SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீழ்த்த முடியும்

2020-08-04@ 00:08:28

போலிகளை தயாரிப்பதில் முதலிடம், மர்ம தேசம் ஆகியவற்றிற்கு பெயர் போனது சீனா. தனது ராணுவம் மூலம் பிற நாடுகளின் எல்லைகளை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. சீனாவுக்கு பதிலடி தருவதற்கு, சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லை பிரச்னையை தொடர்ந்து, உத்தரகாண்டில் உள்ள இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியான லிப்புலே பாஸ் அருகே, சீன ராணுவம் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் விஷயத்தில் இந்தியாவின் முழு கவனமும் இருக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்தினால், எல்லையை கைப்பற்றி விடலாம் என சீனா நினைத்திருக்கலாம்.

போர் விதிமுறைகளை மீறி லடாக்கில் சீனா நடந்து கொண்ட விதத்தை கருத்தில் கொண்டு, உத்தரகாண்டில் முதல் அடியை நாம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு போர் உதவாது என்றாலும், சீனாவுக்கு தற்போதைக்கு பாடம் கற்பிக்க, இதை தவிர வேறு வழியில்லை. அமெரிக்கா உள்பட பல நாடுகள் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக, உளவு பார்த்ததாக சீனா மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. சீனா தனித்து விடப்படும் நிலையில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இந்தியா ராஜதந்திர முறையில் கையாள வேண்டியது கட்டாயம். சீனாவை பொருளாதார ரீதியாக வீழ்த்தும் முயற்சியில் இந்தியா இறங்க வேண்டும்.

இந்தியாவில் சீனப்பொருட்களை தடை செய்வது பெயரளவுக்கு இருக்கக்கூடாது. நாம் ஒவ்வொருவரும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். இந்தியாவுக்கு வல்லரசு நாடுகள் உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளன. சீனாவில் இருந்து வெளியேறும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், இந்தியாவில் அமைதியற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. நேபாளம் மற்றும் பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடுவது உள்ளிட்ட செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. எல்லையில் போர் பதற்ற சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் சீனா தீவிரம் காட்டுகிறது. எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.   

எல்லையில் சீனாவுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். அந்த அடி நமது அண்டை நாடுகளுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். போரை சீனா விரும்பினாலும், அதற்கும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. சீனா மீது ரஷ்யாவுக்கும் கசப்பு ஏற்பட்டுள்ளது. சீனா-அமெரிக்கா இடையே ‘பனிப்போர்’ நடந்து வருகிறது. உலக அரங்கில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் சீனா, போர் அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக் கொண்டு வாலாட்டி வருகிறது. எல்லையில் தக்க பதிலடி கொடுத்து, பொருளாதாரரீதியாக சீனாவை இந்தியாவால் மட்டுமே வீழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அதிரடியாக இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்