SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவை... மறுபரிசீலனை

2020-08-03@ 01:39:41

131 நாட்களைக் கடந்தும் தீராத கொரோனா நோய். ஊரடங்கு தவிர்த்து அதற்கு வேறு மருந்தே இல்லையா என்ற குரல் தமிழகம் முழுவதும் ஆக்ரோஷமாக ஓங்கி ஒலிக்கிறது. மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை, அடித்தட்டு வர்க்கத்தினரின் வலி அறியாத மேல்தட்டு மக்கள் தவிர்த்து மற்ற எவரும் ஆதரிக்கவில்லை. நடுத்தர, அடித்தட்டு மக்கள் கோடிக்கணக்கானோர் தொழில் செய்யவும், வருமானம் ஈட்டவும் பொதுப்போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கின்றனர். சிறு, குறு தொழிலாளர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகள், வெளியூர்களில் பணிபுரியும் தனியார் ஊழியர்கள்... என கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கனவை தகர்த்திருக்கிறது ஊரடங்கு நீட்டிப்பு என்ற ஒற்றை அறிவிப்பு.

மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிப்பு வெளியானபோது இருந்த மக்களின் மனநிலைக்கும், தற்போதைய நீட்டிப்பு அறிவிப்பை எதிர்கொள்ளும் அவர்களது மனநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஊரடங்கை நீட்டித்துக் கொண்டு செல்வது மட்டுமே கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்து விடுமா? சரி. ஊரடங்கு நீட்டிப்பால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை வாலறுந்த பட்டம் போல ஊசலாடுகிறதே... அதற்கு என்ன தீர்வு? குற்றம் செய்து விட்டு சிறைக்கு வருபவருக்குக் கூட மூன்று வேளை உணவும், உடையும் உத்தரவாதமாக கிடைக்கும் போது, சூழ்நிலைக் கைதிகளாக, ஊரடங்குச் சிறையில் பரிதவிக்கும் கோடிக்கணக்கான அடித்தட்டு அப்பாவி மக்களுக்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? பக்கத்து மாநில முதல்வர், ‘ஊரடங்கு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. மாநில வளர்ச்சியே முக்கியம்’ என்று சூளுரைக்கும் போது, நமது மாநிலம் மட்டும், எந்த குணமும் தராத அதே பழைய மருந்தை மீண்டும், மீண்டும் கையில் எடுப்பது எதற்காக?

மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசே அறிவித்து விட்டப் பிறகும், இ-பாஸ் நடைமுறையை பிடிவாதமாக மீண்டும் தொடர்வது அப்பாவி மக்களின் வலியை மேலும் அதிகரிக்கிறது. வயதானவர்கள், நோயாளிகள் மருத்துவச் சிகிச்சை பெற பக்கத்து மாவட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை. மிகவும் ெநருக்கமானவர்களது துக்க நிகழ்வுகளில் கூட பங்கேற்க முடியவில்லை. இவர்களது பயணங்களை தடுத்து நிறுத்துகிறது இ-பாஸ் நடைமுறை. நியாயமான மருத்துவக் காரணங்களுக்காக, அரசு கேட்கும் அத்தனை ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தும் கூட இ-பாஸ் நிராகரிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

அடித்தட்டு மக்களுக்கு நிராகரிக்கப்படும் இ-பாஸ்கள், அதிகார தொடர்பு இருப்பவர்களுக்கு எந்தச் சிரமமுமின்றி எளிதாகக் கிடைத்து விடுகிறது. லாபநோக்கத்தில் இ-பாஸ் ‘வியாபாரம்’ ஜோராக நடப்பதாக வரும் தகவல்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன. கொரோனாவை விடவும் வறுமை மிகக் கொடிய கிருமி. அந்த கொடும் கிருமி இப்போது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. உழைப்பு ஒன்றே அந்தக் கிருமியை அழிக்கும் மருந்து. வரலாற்றின் நெடிய பக்கங்களில் கொத்துக் கொத்தாக பல கோடி மரணங்களை வறுமை என்கிற அந்த கோர கிருமி பதிவு செய்திருக்கிறது. கொரோனாவை அழிப்பதில் காட்டும் முக்கியத்துவத்தை விடவும்... வறுமை என்ற வாழ்வின் தடமழிக்கும் கொடிய கிருமியை அழிப்பதில் தமிழக அரசு முனைப்புக் காட்டவேண்டும் என்பதே உழைக்கும் மக்களின் வலியுறுத்தல். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் தொலைந்து போன இயல்பு வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுத்துக் கொடுக்க, ஊரடங்கு நீட்டிப்பு என்ற தனது அறிவிப்பின் மீது தமிழக அரசு மறுபரிசீலனை செய்வது அவசியம்!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்