SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் மயானமாகும்

2020-07-28@ 00:03:21

ஊரடங்கால் பல கோடி பேர் வேலையிழப்பு, வாழ்வாதாரம் இழப்பு, உயிரிழப்பு என இந்திய மக்கள் தொடர்ந்து பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதன் தாக்கத்தில் இருந்து மக்கள் மெல்ல மீண்டெழுந்து வரும் சூழலில், சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ வரைவு அறிக்கை. ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம், கடந்த 2006ம் ஆண்டு திருத்தங்களுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்படி, நாட்டில் எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தினாலும், அத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, இதற்கென நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இத்திட்டத்தால் காற்று மாசு, உடல்நிலை, நீராதாரம் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்யப்படும். மக்களிடம் கருத்து கேட்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த சட்டத்தில்தான் மத்திய அரசு சமீபத்தில் மேலும் சில திருத்தங்களை செய்து, ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ என்ற வரைவு அறிக்கையை கடந்த 12ம் தேதி வெளியிட்டது. இதன்படி, மக்களிடம் கருத்து கேட்காமல் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ள முடியும். எட்டு வழிச்சாலை உட்பட எந்த சாலை விரிவாக்க திட்டத்திற்காகவும் நிலங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிகளை கையகப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முடியும். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையோ, வனத்துறை அமைச்சக முன் அனுமதியோ, மக்களின் கருத்தோ தேவையில்லை.

இந்த சட்ட திருத்தத்தால் தமிழகத்துக்கு பேராபத்து காத்திருக்கிறது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், புதியதாக மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன்
திட்டங்களை தூசி தட்டி செயல்படுத்தி விட முடியும். டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே ‘தண்ணியில்லா காடு’ என்று பெயரெடுத்த ராமநாதபுரம் மாவட்டத்தில், மேலும் தண்ணீர் பஞ்சம் உருவாகும். பெரியாறு அணை அருகே புதிய அணையை கேரள அரசு கட்டலாம். இதனால் தென்மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிப்படையும். குடிநீருக்கும்  கடும் சிக்கல் ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரிக்கும். தமிழகமே மயான பூமியாக மாறிவிடும் சூழல் உருவாகலாம்.

யுனெஸ்கோவால் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வரும் தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அம்பரப்பர் மலையில் தான், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தடையின்றி நிறைவேற்றலாம். இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி பெரியாறு, இடுக்கி அணைக்கும் ஆபத்து ஏற்படலாம் என கேரள அரசு அஞ்சுகிறது. இந்த வரைவு அறிக்கை குறித்து, மக்களின் கருத்து கேட்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 11 வரை வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்கால நலனுக்கு கேடு விளைவிக்கும், எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது; திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்குரலை உயர்த்தி உள்ள இந்த நிலையில், தமிழக அரசும் தனது தரப்பில் வலுவான எதிர்ப்பினை மத்திய அரசுக்கு எதிராக பதிவு செய்ய வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்