SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்வாகிகள் கேள்வியால் துளைத்தெடுப்பதால் அமைச்சர்கள் வெளியே வரவே பயப்படுவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-13@ 01:37:48

‘‘அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்டு இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கதர் கட்சி ஆட்சியில் உள்ள பக்கத்து மாநிலத்தில் அமைச்சர்களை கண்டாலே கதர்கட்சிக்காரர்கள் சகட்டு மேனிக்கு கேள்வியால் துளைத்து எடுத்து விடுகிறார்கள்... எல்லாம் கரன்சி, வளர்ச்சி பிரச்னைனு உள்ளுக்குள்ளேயே ‘பேச்சு’ ஓடுது. பவுர்புல் பெண்மணியின் ஆட்டத்தால் மாநிலத்தில் எந்த திட்டமும் நடக்கல. இந்நிலையில் தேர்தலில் எதை சொல்லி ஓட்டுகேட்பது என்று கதர் தலைமை தலையை பிச்சிக்கிட்டு இருக்கு. அது போதாதென்று சொந்தக்கட்சிக்காரங்களும் சேர்ந்துட்டாங்களாம்... அதாவது, காரைக்காலில் தாமரைக்கண் பெயரை கொண்ட அமைச்சரை பொது இடத்தில் வைத்து இந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சராக இருந்தும் எங்கள் பகுதிக்கு எதுவுமே செய்யாதது ஏன் எனக்கேட்டு கட்சிக்காரர்கள் வறுத்தெடுத்தார்களாம். இதனால் கடுப்பான அமைச்சர் காரில் கிளம்பிய சில மணிநேரத்தில் கதர் நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பாய்ந்துவிட்டதாம்... இதனால் கீழ்நிலை கதர் நிர்வாகிகள் கொந்தளித்து போய் இருக்காங்களாம். வெளியே விஷயம் லீக் ஆகாமல் தான் இருந்ததாம்.  ஆனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் கதர் நிர்வாகிகளிடம் சமாதானம் பேசப்போய் சிக்கலில் மாட்டிக்கொண்டாராம்.

இந்த ஆடியோவை வெளியிட்டு எதிர்தரப்பு அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்கிறதாம். புதுச்சேரிஎம்எல்ஏவின் பிறந்தநாளுக்கு சென்ற மற்றொரு சாமி பெயரைகொண்ட அமைச்சர் இதேபோல் எதுவுமே செய்யாமல், நீங்கள் மட்டும் அமைச்சரா இருந்துட்டு போய்டுவிங்க.. நாங்க மட்டும் தேர்தல் உங்களுக்கு உழைக்கணும். எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு போங்க என அமைச்சரை விடாமல் துரத்தினாராம். அதோடு இரண்டு எதிர்கட்சி பெண் எம்எல்ஏக்களின் பெயரை குறிப்பிட்டு அந்த தொகுதிக்கு மட்டும் அமைச்சர் அதிக சலுகை காட்டுவது ஏன்? எனக்கேட்டு அமைச்சரை நெளிய வைத்துவிட்டாராம். இதையெல்லாம் கட்சி தலைவரிடம் புகாராக கொடுத்திருக்கின்றனர் அமைச்சர்கள். இதையடுத்து கதர்கட்சிக்காரர்கள் அமைச்சர்களை பொது இடத்தில் விமர்சித்தால் இனிமேல் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என தலைமை எச்சரித்துள்ளது. அதுக்கு கீழ்நிலையில் உள்ள கதர் நிர்வாகிகள் எல்லாம் எங்களுக்கு தெரியும்... எங்களுக்கு எதுவும் செய்யாதவரை அப்படி தான் விமர்சிப்போம்... எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ேதர்தல் நேரத்தில் எங்கள் பகுதிக்கு அமைச்சராக இருந்தாலும் வர முடியாதுன்னு ‘தில்’லாக பேசினாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கியை பகைச்சுட்டா... நாலு வருஷம் ஆனாலும் விடாது கருப்பு என்பதுபோல வழக்கு மேல வழக்கு போட்டு துரத்திக்கிட்டே இருப்பாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குமரி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர், ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஜேசிபி ஓனரிடம் டிரைவர் வேலை பார்த்தார். மண் அள்ளியபோது இவருக்கு தங்க புதையல் கிடைத்ததாக தகவல் பரவ கடந்த அக்டோபர் மாதம் அந்த டிரைவரை காரில் கும்பல் ஒன்று கடத்தி நெல்லை மாவட்டம் பண்ணை வீட்டில் கொண்டு சென்று புதையலை கேட்டு சித்ரவதை செய்தாங்க. அவரிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி நகை, காரை பறித்த நிலையில் கும்பலின் பின்னணியில் மாஸ்டர் மைண்டாக இருந்தது கருங்கல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ற தகவல் வெளியானது. இதனால  ஏஎஸ்பியின் ரகசிய விசாரணையில் கருங்கல் இன்ஸ்பெக்டர், கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். பெண் இன்ஸ்பெக்டர், 2 போலீசார் சஸ்பெண்ட் ஆனது எல்லாம் பழைய கதை. புது கதை என்ன தெரியுமா... தன்னை சஸ்பெண்ட் செய்ய வைத்த டிரைவரை ரவுடி லிஸ்டில் சேர்த்துட்டாங்க காக்கிகள். புகார் கொடுத்த டிரைவர் எனக்கு புதையல்  கிடைக்கவில்லை...

