SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2020-08-14@ 00:28:59

சென்னை: குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்ககை: திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களை ஒட்டி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆட்சிக்காலம் நெடுகிலும் பாலின சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு எனப் பெண்கள் தங்களின் உரிமையைப் போற்றி வாழ்வதற்கானப் பல திட்டங்களை, இந்தியாவுக்கே முன்னோடியாக வழங்கினார். 1989-ல் பரம்பரைக் குடும்பச் சொத்தில் மகன்களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதைச் சட்டமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை வழங்கினார் கலைஞர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு 11-08-2020-ல் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதில், “இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். சொத்து பாகப்பிரிவினையில் இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005 திருத்தத்துக்கு முன்பு தந்தை இறந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதைப் போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு” என நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பெரியாரும், அம்பேத்கரும் நடத்திய உரிமைப் போராட்டத்தை, அவர்களின் சிந்தனைகளைச் செயல்படுத்தும் வகையில், 31 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி தலைவர் கலைஞர் நிறைவேற்றிய சட்டத்திற்கு உறுதியான அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் நாட்டு மக்கள் நம்பி வழங்கிய பெரும்பான்மை பலம் இருப்பதால், மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பற்றிக் கவலைப்படாமல், அவசரக் கோலத்தில், உழைக்கும் மக்களுக்கும் உழுவோர்க்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான பல சட்டங்களை, கொரோனா பேரிடர் காலத்தில் பெருகிவரும் பதற்றத்தையும் பாதிப்பையும் பற்றிப் பொருட்படுத்தாமல், அவசர அவசரமாக நிறைவேற்றி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, பெண்களின் உரிமையைக் காக்கும் இந்தக் குடும்பச் சொத்துரிமை தடையின்றி நிறைவேறிட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதேநேரத்தில், இந்திய நாடாளுமன்றம்-சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் நிறைவேறாத நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது, இந்திய சமுதாயத்திற்கே பின்னடைவாகும். முக்கியமான அந்தக் குறிக்கோளை நிறைவேற்றிட, மத்திய பா.ஜ.க. அரசு தனது பெரும்பான்மை பலத்தை மிகவும் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாடு நிறைவேற்றிய பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் சரியான வகையில் நடைமுறைப்படுத்திடவும், தலைவர் கலைஞர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வலியுறுத்தி வந்த, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடவும், மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு உரிய முறையில் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும், ஏனைய அரசியல் கட்சிகளும் பெண்களுக்கான இந்த இடஒதுக்கீட்டினைக் கையிலெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், திமுக எப்போதும் துணை நிற்கும் என்பதையும், இத்தருணத்தில்  உறுதிமொழியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* உடலுறுப்பு தானம் அளித்தவர்களுக்கு நன்றி
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
மறைந்த பிறகும் வாழ்தல் என்பது புகழால், மக்கள் சேவையால், பொதுநலத் தொண்டால் மட்டுமல்ல உடல் உறுப்பு கொடை மூலமாகவும் சாத்தியம். கொடையில் மிக உயர்ந்தது உடலுறுப்பு வழங்குதல். அத்தகைய உடலுறுப்பு தானம் செய்வதன் மூலமாக அனைவரும் பெரும் கடமை ஆற்றலாம் என்ற ஆலோசனையை அனைவருக்கும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இதுவரை உடலுறுப்பு கொடை அளித்திருக்கும் அனைவர்க்கும் நன்றி. இனி அளிக்க இருக்கும் அனைவர்க்கும் நன்றி. இருக்கும் வரை உயிராய், உறவாய் ஒன்றிணைவோம். உடல்தானம் செய்வதன் மூலம், இறந்த பின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* பிரணாப் உடல்நலம் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்
திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், உடல்நலக் குறைவு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தறிந்தார். அப்போது, பிரணாப் முகர்ஜி விரைந்து நலம்பெற வேண்டும் எனும் தமது விழைவினை தெரிவித்த மு.க.ஸ்டாலின், மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் மீது, தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2020

  22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • taj21

  6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

 • rashya21

  ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்