SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூட்டு மாவட்டத்துல அதிகார சாவியை கைப்பற்ற விஸ்வாசம் களத்தில் இறங்கி இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-29@ 00:26:07

‘‘பூட்டு மாவட்டத்துல கோஷ்டி மோதல் உச்ச கட்டத்துல இருக்காமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தில் அதிமுக இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, தற்போது அமைப்புச் செயலாளராக உள்ள சீனிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும், முன்னாள் மந்திரி  விசுவாசத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக இதுவரை இருந்தவரை கட்சியின் அமைப்பு செயலாளராக மாற்றிட்டாங்க. இதனால பூட்டு மாவட்டத்துல இப்போது 3 அமைப்பு செயலாளர்கள் உள்ளனர். கடந்த பல மாதங்களாக கட்சிக்குள் யார் பெரியவர் என்று நடந்து வந்த புகைச்சல் தற்போது பூதாகரமாகியுள்ளதாம்.

விஸ்வாசத்துக்கு 4 சட்டமன்ற தொகுதிகளை வாரி தந்துள்ள தலைமை, அவரது பலத்த சிபாரிசால் சீனியால் புறக்கணிக்கப்பட்டு வந்த மாவட்டச் செயலாளர் மருதமானவருக்கு அமைப்பு செயலாளர் பதவியையும் தந்திருப்பதாக மாவட்டத்தில் இலை தரப்பில் பேச்சு பலமாக அடிபடுதாம். காரணம், விஸ்வாசம் அமைச்சராக இருந்தபோது, சீனிக்கு பல்வேறு நெருக்கடிகளை தந்து ஓரம் கட்டினார். கடந்த தேர்தலில், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு விஸ்வாசம் தோல்வியை தழுவியதும், சீனிக்கு பதவியோகம் அடிச்சது. உலக உருண்டை சுழற்சியால் சீனி, விஸ்வாசத்தை ஓரங்கட்டி குறுகிய காலத்தில் அரசியலில் தலைதூக்கினார். தற்போது மீண்டும் கட்சியில் கிழக்கு மாவட்டச் செயலாளராகி உள்ள விஸ்வாசம், சீனிக்கு எதிராக, அமைப்பு செயலாளர் மருதமானவரை திசைதிருப்பும் பணியை துவக்கியிருக்கிறாராம்... ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒருவரின் தலைமறைவு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை தான் அரசியல்னு சொல்றாங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே இலையில் இருந்து பின்னர் அமமுகவிற்கு தாவியவர். பின்னர் மீண்டும் அண்மையில் இலையில் இணைந்தார். இருந்தாலும் கட்சி நடவடிக்கைகளில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் அவர் தாமரையில்  இணைந்து நாகர்கோவில் தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் களமிறங்க திட்டமிட்டாராம்.

ஆனால் இலையில் இருந்து நீக்கப்பட்டு, அடுத்த கணமே அவர் மீது போக்சோ வழக்கு பதிவும் செய்யப்பட்டு தற்போது போலீசார் தேடுதல், தலைமறைவு என்ற நிலையில் இருக்கிறாராம், எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட கனவு கண்டவர். ஆனால் அவரது அரசியல் எதிரிகள் ஒரு ரூட் கிளியராச்சு... நாகர்கோவில்ல சட்டமன்ற சீட் கேட்கலாம். யாரும் தடுக்க முடியாது என்று பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்... இதனால் சீட் கேட்க நினைப்பவர்கள் தரப்பில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொரோனாவில் திருப்பம் தந்து கோட்டீஸ்வரனான அரசு அதிகாரி பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா
‘‘திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றிய பிடிஓவான கிள்ளியானவர் ஏற்கனவே பல ஒன்றியங்களில் பணத்தை கிள்ளி மட்டுமல்ல அள்ளி எடுத்தவராம். அவர் இப்போது இந்த ஒன்றியத்தில் கொரோனா நிலையிலும் லட்சம், லட்சமாக அள்ளிவிட்டாராம். பல லட்சங்கள் சேர்ந்து இப்போது ‘சி’ லிஸ்டில் இருக்கிறார். இவர் கொரோனா தடுப்பு பணிக்காக கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர், லைசால் போன்றவை வாங்கியதாக கூறி சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் என்று கூறி தனது அலுவலகத்தில் பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரான ஜெகமானவரின் பெயரில் காசோலைகளாக போட்டு தனது வங்கி கணக்குக்கு மாற்றி விடுகிறாராம். இவரது தகிடுதத்தங்களால் அங்குள்ள கணக்காளர் ஆடிப்போயுள்ளாராம்.

குறிப்பாக மாதனூர் ஒன்றியத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஐஏஒய், பசுமை வீடு திட்டம் என பல திட்டங்களின் கீழ் வீடு வேண்டி விண்ணப்பிப்பவர்கள் முதலில் இவருக்கு திட்டத்துக்கு தக்கவாறு ரூ.20 முதல் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் வீடு இல்லை என்று கறார் காட்டுவாராம். வீடு கட்டும் திட்டத்துக்கான காசோலைகளை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெயரில் போட்டு விண்ணமங்கலம் இந்தியன் வங்கியில் போட்டு எடுத்து விடுகிறாராம். பயனாளிகள் கேட்டால் உங்கள் கணக்கில் போட்டாகிவிட்டது. திரும்பிவிட்டது என்றும், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறி அனுப்பி வைக்கின்றார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இ-பாஸா... இல்லை மக்களுக்கு இம்சை தரும் பாஸா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சென்னைக்கு மட்டுமல்ல மற்ற மாவட்டங்களுக்கு செல்லவும் இ-பாஸ் ரொம்பவே முக்கியம். அதுலேயும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இ-பாஸ் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்காம். எப்டி ரயில், பஸ்களில் விடுமுறை நாளில் டிக்கெட் ரிசர்வேஷன் கிடைக்காதே... அதே நிலைமை தான் இப்போதும் உள்ளதாம். சென்னையில் மட்டும் பணம் வாங்கிக் கொண்டு இ-பாஸ் வழங்கியதாக சிலரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அது சிறு துரும்பு தான் என்கின்றனர் பிற மாவட்டங்களை சேர்ந்த கீழ்மட்ட ஊழியர்கள்... இ-பாஸ் பயன்படுத்தி மாவட்டங்களில் தான் அதிகம் பணம் வாங்கி குவிக்கிறார்களாம்...

அவர்கள் குறித்து புகார்கள் இல்லாத காரணத்தால் இ-பாஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். குறைந்தபட்சம் ஆயிரம் முதல் மாவட்ட தொலைவுக்கு ஏற்ப பல ஆயிரங்களை மாவட்டங்களில் நிர்ணயித்துள்ளார்களாம். சென்னை என்றால் குறைந்த பட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கார் அல்லது வேனுக்கு வாங்குகிறார்களாம்... இந்த லஞ்ச கட்டணம் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே... விடுமுறை நாட்களில் சதவீதம் கூடும் என்கிறார்கள் கீழ்மட்ட ஊழியர்கள்... மாவட்டங்களில் கொரோனா பரவ இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

 • singapore-robo23

  கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ!: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்