SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களின் வாழ்வாதாரத்திற்கு உடனடியாக உதவிட மாநில அரசு ரூ. 5,000, மத்திய அரசு ரூ. 7,500 வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

2020-07-28@ 00:03:35

சென்னை: மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொருளாதார ரீதியாக உடனடியாக உதவிட மாநில அரசு ரூ. 5000, மத்திய அரசு ரூ. 7,500 வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக சார்பில் கே.என். நேரு, டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ஐஜேகே ரவி பச்சமுத்து உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* கொரோனா பலிமறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பலமுறை எழுப்பப்பட்டதற்குப் பிறகு அதை ஆராய்வதற்கு மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 444 மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதிமுக அரசின் இந்த குளறுபடிகளுக்கு கடும் கண்டனம் தெரிவி்க்கப்படுகிறது.
1.40 லட்சம் பேரில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு குணமானவர்கள் எத்தனை பேர்? அதற்கு தனியாக பதிவேடு இருக்கிறதா? இவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை மக்களுக்கு அதிமுக. அரசு தெரிவிக்காமல் மறைத்து வருகிறது. இந்த குளறுபடிகள் ஆளுந்தரப்பினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது.
*  மக்களின் வாழ்வாதாரத்அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் - மத்திய அரசு 7500 ரூபாயை நேரடியாக வழங்க வேண்டும்.
தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்தும் மீதியை தவணைகளில் செலுத்தும் வாய்ப்பினை கொடுக்க வேண்டும். ஏழைகளின்  கையில் கொடுக்கப்படும் நிவாரணப் பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும். அதிமுக அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
* கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு - அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும்
* உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலைக் கைவிட்டு - மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்ற தேவையான நிதியை உள்ளாட்சி மன்றங்களுக்கு  ஒதுக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட வேண்டும்.
* பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும் அளிக்கும் புகார்களின் மீது பாய்ந்து ஓடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, எதிர்க்கட்சிகள்- ஊடகத்தினர் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும் ஒருதலைப்பட்சமாகவும், நடுநிலையாளர்களாக உள்ள ஊடகவியலாளர்கள் ஆணோ/பெண்ணோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது என்று புகார் அளித்தால் அந்தப் புகாரை அலட்சியப்படுத்துகிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது. இந்தப் போக்கை காவல்துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
* பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடங்களையும் வழங்கிட வேண்டும். க்ரீமிலேயர் வருமானத்தில் “நிகர சம்பளத்தை” எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசாணைகளின்படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
* தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள “நீட்”  தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திட வேண்டும்.
இந்த ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும்.
* சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெற வேண்டும்.
* கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
* நீதிமன்றம் அளித்துள்ள  மூன்று மாத காலம்வரை காத்திராமல் உடனடியாக ஒரு கமிட்டியை அமைத்து,  உரிய முடிவெடுத்து மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றிவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும்- பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்