SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொசுவும் கோடாரியும்

2020-07-27@ 00:17:54

‘‘ஊரடங்கு என்பது, கோடாரியைக் கொண்டு கொசுவை அடிப்பது போன்றது...’’ - நான்கு மாதங்களாக வேலையும், வருமானமும், குடும்ப நிம்மதியும் இழந்து, இயல்பு வாழ்க்கையைத் தொலைத்த பரிதவிப்பில் இருக்கும் சாமானியரின் குரலல்ல இது. அரசுக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய இடத்தில் உள்ள மருத்துவக் குழுவினரின் வார்த்தைகள் இவை. ஆறாம்கட்ட ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக, கடந்த ஜூன் 29ம் தேதி தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றப் பிறகு மருத்துவக்குழுவினர் தெரிவித்த கருத்து இது.

உண்மையும் அதுதான். ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை இங்கிருந்து விரட்டி விடமுடியாது; ஒருக்காலும் முடியாது. மார்ச் 24ம் தேதியில் இருந்து நூறு நாட்களுக்கும் மேலாக, ‘வேதனைகரமாக’ தொடரும் ஊரடங்குகள் உணர்த்துவதும் இதையே. ஆறு கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்குகளின் போது, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளிலும் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறைந்தபாடில்லை. குணமாகிற வழியைக் காணோம் என்றால், மருந்தை மாற்றிப் பார்ப்பதுதானே முறை?

லட்சக்கணக்கான நடுத்தர, அடித்தட்டுக் குடும்பங்கள், நான்கு மாதங்களாக பிழைப்பைத் தொலைத்து விட்டு, அடுத்து  என்ன செய்வதென்று வழிதெரியாமல் நிற்கிறது. நடுத்தரக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். தனியார் பள்ளியில் படிக்கிற தனது குழந்தைக்கு கல்விக்கட்டணம் கட்ட வழியின்றி, விரக்தியின் உச்சத்தில் இருக்கிற பெற்றோருக்கு... கொரோனா என்பது இனி அச்சம் தருகிற சொல் அல்ல. அதைக் கடந்து அவர்கள் வாழத் தயார். கொரோனாவை விடவும் வாழ்க்கை அபாயங்கள் அதிகம் நிறைந்தது. கொரோனாவுக்குப் பயந்து வாழ்க்கையை தியாகம் செய்யமுடியாது.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையுடன் தமிழகத்தின் லட்சக்கணக்கான நடுத்தர, அடித்தட்டு குடும்பங்கள் காத்திருக்கின்றன. அவர்களின் நம்பிக்கையை மீண்டுமொரு முறை சிதறடித்து விடக்கூடாது. நான்கு மாதங்களாக இழந்து போன வாழ்க்கையை மீட்கவும், ஊரடங்கு ஏற்படுத்திய பழுதுகளை செப்பனிடவும் வருமானம் தேவை. வருமானம் ஈட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு பொது போக்குவரத்து இயக்கம் மிக அவசியம்.

குறைந்தபட்சம், மீண்டும் மண்டலங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை துவங்கவேண்டும். சற்று அதிகமான எண்ணிக்கையில் அரசு பஸ்களை இயக்கினால், 60 சதவீதம் பயணிகள் என்ற சமூக இடைவெளிப் பயணம் சாத்தியப்படும். குறைந்த எண்ணிக்கையில் பஸ்களை இயக்கினால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. அதேபோல, பஸ்களை இயக்க நேரக்கட்டுப்பாடு விதிகளையும் தளர்த்தவேண்டும். இரவு சர்வீஸ்களும் இயக்கினால் மட்டுமே, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான பணிகளை முடித்து, நாலு காசு சேர்த்துக் கொண்டு வீடு திரும்பமுடியும்.

ஆறாம் கட்ட ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பிறகு என்னமாதிரியான நடவடிக்கைகளை தொடர்வது என்று முடிவெடுப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளைமறுநாள்
(ஜூலை 29) மாவட்டக் கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். கோடாரியை வீசியெறிந்து விட்டு, கொசுவை ஒழிக்க, வேறு புதிய உத்தியை கையில் எடுக்கவேண்டிய
தருணம் இது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்