SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவி கிடைக்காததால் கொரோனா ஆய்வை அம்போ என்று விட்டுவிட்ட அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-03@ 02:35:51

‘‘பின்வாசல் வழியாக பதவிக்கு வந்தவர்...நேர்மையான வழியில வந்தவங்கள மிரட்டுறாராமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியின் உறுப்பு கல்லூரி கவுரவ விரிவுரையாளருங்களுக்கு லாக்டவுன் காலத்துல சம்பளம் கொடுக்கல. இந்த தகவல் வெளியே வர முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், யுனிவர்சிட்டி டீச்சர் அசோசியேசனும், கண்டன அறிக்கை வெளியிட்டு, சம்பளத்த உடனே கொடுங்கனு வலியுறுத்துனாங்க. இதனால அதிர்ச்சியடைஞ்ச நிர்வாகம் கோபத்தின் உச்சிக்கே போயிட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூகுள் மீட் மூலமா, திடீர் மீட்டிங் நடந்துச்சாம்.

அதுல கவுரவ விரிவுரையாளர்கள வறுத்தெடுத்த ஒரு கல்லூரி பிரின்சிபல், நான் பேசுறத ரெக்கார்ட் பண்ண கூடாதுனு டோஸ் விட்டாராம். அது மட்டுமில்லாம, சம்பள விவகாரத்த எதுக்கு வெளியில சொன்னீங்கனு ஒருமையில மிரட்டல் விடுத்து, ஒருவாரத்துல உங்க மேல நடவடிக்கை எடுக்குறேன்னு பாதியிலேயே மீட்டிங்ல இருந்து வெளியே போக சொல்லிட்டாராம். அவரே பின்வாசல் வழியாக தான் வந்து நியமனமே பெற்றாராம். இதுல நேர்மையாக உழைச்சதுக்கு சம்பளம் கேட்ட கவுரவ விரிவுரையாளருங்களை மிரட்டுறது என்ன நியாயம் என வேதனையோடு இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்காநகர ஆவினில் வசூல் வேட்டை நடத்தும் முன்னாள் மக்கள் பிரதிநிதி பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுரை ஆவின் தலைவர் பதவியை இழந்த முன்னாள் மக்கள் பிரதிநிதி ஒருவர், பழைய அதிகாரத்தை பயன்படுத்தி, தனது மகன் மூலம் ஆவின் நிறுவன ஒப்பந்தகாரர்கள், பால் முகவர்களிடம் கமிஷன் கேட்டு தீவிர வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். இந்த கமிஷன் வசூல் வேட்டையால், ஆவினின் டெண்டரை எடுக்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். பல ஒப்பந்தங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி, பதவிக்கு வராமலேயே இப்படி வசூல் வேட்டை என்றால், பதவிக்கு வந்தால் ஆவினையே தன் மகன் பெயருக்கு மாற்றி எழுதினாலும் எழுதிவிடுவார் என்று சிரித்து கொண்டே சொல்கின்றனர் ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்ட ரவுடிகளுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி போல....’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘வீராணம் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தாங்க... அப்போது அந்த வழியாக வந்த பம்பாய் பெயரை கொண்ட ரவுடி ஒருவர், எஸ்.ஐயிடம் சென்று, சார் நல்லா இருக்கீங்களா என்று தில்லாக சென்று நலம் விசாரித்தாராம். உன்னை யாரென்றே தெரியாதேப்பா, நீ யாருன்னு? அந்த ஏரியாவுக்கு புதுசா வந்த எஸ்.ஐ. கேட்டிருக்காரு.. இதற்கு பதில் கொடுத்த ரவுடி, சாத்தான்குளம் போல ஆகிட போகுது, தலை பத்திரம்னு டயலாக் அடிச்சுட்டு வேகமாக போயிட்டானாம். இதனால அதிர்ச்சியடைந்த எஸ்.ஐ., பக்கத்துல இருந்த ஏட்டுக்கிட்ட விசாரிச்சாராம். அப்போது தான் சிரிச்சிக்கிட்டே மிரட்டிட்டு போனது ரவுடின்னு தெரிஞ்சுதாம். நாலு பேரு பண்ணின வேலையால, நேர்மையாக இருக்கிற போலீசை கூட ரவுடிப்பயலே மிரட்டிட்டு போற அளவுக்கு ஆயிடிச்சு பாருன்னு தலையில அடிச்சிக்கிட்டாராம் எஸ்.ஐ...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வங்கியை யாரை கேட்டு வீட்டுக்கு மாத்தினாங்கனு விழுப்புரம் மக்கள் ேகட்டது உங்கள் காதுக்கு வந்ததா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியில் தங்கமானவர் பொறுப்பேற்றதிலிருந்து, இயக்குநர்கள், அதிகாரிகள் 3 கோஷ்டியா செயல்பட்டதால நிர்வாகம் எழுந்திருக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாம். தற்போது வீட்டு அடமானக்கடன், வணிகக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களை தலைவர் தனியா இன்டர்வ்யூ நடத்த வீட்டிற்கு அழைத்தது குறித்த பிரச்னை பூகம்பமா வெடிச்சிருக்காம். கடைசியில், வங்கியின் நிர்வாகக் குழு இயக்குநருக்கு சொந்தமான பெண் ஒருவர் அடமானக் கடன் கேட்டுச் சென்றபோது, விண்ணப்பங்களை பரிசீலனை செய்த மேலாளர், தலைவர வீட்டுல போய் பாருமான்னு அந்த பெண்ணை அனுப்பி வச்சிருக்காராம்.

