SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்சிக்கு ஆள் சேர்க்கும் குட்டு வெளியாகி தர்மசங்கடத்தில் சிக்கிய பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-04@ 02:19:02

‘‘கட்சிக்கு ஆள் சேர்க்கக் கூட தெரியாமல் சேர்த்துட்டு... முகத்தை தொங்க போட்ட இலை பிரமுகர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
மாங்கனி மாவட்டத்தில் இலைகட்சிக்காரங்க, கட்சிக்கு ஆள் பிடிக்கிறோம் என்று நடத்தும் கூத்து இருக்கே... சொன்னால் சிரிப்பு தான் வருது... ராமர்கோயில் இருக்கும் பகுதியில் இளைஞர்கள் சிலர், மனமுவந்து பாரம்பரிய கட்சியில் சேர்ந்தார்களாம். ஆனால், அந்த பகுதியில் உள்ள பார்மசி பிரமுகர் ஒருவர், அவர்களை வலுக்கட்டாயமாக இலை கட்சியில் இணைத்தாராம்.

ஒரே நாளில் கட்சி மாறிட்டீங்களே என்று பரபரப்பு தொற்றிக் கொள்ள பெரும் சர்ச்சையும் உருவானது.  ஆனால் அதற்கடுத்த நாளே, இளைஞர்கள் பாரம்பரிய கட்சியில் மீண்டும் வந்து இணைந்தார்களாம். அப்ப ஒரு நாளில் நடந்தது என்ன என்று இளைஞர்களிடம் கேட்டால், நாங்கள் அந்த கட்சிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை, இழுத்துச் செல்லப்பட்டோம் என்றார்களாம். இந்த குட்டு அம்பலமானதால், அப்செட்டான பார்மசி, கொஞ்ச நாளைக்கு கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலை வேண்டாம் என்று அடிப்பொடிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்... என்றார் விக்கியானந்தா.

‘‘ஆடிட் இல்லாததால் ஆட்டம் போடும் மக்கள் பிரதிநிதிகள் அப்படி என்ன தான் செய்யறாங்க...’’
‘‘பூட்டு மாவட்டம் வேடமான ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளில் முறையான கணக்கு இல்லாமல், பல லட்சத்தை கவுன்சிலர்கள் பலர், தங்களது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துறாங்க. கொரோனா பாதிப்பிற்காக செலவிடப்படும் தொகைக்கு ‘ஆடிட்டிங்’ ஏதும் இல்லையென உயரதிகாரிகள் தெரிவித்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாம்... எல்லா செலவையும் செய்து விட்டு, கொரோனா விழிப்புணர்வு செலவு என்று கணக்கு எழுதி வைத்து விடுகின்றனராம்...

பெயரளவுக்கு ஒப்புக்கு கிருமிநாசினி தெளிப்பது, முகாம் அமைக்க செலவு என இஷ்டத்துக்கு கணக்கு எழுதப்படுகிறதாம்... கேட்டால் கொரோனா காலத்துல நாங்களும் டெண்டர், கமிஷன், வருமானம் இல்லாம கஷ்டப்படுறோம்... அதை இப்படி தான் எடுத்து எங்கள் தேவையை சரி செய்ய முடியும்னு சொல்றாங்க... இதை கேட்ட சமூக ஆர்வலர்கள் சிலர், மாவட்ட நிர்வாகம் கடுமை காட்டி, ஊராட்சிகள், பேரூராட்சிகளில் செலவு கணக்கை, கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு கவனித்தால், சுருட்டப்பட்ட பல லட்சம் ரூபாய் வெளியில் வரும் என வேதனை தெரிவித்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சஸ்பெண்டே வாழ்க்கையா...’’ என்று சக சவுத் சைட் காக்கிகள் இன்ஸ்பெக்டர் ஒருவரை பார்த்து கிண்டலடிக்கிறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சென்னை புழலில் வீட்டை காலி செய்யும் விவகாரத்தில் கூலி தொழிலாளி ஒருவரை, புழல் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆனது 3வது தடவையாம். இவர் குமரி மாவட்டத்தில் தான் எஸ்.ஐ. மற்றும் இன்ஸ்பெக்டராக இருந்தார். கியூ பிராஞ்ச் எஸ்.ஐ. ஆக இருக்கும் சமயத்தில், கன்னியாகுமரி லாட்ஜில் சீட்டு விளையாட்டு கும்பலை பிடிக்க சென்ற இடத்தில் பணத்தை அமுக்கியதாக அப்போதைய கியூ பிராஞ்ச் உயரதிகாரி பரிந்துரையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் சஸ்பெண்ட் முடிந்து, கியூ பிராஞ்சில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு வந்தார். இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பூதப்பாண்டி, கருங்கல்லில் பணியில் இருந்தார். கருங்கல் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது, பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்துக் கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். என்ன கொடுமை சார் இது. இவரை விடாமல் துரத்தி அடிக்கிறதே என்று குமரி மாவட்டத்தில் உள்ள அவரது நண்பர்கள் சொல்றாங்க... இதுபோல சஸ்பெண்ட்டே வாழ்க்கையா வைச்சு இருக்கிறவங்களுக்கு கவுன்சலிங் தரணும் என்கிறார்கள் காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இரு தரப்பு மோதலால் கோயில் ஊழியர்கள் வருவாய் இல்லாமல் தவிக்கிறாங்களாமே, யாரும் நடவடிக்கை எடுக்கலையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை தொண்டாமுத்தூர் அருகே லிங்கனூரில் கருப்பராயன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. கோயில் தொடர்பாக பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. உண்டியல் வருவாயும் சரிந்து விட்டது. இங்கே பூசாரி, காவலாளி, தூய்மை பணியாளர்கள் என 8 பேர் வேலை செய்யறாங்க. இவர்களுக்கு, பரம்பரை அறங்காவலர் குழு சார்பில் மாதம் தோறும் சம்பளமாக மாதம் ரூ.44 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறாங்க. தற்போது, இக்கோயில் வங்கி கணக்கை இந்து சமய அறநிலைய துறையினர் முடக்கி வைத்துள்ளனர். இதனால், எட்டு ஊழியர்களும் சம்பளம் இல்லாமல் தவிக்கிறாங்க. கொரோனா தாக்கத்தைவிட அதிகார மோதலால்தான் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என ஊழியர்கள் புலம்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் அதிகாரியின் ஆட்டத்தை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் அம்மன் பெயர் கொண்டவர் துணை தாசில்தாராக தற்போது இருக்காரு. இவரின் ஆட்டத்தால் மூத்த தாசில்தார்கள் எல்லாம் அரண்டு போய் உள்ளனர். காரணம் இவர் அதே அலுவலகத்தில் தலைமையிடத்தில் உள்ள இரண்டு எழுத்து பெயர் கொண்ட பெண் அதிகாரியை கையில் போட்டு கொண்டு, தனது இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு வருகிறாராம். தாசில்தார்கள், துணை தாசில்தார்களுக்கு டிரான்ஸ்பர் வேண்டுமா.. என்னிடத்தில் கேளுங்க என போன் போட்டு சொல்லி வருகிறாராம். மேலும் நான் கொடுக்கும் லிஸ்ட்டில்தான் கலெக்டரே கையெழுத்து போடுவார் என பகிரங்கமாக தெரிவித்து வருகிறாராம். யாருக்கு டிரான்ஸ்பர் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து வருவது மற்ற அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது எங்கே போய் முடியப்போகிறதோ என்று புலம்புகிறார்கள் மூத்த அதிகாரிகள்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்