நான் மண் விற்று சம்பாதித்த பணத்தில் தான் கார், வீடு, தோட்டம் துறவு வாங்கியதுன்னு சொன்னாராம்... உடனே காக்கிகள் மணல் கடத்தினார் என்று அடுக்கடுக்காக வழக்கை பதிவு செய்து டிரைவரின் தூக்கத்தை கெடுத்துட்டாங்களாம். குளச்சல், கருங்கல், நாகர்கோவிலில் என மண் அள்ள செல்கின்ற இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வழக்குகளை தொகுத்து அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காக்கிகள் திட்டமிட்டுள்ளார்களாம். இது எல்லாம் புதையல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட காக்கிகளை காப்பாற்ற மற்ற காக்கிகள் உதவி செய்யறாங்களாம்.  புகார் கொடுத்தவர் மீதே திட்டமிட்டு இதனை செய்வதாக கூறுகின்றனர் விபரமறிந்தவர்கள். என்ன தான் தப்பு செய்தாலும் காக்கிகளுக்குள் ஒரு பிரச்னை வந்தால் மற்றவர்கள் கை கொடுத்து தூக்கிவிடுவதை குமரிக்கு போனால் பார்க்கலாம் என்ற டாக் காக்கிகள் வட்டாரத்திலேயே ஓடுதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிசான் நிதி உதவி திட்டத்தில் அந்த துறையின்  அனைத்து நுணுக்கத்தையும் தெரிந்த டிரைவர்கள் எஸ்கேப் ஆகிட்டாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ம்... மேட்டூர் அணை உள்ள மாவட்டத்தில் கிசான் நிதி மோசடி விவகாரத்தை குழி தோண்டி புதைக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்கிறார்களாம். இதில் முக்கியமாக அரசு ஊழியர்கள் பட்டியலில் இருக்கும் யாரையும் புகார் வளையத்தில் கொண்டு வரக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருக்காங்களாம். நிறைய ஒன்றியங்களில் கான்ட்ராக்ட் அடிப்படையில் பணியாற்றும் அதிகாரிகளிள், டிரைவர்கள் மீது மொத்த பழியையும் போட்டு விடலாம் என்பது லேட்டஸ்ட் முடிவாம். இதை தெரிந்து கொண்ட பல டிரைவர்கள், வாலண்டரியாக மெடிக்கல் லீவு போட்டுட்டு பறந்துட்டாங்களாம். அதே நேரத்தில் சிக்கிக் கொண்ட சில டிரைவர்கள், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஆதாரங்களுடன் மீடியாக்களை தேட ஆரம்பிச்சிருக்காங்களாம். இதனால் அக்ரி ஆபீசர்களும், சிபிசிஐடியும் அரண்டு போயிருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்