SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மீண்டும் ஒரு கட்டணக் கொள்ளை 25 நாள் கொரோனா சிகிச்சைக்குஎம்ஜிஎம் மருத்துவமனை 15 லட்சம் வசூல்: சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

2020-08-02@ 04:02:41

சென்னை: சூளைமேடு எம்ஜிஎம் மருத்துவமனையில் 25 நாள் கொரோனா சிகிச்சைக்கு 15 லட்சத்து 29 ஆயிரத்து 109 கட்டணம் வசூல் செய்வதாக பாதிக்கப்பட்டவரின் உறவினர் குற்றம் சாட்டியுள்ளார்.  உலகமே கொரோனா வைரசிலிருந்து மீண்டு வர போராடும் வேளையில், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கொரோனா சிகிச்சை அளிக்க கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு  நாள் அதிகரித்து வந்த நிலையில் ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளும்  சிகிச்சை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகம்  முழுவதும் 257 மருத்துவமனைகளிலும், சென்னையில் 87 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் போதிய படுக்கை வசதி இல்லாமல் இயங்குவதால், அதை பயன்படுத்தி லாப நோக்குடன் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் கொரோனா சோதனைக்கு ₹3000 கட்டணமும், சிகிச்சைக்கு தினமும் மருத்துவமனைகளின் தரத்தின் அடிப்படையில் 5 ஆயிரம் முதல் 7,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற 15,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சராசரியாக பேக்கேஜ் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு, கோவிட் 19 என முடிவு வந்து விட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். நோயாளியின் நிலைமையைப் பொறுத்து 10 நாட்களில் கூட டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். சாதாரண படுக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ஐசியு பிரிவாக இருந்தால் கூடுதலாக கட்டணம் இருக்கும். முன்பணமே ஒரு லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். பிபிஇ கிட்டுகளுக்கு நாளொன்றுக்கு  10,000 கட்ட வேண்டியிருக்கும். காப்பீட்டின் அடிப்படையில் சிகிச்சை பெற்றாலும், பிபிஇ கிட் போன்ற மருத்துவ பொருட்கள் காப்பீட்டின் கீழ் வராததால் எப்படியும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை கட்ட வேண்டியிருக்கும் என்று தனியார் மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது.

இது தவிர வெண்டிலேட்டருக்கு நாளொன்று 1.25 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அப்படி பார்த்தால் 14 நாட்களுக்கும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொரோனா சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரிய வருகிறது. அறை வாடகை, வெண்டிலேட்டர், பிபிஇ கிட் என ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலித்து கார்ப்பரேட் மருத்துவமனைகள் தொற்று நோயைப் பயன்படுத்திக் கொள்ளையடித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக, புகார்கள் எழுந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிப்புடைய ஒருவரிடம் மருத்துவர் ஆலோசனை கட்டணத்தை தவிர்த்து நாள் ஒன்றுக்கு 23,182 ரூபாய் கட்டணம் வசூல் செய்யலாம் எனவும் மருந்து, படுக்கை கட்டணம், அறை வாடகை என அனைத்தும் சேர்த்து 10 நாட்களுக்கு 2,31,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களிடம் நாள் ஒன்றுக்கு 43,141 ரூபாயும், 17 நாட்களுக்கு 4,31,000 ரூபாயும் வசூல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக நாள் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம் எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

எனினும், பரிந்துரைக்கப்பட்ட கட்டணமும் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்த பட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைக்களுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக்கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு-1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் சில மருத்துவமனைகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக  தொடர்ந்து குற்றச்சாட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத்தான் 25 நாளுக்கு 15 லட்சம் வசூலித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். இது குறித்து சிகிச்சை பெற்று வந்தவரின் மகள் கூறியதாவது: கடந்த ஜூன் 20ம் தேதி என்னுடைய அம்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது உடன் யாரும்  தங்க கூடாது என்று கூறியதையடுத்து அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டோம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து உங்களுடைய அம்மாவிற்கு பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஐசியூ பிரிவில் அனுமதித்துள்ளோம் என்று கூறினர். அதன்பிறகு நாங்கள் அவர்களை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை. பின்னர் ஒருவாரம் கழித்து நன்றாக இருக்கிறார், அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற வேண்டும் என்றால் பணம் செலுத்தினால் தான் மாற்றுவோம் இல்லையென்றால் ஐசியூ பிரிவில் தான் வைத்திருப்போம். ஐசியுவில் தொடர்ந்து வைத்திருக்க கட்டணம் அதிகமாகும் என்று கூறியதோடு, எவ்வளவு கட்டணம் என்று கூறாமல் போனில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று எவ்வளவு கட்டணம் என்று கேட்ட போது 9 லட்சம் என்று கூறினர். அவ்வளவு பணம் இப்போது இல்லை என்று கூறினேன். மேலும் சாதாரண வார்டுக்கு மாற்றுங்கள் ரெடி பண்ணி கட்டி விடுகிறேன் என்று கூறினேன். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது பணத்தை கட்டினால் சாதாரண வார்டுக்கு மாற்றுவோம் இல்லையென்றால் அவருக்கு என்ன ஆனால் எங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக கூறினர்.  இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தேன் அவர்களும் வந்து இது மருத்துவமனை சம்பந்தமான விவகாரம் மருத்துவமனைக்கு என்ன ரூல்ஸ் உள்ளதோ? அதை தான் கூறுகின்றனர் எங்களுக்கு தெரியாது என்று கூறி சென்று விட்டனர். இந்நிலையில் 4லட்சத்தை கட்டிவிட்டு மீதியை விரைவில் கட்டுவதாக கூறினேன்.

அதன் பிறகு ஜூலை 20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது எவ்வளவு கட்டணம் என்று கேட்ட போது 17 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவ்வளவு பணம் இல்லாததால் அவர்களிடம் கெஞ்சி மன்றாடியதையடுத்து 1.30 லட்சம் வரை குறைத்தனர். அதன் பிறகு எங்களுடைய உறவினர்களிடம் கடன் வாங்கி ₹15 லட்சத்து 29 ஆயிரத்து 109 கட்டிய பிறகு தான் எங்களுடன் என்னுடைய அம்மாவை அனுப்பி வைத்தனர். எனவே இதுபோன்று கொரோனா நோயாளிகளை வைத்து பணம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இரு நாட்களுக்கு முன்னர் 12 லட்சம் வாங்கிய பீவெல் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது. தற்போது 15 லட்சம் வசூலித்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சில விஐபிக்கள் மறைமுகமாக பினாமிகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவுமனை நிர்வாகிகளிடம் விளக்கம் பெற முயன்றபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்