SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போட்டோ காட்டி லட்சாதிபதி ஆனவரின் தில்லாலங்கடி வேலையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-11@ 00:33:36

‘‘நுழைவுத் தேர்வு கோச்சிங்கில சம்பாதிக்கிறாங்க... ஸ்பெஷல் கோச்சிங்னு சம்பாதிக்கிறாங்க... இப்போது தேர்வு ரத்துல என்ன சம்பாதித்தாங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால, காலாண்டு, அரையாண்டு தேர்வ வச்சு, பப்ளிக் எக்ஸாமுக்கு மார்க் போட்டுருக்காங்க. இந்த பொறுப்ப கையில எடுத்துக்கிட்ட பிரைவேட் ஸ்கூல்காரங்க, இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடிட்டாங்க. இதனால, எந்த ஸ்கூலை எடுத்துகிட்டாலும், 480 மார்க்குக்கு மேல 80 சதவீதம் பேரு இருக்காங்கனு பெருமை பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது ஒருபக்கம் இருக்க பள்ளிக்கூட நிர்வாகிங்க, முதல்வருங்க மற்றும் தலைமை ஆசிரியரோட பிள்ளைகள் யாரும், 480க்கு கீழ குறையலயாம். அதிலும் ஈரோடு மாவட்டத்துல ஒரு மாணவர் 500க்கு 500 வாங்கிட்டாராம். இதுபோல இன்னும் எத்தனை 500 இருக்குனு தெரியாமலும், கடைசியில நாம தான் ஏமாந்தவங்கனும் அரசுப்பள்ளி வாத்தியாருங்க வேதனையில இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கள்ளக்குறிச்சி மக்கள் கள்ளம் கபடம் இல்லாதவங்களா இருக்கிறாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமே கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் நீர், கோமுகி அணை தான். அதன் மூலம் தான் மாவட்டத்தின் பல ஏரிகளை நிரப்பி குடிநீர் தாகத்தையும், விவசாய நிலங்களையும் செழிப்படைய செய்து வருகிறது. ஆனால் கல்வராயன்மலையில் கைகன் வளைவு பகுதியில், ஒரு புதிய திட்டத்தை தொடங்கி அங்கு உற்பத்தியாகும் நீரை சேலம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளுக்கு கொண்டு செல்ல அரசு முடிவெடுத்திருக்காம். இதற்காக முதல்கட்டமாக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவில் சத்தமில்லாமல் துவக்க உள்ளார்களாம். இத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. செங்கொடி அமைப்பினர் விரைவில் போராட்டத்தில் குதிக்க நாள் குறித்து இருக்காங்களாம்... இது இலை தரப்புக்கு கடுப்பை உண்டாக்கி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே ஒரு போட்டோவை வைத்து கல்லா கட்டும் நபரை பற்றி சொல்லுங்க... அப்படியே அந்த போட்டோ ஸ்டூடியோ எங்கேனு சொன்னா நானும் ஒரு போட்டோ வாங்கி லட்சாதிபதி ஆயிடுவேன்...’’ என்று சிரித்தபடி சொன்னார் பீட்டர் மாமா.
 ‘‘வேலூர் மாவட்டத்துல காட்பாடியில் தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் எந்த வேலையை முடித்து கொடுக்க வேண்டும் என்றாலும் சாதிக்கட்சியை சேர்ந்த பாவானவர் பக்கம்தான் அனைவரது விரல்களும் நீள்கிறதாம். சான்றுகள் வாங்குவதற்கும், போலீஸ் வழக்குகளில் பஞ்சாயத்து நடத்தி முடிப்பதற்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் கணிசமான தொகையை வசூலித்துவிடுகிறாராம். இதில் குறிப்பிட்ட தொகையை அதிகாரிகளுக்கு கொடுத்து வேலையை முடிப்பதில் புரோக்கராக செயல்பட தொடங்கியுள்ளார்.

இதற்காக எந்த அதிகாரி பொறுப்பேற்றாலும் நேரடியாக சந்தித்து சால்வை, மாலை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொள்வாராம். புதிய அதிகாரிகளிடம் அறிமுகம் ஆவதற்காக விஐபிக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை செல்போனில் காட்டுகிறாராம். இப்படியே பல லட்சங்களை குவித்துவிட்டாராம். ஒரு சிலருக்கு போலி சான்றிதழ்கள் வாங்கி கொடுத்திருப்பதாகவும், நில அளவையில் முறைகேடுகளுக்கு வழிவகுத்து கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் கசிய தொடங்கியிருக்கிறது. இதனால வில்லங்க நபருடன் ஆசையாக போட்டோ எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘ஆடி மாதம் பிறந்தும் சாமி அமைதியா இருக்கிறாரே, ஏன் இந்த மவுனம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி சாமி கட்சியில் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் சாமியானவர் பெரும் அப்செட்டில் இருக்கிறார். அதற்குள்ளாக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க பலர் போட்டி போடுறாங்களாம். அதில் ராதாவானவர் பெயரை யாரோ கிளப்பிவிட, கட்சிக்குள் புகைச்சல் எழுந்திருக்கிறது. இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் சாமி, பொதுச்செயலாளர் பதவியை உடனே நிரப்பும் ஐடியாவில் இல்லையாம். ஏனெனில் சாமியின் குட் புக்கில் ராதாவானவர் தற்போது இல்லையாம். அவர் பதவியில் இருந்தபோது தாமரை நிழலில் சுகமாக இந்தாராம். மேலும் சாமி நிர்வாகிகளும், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனராம். ராதாவானவருக்கு கட்சியில் பதவி கொடுத்தால், இன்னும் சில ஆண்டுகளில் கட்சி உங்கள் பெயரில் இருக்காது.. எல்லாமே அவர் என மாற்றிவிடுவார்கள் என தங்கள் பங்குக்கு போட்டு தாக்கியுள்ளனர்... இதனால் ராதாவானவர் அதிர்ச்சியில் வேறு முடிவு எடுத்தாலும் எடுக்கலாமாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முத்து மாவட்டத்துல என்ன முட்டல் மோதல்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக 31ம் தேதி ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். அதை வைத்துதான் அவர்கள் அந்த மாத தேவையை சமாளிக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய நான்கு ஒன்றியங்களில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரை ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். ஆசிரியர்களுக்கு புதிய சாப்ட்வேர் மூலம் ஊதியம் வழங்குவதில் கடும் குளறுபடியாம். இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால்தான் இந்த நான்கு யூனியன்களிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லையாம். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வீடுகளில் அடைபட்டு கிடக்கிறோம். இந்நிலையில் ஊதியத்தையும் உரிய காலத்தில் தர மறுக்கிறார்களே என ஆசிரியர்கள் வேதனைப்பட்டு கிடக்கின்றனர். இந்த விவகாரத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாம். எப்போது ஊதியம் கிடைக்கும் என்பதுதான் ஆசிரியர்களின் கேள்வி...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்