SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள்: மின்சாரச் சட்டத்தைத் திரும்பப் பெற கமல்ஹாசன் வலியுறுத்தல்

2020-07-27@ 12:23:56

சென்னை : பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள் என்று மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். விவசாயிகளை சிரமத்தில் ஆழ்த்தும் மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

''உலகமே பசுமை விவசாயத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு?

விவசாயிகளுக்கு எதிராக புது சட்டத் திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக்கி, உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள்தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதிபடுத்திக் கொண்டே இருக்கிறோம்.

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைக் குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்குப் பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புகளை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே 4 லட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லாக் கொள்முதல் விலை என ஏற்கெனவே பலமுனைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்தச் சுமையையும் ஏற்றத் துடிக்கிறது இந்த அரசு.

லாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதைச் சரிசெய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும்.

விளைவிப்பவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களைச் சிரமத்தில் ஆழ்த்தும் மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020ஐ திரும்பப் பெற வேண்டும். பெயரளவில் பாதிப்புகள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாகச் செயல்படுத்த வேண்டும்.

பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையைப் பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும்'.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்