SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும் : தங்கம் தென்னரசு, எம்எல்ஏ, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

2020-08-03@ 01:41:29

திராவிட ஆட்சியில் தமிழகத்தை பொறுத்தவரை கல்வித்துறையில், முன்னேறிய கல்வி கட்டமைப்பு உருவானது. இந்த கட்டமைப்பை முழுமையாக சீர்குலைக்க நடக்கும் முயற்சியே புதிய கல்விக்கொள்கையாகும். இதனால் தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை விகிதம் பெருமளவு குறையும். இடைநிற்றல் அதிகரிக்கும். காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி காலம் வரை, பட்டிதொட்டியெங்கும் உருவாக்கப்பட்ட துவக்கப்பள்ளியை இழுத்து மூடி விட்டு, பள்ளி வளாகங்கள் என்ற பெயரில், தமிழக மாணவர்களின் கல்வி பெறும் வாய்ப்புகளுக்கு சாவு மணி அடிக்க கூடிய திட்டமாக இது உள்ளது.

குழந்தை பருவத்தில் நல்ல ஊட்டச்சத்து கிடைக்க வேண்டிய பருவத்தில், அவர்களை முறைசார்ந்த தொடக்கக்கல்விக்கு உள்ளாக்குவதும், 3,5ம் வகுப்புகளில் அரசு தேர்வுகள் நடத்த வேண்டும் என தெரிவிப்பதும் குழந்தைகள் மீதான மன அழுத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கும். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட குலக்கல்வி முறையை, மீண்டும் பள்ளிக்கல்வி முறையோடு இணைத்து உருவாக்க முயற்சிப்பது திட்டமிட்ட சதி ஆகும்.
சமஸ்கிருத மொழிக்கு மற்ற எல்லா இந்திய மொழிகளைக் காட்டிலும் முக்கியத்துவம் அளிப்பது, மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய பாஜ அரசின் உள்நோக்கத்தை நாட்டிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறது.

அண்ணா காலத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்கும் இருமொழி கொள்கைக்கு எதிரான இந்த புதிய கல்வி கொள்கையை  ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தை பல்கலைக் கழகங்களோடு  இணைத்துவிட எடுக்கப்படும் இந்த முயற்சி, அதனுடைய தன்னாட்சி அமைப்பை சீர்குலைப்பதுடன், தமிழ்மொழிக்கு கிடைத்திருக்கும் செம்மொழி பெருமையை சிறுமைப்படுத்தும்.
 உயர்கல்வியைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வி முடித்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைப்பது அவர்களுடைய உயர்கல்வி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும். ஐந்தாயிரம் மாணவர்களுக்கு மேலுள்ள கல்லூரிகள் மட்டுமே இனி செயல்பட முடியும் என்ற நிலைமை கிராமப்புறங்களில் இயங்கி வரும் கல்லூரிகளை மூட வழி வகை செய்துவிடும்.

பல்கலைக்கழகங்களை பொறுத்தமட்டில் அனைத்து அதிகாரங்களும் மாநில அரசிடம் இருந்து பறிக்கப்பட்டு, இனி அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் குவிக்கப்படும். இந்தியா முழுவதற்கும் ஒரே பாடத்திட்டம் என்பது ஒற்றை கலாச்சார முறைக்கு வழிவகுத்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் முயற்சியாகும். தமிழகத்தில் உயிர் நாடியாக விளங்கக்கூடிய இட ஒதுக்கீடு குறித்து திட்டமிட்டு இந்த புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படாதது வகுப்புரிமை இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசின் எதிரான நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கும் ஒரு துரோக நடவடிக்கை. குழந்தை பருவத்தில் நல்ல ஊட்டச்சத்து கிடைக்க வேண்டிய பருவத்தில், அவர்களை முறைசார்ந்த தொடக்கக்கல்விக்கு உள்ளாக்குவதும், 3,5ம் வகுப்புகளில் அரசு தேர்வுகள் நடத்த வேண்டும் என தெரிவிப்பதும் குழந்தைகள் மீதான மன அழுத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.

* புதிய கொள்கையின் பாதை முழுவதும் தவறாக அமைக்கப்பட்டுள்ளது:  வே.வசந்தி தேவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்
இந்தக் கொள்கையை சில வார்த்தைகளில் சுருங்கச் சொல்வதென்றால், மாநில உரிமைகளுக்கு மரண அடி, தங்கு தடையற்ற தனியார்மயம், இந்துத்துவ ஆக்கிரமிப்புக்கு அகலத் திறக்கும் கதவுகள். கல்வியில் 191 நாடுகளில் இந்தியா 145வது ஸ்தானத்தில் தாழ்வுற்றுக் கிடக்கிறது. இன்றைய இந்திய கல்வியில் பெரும் மாற்றங்கள் தேவை என்பது பல காலமாக உணர்ந்து, பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட தேசிய வேதனை தான். ஆனால், இந்தக் கல்விக் கொள்கை அதற்குத் தீர்வாகத் தோன்றி இருக்கிறதா அல்லது பூதமாகக் கிணற்றிலிருந்து புறப்பட்டிருக்கிறதா என்பது தான் நம் முன் நிற்கும் கேள்வி. பெரும் கனவுகளைக் கடை விரிக்கிறது இந்தக் கொள்கை. ஆனால், அவற்றை எட்டுவதற்கான பாதை அமைக்க முழுவதும் தவறுகிறது. பாதை என்று காட்டப்படுபவை பாதாளத்தில் தள்ளுபவையாக இருக்கின்றன. அல்லது வெறும் கையில் முழம் போடுபவையாக உள்ளன.

