்விக் கணைகளை வீசி வர்றாராம். மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்று பெயர் தான் பெரிசாக இருக்கு... கீழ் மட்ட காக்கிகளுக்கு சிறு உதவி கூட அதிகாரிகள் செய்ய மாட்டேன்கிறார்கள் என்று வேதனையோடு இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர மாவட்ட போலி விவசாயிகள் ரொம்ப விவரமானவங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. உண்மையான அட்ரஸ் கொடுத்துட்டு மாட்டிகிறதுக்கு அவங்க என்ன விவரம் தெரியாதங்களா... இப்படி சேர்ந்தவங்கல யாராலும் கண்டு பிடிக்க முடியலையாம்... அதனால, அதிகாரிகள் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்காம்... அதாவது... விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தில் ரூ.110 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து, தற்போது பணம் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், 13 ஒன்றிய பகுதியில் இருந்து 11,135 பேர் போலியாக சேர்த்து இருக்காங்க. இவர்களிடம் இருந்து ரூ.2.22 கோடி மீட்க வேண்டும். ஆனால் இதுவரை ரூ.76 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்கு துணையாக இருந்த வேளாண்மை அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் முறைகேடு பணம் முழுமையாக மீட்க முடியாமல் போய்விடும். முழுத்தொகையையும் மீட்டப் பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என வேளாண்மை உயர் அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், பணம் பெற்ற பலரின் வங்கிக்கணக்கில் பணம் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க வேண்டிய முகவரியிலும் ஆட்கள் இல்லை. செல் நம்பரும் போலியாக உள்ளது. முதியோர் உதவித்தொகை போல், இது பெரிய விஷயமாக வராது என நம்பினோம். இப்படி சிக்கல் வந்துவிட்டதே. கோடிக்கணக்கான இழப்பீடு தொகையை நம்மை கட்ட சொன்னால் நாம் எங்கு போவது... ஒருவேளை அரசு நடவடிக்கை எடுத்தால், எப்படி கையாளுவது என தூங்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்களாம் தூங்கா நகரத்து வேளாண் அதிகாரிகள்...’’ என்றார் விக்கியானந்தா.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்