SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் மக்களின் பேராதரவுடன் தேர்தல் கள வெற்றியை கலைஞரின் திருவடிகளில் காணிக்கையாக்குவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

2020-08-07@ 00:40:12

சென்னை: நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் மக்களின் பேராதரவுடன், தேர்தல் களத்தில் வெற்றியை உறுதிப்படுத்தி, அதனை  தலைவர் கலைஞரின் திருவடிகளில் காணிக்கையாக்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரை இயற்கையின் சதி பிரித்துஸ்ட் 7-ம் நாளுடன்(இன்று) இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து-அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து-நம் உதிரத்திலிருந்து-உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொருக்குள்ளும் தலைவர் கலைஞர் கலந்திருக்கிறார். திமுகவினர் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற உடன்பிறப்புகளும் அவர்களில் உண்டு. தமிழக மக்களின் எண்ணங்களில்  தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.   

அரசு கலைக்கல்லூரிகள் - பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என வலுவான - தரமான உயர்கல்விக் கட்டமைப்பு, 30-க்கும் மேற்பட்ட அணைகள்-தடுப்பணைகள், சென்னை அண்ணா மேம்பாலம் தொடங்கி கத்திப்பாரா மேம்பாலம் வரை தமிழகத்தின் வடகோடி முதல் தென்கோடி வரை பல பாலங்கள், அரசு அலுவலகங்களுக்கான புதிய கட்டிடங்கள், நெடுஞ்சாலை முதல் கிராமப்புற உட்புறச்சாலை வரையிலான  கட்டமைப்புகள், சிட்கோ - சிப்காட் எனத் தொழில் வளர்ச்சிக்கான பெரும் வாய்ப்புகள்-வலிமையான கூட்டுறவு அமைப்புகள் - ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்தும் வகையிலான உள்ளாட்சி நிர்வாகம் என 360 டிகிரியில் 21-ம் நூற்றாண்டுக்கானத் தமிழகத்தை முழு வடிவில் கட்டமைத்தவர் தலைவர் கலைஞர்.

இயற்கையின் சதி நம்மிடமிருந்து கலைஞரை பிரித்தபோது,  வங்கக் கடற்கரையில் அவருக்கு இடம் வழங்கவேண்டும் என்பது  தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக வெளிப்பட்டது. அதனைச் சட்டரீதியாகப் போராடிப் பெற்றது உங்களில் ஒருவனான என்னைத் தலைமைப் பொறுப்பில் கொண்டுள்ள திமுக. ‘‘இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி’’ என மக்களின் மனதில் நிலைத்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர், ஆட்சிப்பொறுப்பில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திய அதேவேளையில், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார். பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்குவதில் இந்திய அரசியலின் சூத்திரதாரியாக விளங்கிய தலைவர் கலைஞர், மாநில நலன் காப்பதில் பிற மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபட்டார்.

‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைேவற்றி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் குறித்த அரசியல் பாடத்தை டெல்லி ஆட்சியாளர்களுக்கு விளக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியாவின் பன்முகத்தன்மையும்-மதச்சார்பற்ற கொள்கையும்-சோசலிசப் பார்வையிலான நலத்திட்டங்களும் நாடெங்கும் பரவிட துணை நின்ற மூத்த அரசியல் தலைவராக விளங்கினார். இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மதநல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள்-உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது.

ஜனநாயகத்தைச்  சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும்-நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர். தன்னை ஆளாக்கிய அண்ணனின் அருகில், இரவலாகப் பெற்ற இதயத்தை-கொடுத்த வாக்குறுதியின்படி திருப்பியளித்து-நிரந்தர ஓய்வெடுக்கும் அந்த ஓய்வறியாச் சூரியன் தான் இப்போதும் நமக்கு ஒளியாகத் திகழ்கிறது! தனது தொண்டர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வளித்த தலைவர் கலைஞர் தான் இப்போதும் நம்மை வழிநடத்துகிறார்.

அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேறு ஆற்றல் ஏதுமின்றி களம் காண முடியும். இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும் போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம். தலைவர் கலைஞர் படைத்த சாதனைகளையும் அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம்.

ஜனநாயகத்தைப் பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம். நெருக்கடிகளுக்கு அஞ்சாமல்-திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில்  காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த  நினைவேந்தலாகும்! இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்