அந்தம்மா இயக்குநரிடம் முறையிட, தலைவரை பிடிச்சி லெஃப்ட் அண்ட் ரைட்டு வாங்கிட்டாராம். கொரோனா அச்சத்தால வீட்டிலேயே வங்கிப் பணிய பார்ப்பதாகவும், கடன் வாங்க தகுதி உள்ளதா என்பதை ஆய்வு செய்யவே வீட்டிற்கு அழைச்சதாகவும் விளக்கம் கொடுத்திருக்காராம். மற்றொரு பக்கம், புதுசா பொறுப்பேற்ற வங்கியின் லேடி அதிகாரியிடமும், தலைவரின் முட்டல் மோதல் போக்கு புதுசா ஆரம்பிச்சிருக்காம். இது எங்கே போய் முடியப்போகுதோ என்று ஊழியர்கள் வேதனையில் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பாலிடிக்ஸ் பவர் இல்லாததால கொரோனா ஆய்வுக்கு முழுக்கு போட்டாராமே அமைச்சரு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சென்னை ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் கொரோனா பணி மேற்பார்வையாளரா அமைச்சர் ஒருவரை நியமிச்சாங்க. வாரத்தில் 4 நாள் சுத்தி சுத்தி பம்பரமா வேலை செஞ்சி அந்த பகுதியில் நோய்த்தொற்றை குறைச்சிட்டாரு... ஆனா போன வாரம் ஒருநாள் கூட அந்த பக்கம் போகலையாம். ஆவடி பகுதியில தற்போது அமைச்சரா இருக்கறதுனால மாவட்ட செயலாளர் பொறுப்பை ரொம்பவே எதிர்பார்த்தார். அந்தப் பகுதியில் இருக்கிற ஆளுங்கட்சியை சேர்ந்த 2 பேர் இவர இதற்கு மேல வளர்த்து விட்டால் நம்ப வளர முடியாதுன்னு நினைத்து மேலிடத்தில் சொல்லி மாவட்ட செயலாளர் பதவி தரக்கூடாதுன்னு ரொம்பவே அடம் பிடிச்சாங்களாம்.

அதனால மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு பதிலா கட்சியில வேற பொறுப்பு கொடுத்து சமாதானம் செய்து இருக்கிறாங்க.. அதுமட்டுமில்லாம, மாவட்ட செயலாளர் பொறுப்பு வெளியிடுவதற்கு முன்பு அமைச்சரை அழைத்து முக்கிய விவிஐபி ஒருவர்.. உங்களுக்கு லோக்கல் பாலிடிக்ஸ் சரிபட்டு வராது, டெல்லியை நீங்க பார்த்துக்குங்க.. இவங்ககிட்ட மாட்டிக்காதீங்க.. அப்படின்னு அட்வைஸ் சொல்லியிருக்காரு.. இதனால இவ்வளவு வேலை செய்தும் நமக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கலையேன்னு அமைச்சர் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம்.. இதனால போன வாரம் புல்லா தண்டையார்பேட்டை மண்டல ஆய்வு பணிக்கு போகவே இல்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்