SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிபணியக்கூடாது

2020-08-05@ 04:59:33

மத்திய அரசின் 1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்தவரையில், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்கவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், 1965-ம் ஆண்டில் இந்தி மொழியை, அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய மத்திய அரசு நடவடிக்கை  மேற்கொண்டது. இதனை எதிர்த்து, தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்தது. பின்னர், பேரறிஞர் அண்ணா முதல்வரானதும் தமிழக சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று “தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய
இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது” என தீர்மானம் நிறைவேற்றினார்.

அதனைத்தொடர்ந்து, தமிழக பாடத்திட்டத்தில் இருந்து இந்தி மொழி நீக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு இருமொழி கொள்கையை செயல்படுத்துவதில் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய முதல்வர்கள் உறுதியாக இருந்தனர். நீண்ட, நெடிய தமிழ் வரலாற்றில், கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி மொழி பேசாத மாநில மக்கள் மீது, இந்தியை திணிக்கக்கூடாது என்பதில் தமிழகம் உறுதியாக உள்ளது. தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்றுள்ளது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தற்போதைய தமிழக அரசு, முதல்முறையாக, மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.க. தலைவர் கி.வீரமணி, சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், ச.ம.க. தலைவர் சரத்குமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக உள்ளது என்பதை உணர்த்தியுள்ளனர். ‘’தமிழ் மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’’என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல், தமிழக அரசு உறுதியுடன் இருக்கவேண்டும். மாநில உரிமைக்காக குரல் கொடுத்து போராடும் அரசாக, தமிழ் மக்களின் நலனை பேணும் அரசாக இருக்கவேண்டும். தமிழ்  மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது, அதற்காக எந்த விலையும் கொடுக்க தமிழகம் தயார் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். மாறாக, ‘’நீட் தேர்வு’’ விவகாரம்போல் அடிபணிந்து போய்விடக்கூடாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

  • rashya21

    ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

  • maha21

    மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

  • 21-09-2020

    21-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்