SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொண்டர்களுக்கு பிரியாணி வாங்கி தர காசு இல்லையேனு கவலைப்பட்ட மந்திரி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-10@ 01:30:22

‘‘சிலையாக நீ இரு... சில்லறைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்னு சொன்ன யுனிவர்சிட்டி மாபியா பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘என்னால இனி மேல் இந்த யுனிவர்சிட்டியில பொறுப்புல இருக்க முடியாது... பாலிடிக்ஸ் ராக்கெட் மாதிரி வந்து தாக்குதுன்னு தப்பியோடினார் ஒரு நிர்வாகி... ஆனாலும் அவரை பிடிச்சி மீண்டும் பொறுப்பு கொடுத்ததால, இரும்பாலை மாவட்ட யுனிவர்சிட்டியில புகைச்சலாம். யார் அந்த அதிகாரி தெரியுமா... ஏற்கனவே எக்ஸாமுக்கு மட்டும் தலைமை பொறுப்புல இருந்த வாத்தியாரு ஒருத்தரு, தன்னால முடியாதுனு பாதியிலேயே ஓட்டம் பிடிச்சாரு. ஆனா இப்போ, எல்லா துறையையும் கன்ட்ரோல் பண்ற பொறுப்புக்கு மீண்டும் அந்த ஓட்டம் பிடிச்ச வாத்தியாரையே போட்டுருக்காங்க. முக்கிய பொறுப்புங்கிறதால, வேற யாரும் வந்துட்டா சிக்கலா போகும். பேருக்கு மட்டும் நீங்க ஆபிசரா இருங்க, மத்தத எல்லாம் நாங்களே `பாத்துக்குறோம்'னு ரெக்கமண்டோட சாருக்கு இந்த பொறுப்ப கொடுத்துருக்காங்களாம். நாங்க சொல்ற இடத்துல கையெழுத்துபோடுங்க...மற்ற விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம்னு சொன்னாங்களாம்... அவரும் மண்டையை ஆட்டிட்டு பொறுப்பில் உட்கார்ந்து இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சினிமாவுல வர்ற மிச்சர் மாமா போல... இவரு சிலை மாதிரி உட்காருவாரு...மத்தவங்க சில்லறையை பார்ப்பாங்க... சரி நாகர்கோவில்ல என்ன நடக்குது... கேட்கவே ஒரு மாதிரியா இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் சாதாரண மக்களுக்கு இபாஸ் கிடைக்கல... ஆனால் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரிலும், வீடுகளை வாடகைக்கு எடுத்தும் பாலியல் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் எளிதாக இ-பாஸ் கிடைக்குதாம். இது போலீசாரின் ரெய்டில் தெரியவந்ததாம். இதே காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளான சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள்தான் வெளி மாவட்ட பெண்களை இபாஸ் இல்லாமல் நாகர்கோவிலுக்குள் செல்ல அனுமதித்துள்ளனர். அதற்கு கைமாறும் பெற்றாங்களாம்.

