SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை அருகே ராஜராஜசோழன் கல்வெட்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

2020-08-04@ 14:47:47

மதுரை: மதுரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம், ராஜராஜசோழன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் முனீஸ்வரன், ஆய்வு மாணவர்கள் மணி, பழனிமுருகன், ஆர்வலர் நாகபாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர், மதுரை அருகே காரைக்கேணி தேவட்டி முனியாண்டி கோயில் அருகே செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் உதவியுடன் படிக்கப்பட்டதில், இவை முதலாம் ராஜராஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் எனத் தெரியவந்தது. அங்கிருந்து 500மீ தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது: சிறு சிறு துண்டுகளாய் சேதமடைந்த நிலையிலிருந்த தமிழ் கல்வெட்டுகளில் உள்ள சொற்களைக் கொண்டு, அவை கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு என்பதை அறிய முடிகிறது. சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் இருந்தன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருதுப் பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜசோழனின் 13ம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இதன் காலம் கி.பி.998.
கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்டுள்ள இதில், செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோயிலில் விளக்கு எரிக்கக் கொடுத்த கொடை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இக்கோவிலின் பெயர் ‘அர்ஹா’ எனத் தொடங்குகிறது.

அதன் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது.சமஸ்கிருதத்தில் உள்ள இதனை ‘அருகன்’ எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாகக் கருதலாம். இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது. இச்சிற்பம் மூன்றே கால் அடி உயரமும், இரண்டே கால் அடி அகலமும் உள்ளது. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல் சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டாகக் கருதலாம்.

மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி.9ம் நூற்றாண்டு முதல் கி.பி.13ம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறிய முடிகிறது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனக் கருதலாம். கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருஉண்ணாட்டூர் என்னும் ஊர், இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் சிதறிக் கிடக்கின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்