பல தேசிய இனங்களின் இணைப்பான, மகத்தான பன்முகச் செழுமை கொண்ட, இந்திய நாட்டிற்கு ஒரே கல்விக் கொள்கை என்பது ஏற்றுக் கொள்ளவே இயலாதது. உலகின் எந்த வளர்ந்த நாட்டிலும் நாடு முழுவதற்குமான மத்தியப்படுத்தும் ஒரே கல்விக் கொள்கை என்பது கிடையாது. சொல்லப்போனால், கல்வி தான் மிக அதிகமாக அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நிர்வாகப் பிரிவு. இந்தக் கல்விக் கொள்கையோ மாநிலங்களின் அதிகாரங்களை முற்றிலும் பறிக்கும், ஏற்றுக் கொள்ளவே முடியாத துஷ்பிரயோகமான அதிகாரக் குவிப்பு. முன் பருவக் கல்வியிலிருந்து, பல்கலைக் கழகம் வரை அனைத்து மட்டக் கல்வியும் மத்திய அரசினால் மைக்ரோ மேனேஜ் செய்யப்படும் ஜனநாயக மறுப்பான சர்வாதிகாரம். இனி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்றால், அது மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இயலும்.

இளம் கலை (பி.ஏ), இளம் அறிவியல் (பி.எஸ்.சி), இளம் வணிகவியல் (பி.காம்) எதுவாயினும், அல்லது தொழிற்கல்வியாயினும் நீட் போன்ற, நாடு முழுவதற்கும் ஒரே தேர்வாக மத்திய அரசின் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இடம் பெற முடியும். அப்படி என்றால், மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டத்தின் படி நடத்தும் பள்ளி இறுதித் தேர்வுகள் தேவையற்றவை, பயனற்றவை. இந்தக் கொள்கை தங்கு தடையற்ற தனியார்மயத்திற்கு அனைத்துக் கதவுகளையும் திறந்து விடுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அரசின் பங்கையும், அதிகாரங்களையும், வலிமைப்படுத்துவதற்கு மாறாக, அவற்றிற்கு முழு சுதந்திரமும், அதிகாரங்களும் அளிக்கப்படுகின்றன. கட்டண நிர்ணயத்திலிருந்து, பட்டங்கள் அளிப்பது வரை அனைத்திலும் எந்தக் கேள்வியும் கேட்கப்படமாட்டாது. கல்வி முழுவதும் வணிகப் பண்டமாகி, சந்தையில் கூவி விற்கப்படப் போகிறது. ஏற்றத் தாழ்வுகளும், நவீன ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் தீவிரமடையப் போகின்றன.

ஒரு பள்ளிக்கு இலக்கணமான தேவைகள் வலியுறுத்தப்பட மாட்டாது. அதாவது, ஒரு பள்ளி நிறுவுவதற்கும், நடத்துவதற்கும் எந்த வரையறைகளும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பள்ளியை நிறுவலாம், நடத்தலாம்.  மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்படும். மூன்றாவது மொழி கற்க வேண்டுமென்றால், அது இந்தி ஆகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற பெரும்பான்மை வாதத்தைப் புகுத்தும் முயற்சி தலைதூக்குகிறது. சமஸ்கிருதத்திற்கு அனைத்து ஆதரவும் தரப்படும். இந்திய தேசியம், இந்திய அடையாளம் என்பது இந்து மேல் சாதி அடையாளம் என்பது தெளிவாகிறது.

இந்தியக் கல்விப் பாரம்பரியம் என்பது வர்ணாஸ்ரமத்தில் ஊறிய, சாதியம்-தீண்டாமை-ஆண் ஆதிக்கத்தில் அஸ்திவாரம் கொண்ட, பெரும்பாலான மக்களைப் புறம் தள்ளி, கல்வி மறுத்த, மனித மாண்பையும், கண்ணியத்தையும் மறுத்த பாரம்பரியம். இந்திய அரசியல் சாசன விழுமியங்களான, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் ஒளியில் உருவெடுக்கும் நவீன இந்தியாவில் பண்டைக் கல்விப் பாரம்பரியத்திற்கு எந்த இடமுமில்லை. இந்திய அரசியல் சாசன விழுமியங்களான, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் ஒளியில் உருவெடுக்கும் நவீன இந்தியாவில் பண்டைக் கல்விப் பாரம்பரியத்திற்கு எந்த இடமுமில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்