SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் வேட்பாளராக மூன்றாவதாக ஒருவர் முளைத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-14@ 00:15:24

‘‘நெற்களஞ்சியத்துல இருந்து இன்னொரு புது முதல்வர் உருவாகிறார் போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில துணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் மருத்துவர்லிங்கம். இவருக்கு கட்சியின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக சில மாதங்களாக நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வந்தாராம். கொரோனா என காரணம் சொன்னாலும் ஐவர் அணியில் தனக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற விரக்தி அவரது மனதில் ஓடியது. அப்போது அவரது மனதில் இடி இடித்து மின்னல் வெட்டியது. தனது பிறந்த நாளான 7ம் தேதியை மேலிடத்துக்கு தான் யார் என்று காண்பிக்க நினைத்தாராம். அதனால மருத்துவர்லிங்கம் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கிராண்டாக கொண்டாடினாராம்.

கொரோனாவை விட தன் அரசியல் எதிர்காலம் முக்கியம் என்பதால் இந்த ஏற்பாடாம். அரசியல் நெருக்கடி மற்றும் தனக்கான இடத்திற்கு முக்கியத்துவம் கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளதாக நெற்களஞ்சிய மாவட்ட கட்சியினரே பரபரப்பாக பேசிக்கிறாங்க. இந்த பர்த்டே பார்ட்டியில 2 அமைச்சர்கள் உள்பட பல முக்கியஸ்தர்கள் நேரில் வந்து வாழ்த்தினாங்க. அதை உளவு பார்த்த சிலர் அதை அப்படியே லைவ் டெலிகாஸ்டிங் போல தகவல்களை மேலிடத்துக்கு கொண்டு போனாங்களாம். மேலும் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் வாழ்த்து சொல்ல குவிந்தனர். அந்த கும்பல்ல இருந்த ஒரு சிலர் சொல்லி வைத்தாற்போல முதல்வர் வேட்பாளர் பட்டியலில் உள்ள அண்ணன் மருத்துவர்லிங்கம் வாழ்க என கோஷமிட்டாங்களம்...

இதனால அந்த இடமே ஆரவாரத்தில் திளைத்ததாம். ஏற்கனவே முதல்வர் போட்டியில இரண்டு பேர் இருக்கிற நிலையில நெற்களஞ்சிய மாவட்டத்தில் இருந்து மூன்றாவதாக ஒரு முதல்வரா என்று பார்த்டே பார்ட்டிற்கு சென்றவர்கள் அதிர்ந்துவிட்டார்களாம்.. சும்மா விருந்து சாப்பிட சென்ற மற்ற விவிஐபிக்களின் ஆதரவாளர்கள் இந்த கோஷத்தை கேட்டு அங்கிருந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்று எஸ்கேப் ஆகிட்டாங்களாம்... இதையும் உளவுத்துறையினர் நோட் போட்டு அனுப்ப வேண்டியவங்களுக்கு அனுப்பிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு மாவட்டத்துல மாவட்ட மேலாளாராக இருந்தாலே தண்ணீ துறையில இருக்கிறவங்க... சில மாசத்துல சொந்தமா பங்களா கட்டலாம்... 9 மாவட்டத்துக்கு இருந்தா.... கணக்கு கண்ணை கட்டுதே’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கியது திருச்சி டாஸ்மாக் மண்டலம். இந்த மண்டலத்தின் உயர் பதவியில் இருப்பவருக்கு தற்போது ராஜயோகம் அடித்துள்ளதாம். காரணம், இவருக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறதாம். 9 மாவட்ட மேலாளர்களும் பணத்தை மூட்டையில் எடுத்து வந்து ரகசிய இடத்தில் கொட்டிவிட்டு போறாங்களாம்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பணம் வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறாராம். அதாவது 80 ஊழியர்கள் மீது புகார் வந்தால் 10 பேர் மீது மட்டும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துவிட்டு மற்ற 70 பேரிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அன்பளிப்பு வாங்கி வாழ்த்தி அனுப்புகிறாராம். இந்த பணத்தை வாங்குவதற்காகவே, டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள் 2 பேரை தனது திருச்சி மண்டல அலுவலகத்திலே தயாராக வைத்துள்ளாராம். இந்த 2 பேரை தாண்டி யாரும் உயர் அதிகாரியை சந்திக்க முடியாதாம்.

இதுதவிர, துறை ரீதியாக தவறு செய்தவர்கள், பணியிடை மாற்றத்துக்கும் இவரிடம் பணம் கொடுத்தால் வேலை கச்சிதமாக முடிந்துவிடுகிறதாம். இதுபற்றி தொழிற்சங்கத்தினர் இவரிடம் முறையிட்டாலும், நான் இந்த பதவிக்கு 3 மாதத்துக்கு முன் ரூ.40 லட்சம் கொடுத்துத்தான் வந்துள்ளேன். என்னை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என்று மிரட்டல் தொணியில் பேசி அனுப்பி விடுகிறாராம்... அதனால 40+40=80 அள்ளுகிற வரை கரன்சி மழை தொடரும் என்கிறார்கள் விஷயம் அறிந்த டாஸ்மாக் ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பூட்டு மாவட்டத்துல நெடுஞ்சாலை துறை அதிகாரியின் பேயாட்டத்தை பார்த்தீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பார்க்கல... கேட்டேன்.. திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு ரூ.3,500 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருது... இதற்கு சுமார் 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதோடு, உரிமையாளர்களுக்கு தற்போது இழப்பீடு வழங்கி வர்றாங்க... ஆனால், கூடுதல் இழப்பீடுத்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, ‘மூவேந்தர்களில் ஒருவர் பெயர் கொண்ட’ நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, நில உரிமையாளர்களிடம் பல லட்சங்களை சுருட்டிட்டாராம்... கூடுதல் இழப்பு மதிப்பீட்டைக் காட்டி, நில உரிமையாளருக்கு கிடைக்கும் பணத்தில் இயன்றவரை அதிக கமிஷன் பார்த்து, பணத்தை குவித்துள்ளாராம்...

லேசான இடிபாட்டிற்குக் கூட கோடிக்கணக்கில் இழப்பீடு தந்துள்ளதாகவும், ஆழ்துளை கிணறு இல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு இழப்பீடு வாரி வழங்கியதாகவும் இவர் மீது புகார்கள் எழுந்துள்ளதாம்... இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைத்து, இழப்பீடு வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனராம்... மக்கள் பணம் மக்களுக்கு தான்... இதுல அதிகாரிக்கு ஏன் கொடுக்கணும்.. அவர் மக்களின் வரிப்பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறாரோ என்று பாதிக்கப்பட்டவர்கள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்