இது மாவட்ட காக்கி உயரதிகாரிக்கு தெரிய வர, அந்த கருப்பு ஆடுகள் பட்டியலை கேட்டுள்ளாராம். அதில் ஒருவர் காக்கிகளின் இன்பார்மராம். அந்த போர்வையில் காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் நெருக்கமாக இருந்துள்ளார். ஐ.ஜி., டி.ஐ.ஜி.யிடம் போனில் பேசினேன் என கூறி வந்த விபசார புள்ளி, குமரி மாவட்டத்தில் உள்ள சில காவல் அதிகாரிகள் பற்றி பொய்யான தகவல்கள் பரவியதற்கும் முக்கிய காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள். இப்போது கைதாகி உள்ளவர், அதிகாரிகளை பற்றி என்ன பரப்பி விட போகிறாரோ என்ற பரபரப்பும் சில காக்கிகள் மத்தியில் நிலவி வருகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சி செலவுகள், தொண்டர்களுக்கான பிரியாணி, குவாட்டர், மாத கவனிப்பு எல்லாம் மக்கள் பணத்தில் தான் நடக்குதுபோல... அதை வீரமான விஐபி வாயிலேயே வந்துருச்சாமே உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்துல, கொரோனா பாதிப்பால 95 சதவீதம் தொழில் பாதிக்கப்பட்டிருக்கு. அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலும் முடங்கிப்போச்சு. இதனால வீடு, வீட்டுமனைங்க விற்பனையாகாமலே கிடக்குது. கட்டி முடிச்ச அபார்ட்மென்ட்களும், வீடுகளும் வாங்க ஆள்இல்லாம கிடக்குது, பிளாட்டுங்க புதர்மண்டி கிடக்குது. இதனால் அதற்கான பதிவு அலுவலகங்கள் வருவாய் இல்லாமல் முடங்கி போய் இருக்காம். இதனால 40 சதவீதம் அரசுக்கு வர வேண்டிய வருமானம் நின்று போச்சு... அந்த வருமானத்தில் வர வேண்டிய கமிஷன் பல கோடியும் நின்னு போச்சாம்... அந்த கமிஷனை வைச்சு தான் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் கரன்சிகளை வாரி இறைத்தாராம்...

அப்போது கூட சொந்த பணத்தில் இருந்து ஒரு பைசா செலவு செய்யலையாம். அப்போது எல்லாம் கவலைப்படாதவர் இப்போதுதான் கட்சி பற்றி கவலைப்படறாராம். பதிவு பணி நடக்காததால வீரமான விஐபி தனக்கு வரவேண்டிய கமிஷன் சரியாக கிடைக்கிறதே இல்லன்னு தன் நெருங்கிய சகாக்களிடம் புலம்பிவர்றாராம். இப்படியிருந்தா, நான் கட்சிக்கும், கட்சிக்காரங்களுக்கும் என்னத்த செலவு செய்றதுன்னு, தெரியலையேன்னு சமீபத்துல நடந்த வெயிலூர் மாவட்டத்துல நடந்த கவர்மென்ட் விழாவுல புலம்பிதீர்த்தாராம் வீரமான விஐபி.. அதை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விழித்த அதிகாரிகளை பார்க்க தான் பாவமாக இருந்தது... தொண்டர்களுக்கு பிரியாணி வாங்கித் தர நம்ம பாக்கெட்ல கை வைத்துவிடுவாரோ என்று தலையை தொங்க விட்டு பைலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொரோனா நேரத்துலயும் இலை கட்சி பிரமுகர் அட்டூழியம் பண்ணாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி காங்கிரஸ் ஹவுஸ் ரோடு தெருவை சேர்ந்த கோழி கடை வியாபாரி குடும்பத்தினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் இலைக்கட்சியின் குடியாத்தம் நகராட்சியின் முன்னாள் தலையாம். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டை தனிமைப்படுத்த நகராட்சி ஊழியர்கள் போனாங்களாம். வீட்டில் இருந்த அந்த தலை தன் அடியாட்களை வைத்து எப்படி என் வீட்டில் நீங்கள் காலடி எடுத்து வைக்கலாம் என்று உருட்டி, மிரட்டி அனுப்பினாராம். இதுவே அட்ராசிட்டி... அதுக்கு பிறகு நடந்ததை சொல்றேன் கேளு... கொரோனா உறுதியானவர்கள் முதலில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கண்டிப்பாக 3 நாள் சிகிச்சை பெற வேண்டும்.

அதன் பிறகே அருகில் உள்ள அபிராமி கலைக் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றுவார்கள். ஆனால் குடியாத்தம் முன்னாள் தலையானவர், தன் செல்வாக்கை பயன்படுத்தி அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகாமல்... நேரடியாக கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற சேர்ந்துட்டாராம். சாதாரண மக்களுக்கு அரசு ஆஸ்பத்திரி... இலைக்கு ஸ்பெஷல் என்ட்ரி... இவர் என்ன விவிஐபியா என்று அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறாங்களாம்... ரூல்ஸ் அடிக்கடி இலை ஆட்சியில் மாறும்போல என்று புலம்பிக் கொண்டே சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்