SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நயினார் அதிமுகவில் சேரப் போகிறாரா என்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-07@ 00:39:31

‘‘முதல்வர் இன்னைக்கு நெல்லைக்கு போறாரே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. அவரை வரவேற்க அதிமுகவினர் போட்டிபோட்டு ஆர்வம் காட்டுறாங்க. ஆனால் மகளிர் அணியில் சிலர்தான் வருத்தத்துல இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஏன் வருத்தமாம்..’’
‘‘முன்னாள் மேயராக இருப்பவர்களுக்கு வழக்கமா செயற்குழு பதவி வழங்குவாங்க. ஆனால் இந்த தடவை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. கட்சிக்காக பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றிருக்காங்க. அதனால எப்படியும் மகளிர் அணியில் பதவி கிடைக்கும்னு என்று எதிர்பார்த்தாராம். ஆனால் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். இதனால் எடப்பாடியிடம் முறையிட திட்டம் போட்டிருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொரோனா காலத்தில் பலர் வேலையே செய்யவில்லையாம். இதுகுறித்த பட்டியலும் முதல்வரிடம் இருக்குன்னு சொல்றாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்.. அதனால எங்கே முதல்வர் நமக்கு டோஸ் விடப்போறாரோ என்று ஒரு கும்பல் பயந்து நடுங்கிட்டு இருக்கு..’’
‘‘முதல்வர் நெல்லை வரும்போது எப்படியாவது நயினார் நாகேந்திரனை அதிமுகவுக்கு கொண்டு வரணும்னு கட்சிக்காரங்க தீவிரமா இருக்காங்களாமே..’’
‘‘அவங்க தீவிரமா இருந்து என்ன பிரயோஜனம்.. நயினார் ஆர்வம் காட்டலையே.. தனக்கு கொரோனானு சொல்லி தனிமைப்படுத்திக்கிட்டாராம். இதனால நெல்லை விசிட்டின்போது முதல்வர் முன்னிலையில் அவர் அதிமுகவில் சேருவது சந்தேகம்தானாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசு வக்கீல்கள் மத்தியில் ஏன் குழப்பம்... எதற்கு குழப்பம்... எல்லாம் சரியாக தானே போகுது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகளில் தமிழக அரசு சார்பில் முக்கிய வழக்குகளில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வந்தார். இந்நிலையில், சிக்கலான மற்றும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராவதற்காக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஒருவரை சிறப்பு வக்கீலாக நியமனம் செய்து கடந்த வாரம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு அட்வகேட் ஜெனரல் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தற்காலிக பதவிதான் என்றாலும் எதிர்ப்பு கிளம்பியதால், அடுத்த 2வது நாள் அந்த அரசாணையை மாற்றி அரசு ஒதுக்கீடு செய்யும் வழக்குகளில் மட்டும் சிறப்பு வக்கீல் ஆஜராவார் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. எதற்காக புதிதாக ஒரு வக்கீலை நியமனம் செய்ய அரசு முடிவு செய்தது என்று தெரியாமல் அரசு வக்கீல்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். விளக்கத்தை தெளிவாக அரசும் சம்பந்தப்பட்டர்களும் சொன்னால் தான் தெரியும்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகளுக்கு சில ஆண்டுகளாகவே நேரம் சரியில்லை போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ராமர்கோயில் பூமி பூஜையையொட்டி மாநிலம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு போலீசாரை வர வழைச்சிருந்தாங்களாம். அதே போல மாங்கனி மாநகரிலும் அன்று காலை 6 மணிக்கே அனைத்து போலீசாரும் பணிக்கு வரணும்னு வரவழைச்சாங்களாம். மாலை 6 மணிக்கு நம்மள ரிலீவ் பண்ணிடுவாங்கன்னு அவங்கல்லாம் காத்திருந்தாங்களாம். மேல் அதிகாரிங்ககிட்ட கேட்டிருக்கோம் என கூறியபடியே கீழ் மட்ட அதிகாரிகள் இழுத்துக்கிட்டே இருந்தாங்களாம். நைட் 10 மணிக்கு மேலே... திடீர்னு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்னு அனைத்து காக்கிகளையும் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் போலீஸ் உயரதிகாரிகள் வைச்சிருந்தாங்களாம்.

இதனால 50 வயதுக்கு மேல் உள்ள எஸ்.எஸ்.ஐ.க்களும், லேடி போலீசாரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகிட்டாங்களாம். இதுல இரவு பணியில் இருக்கும் போலீசார், குளிருக்கு ஜெர்க்கின் போடக்கூடாது, மழை கோட்டு போடக்கூடான்னு சில அதிகாரிகள் கண்டிசன் வேற போட்டாங்களாம். கொரோனா பரவும் நேரத்துல இப்படி ஓய்வே கொடுக்காம அதிகாரிகள் டார்ச்சர் செய்றாங்களே.. இந்த சோகத்த யாருக்கிட்ட போய் சொல்லன்னு இப்போ காக்கிகள் நொந்து போயிருக்காங்களாம்... அதை தான் சில காக்கிகள் நமக்கு நேரமே சரியில்லைனு புலம்பறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறுமி விஷயத்தில் கைதான இலை பிரமுகரின் ரகசிய நண்பருக்கும் போலீசார் குறி வைச்சு இருக்காங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட இலை கட்சியின் முன்னாள் மக்கள் பிரதிநிதி தற்போது பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் இருப்பதால் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை, சிகிச்சை தேவைப்படுவதாலும் பாளையங்கோட்டையில் இருந்தால் மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்கும் என்பதற்காக மாற்றிவிட்டார்களாம். இப்போது அவருடன் நெருங்கிய பழங்கிய நண்பர், ஒருவரையும் கட்டம் கட்டி வைத்துள்ளனர். அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவருக்கும் தற்போது காவல்துறையால் ரகசியமாக வலைவிரிக்கப்பட்டுள்ளதாம். அவரும் விரைவில் சிக்கி இரண்டு பேரும் சிறையில் இன்னும் திக் பிரண்டாக இருப்பார்கள் என்று சொல்லி சிரிக்கின்றனர் சிறையில் உள்ள சிலர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்