SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவு காணுங்கள்... இளைஞர்களே!: கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று

2020-07-27@ 00:17:42

அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மாணவர் நலன், கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர். 1931, அக்டோபர் 15ம் தேதி ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் மரைக்காயருக்கும், ஆஷியம்மாளுக்கும் 7வது பிள்ளையாக ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம், ஆரம்பக்கல்வியை ராமேஸ்வரம், வர்த்தகன் தெருவில் சிறிய பள்ளியில் துவக்கினார். அறிவியல் ஆசிரியர் சிவசுப்ரமணி அய்யரிடம் அறிவியல் ரீதியாக பல்வேறு வி‌ஷயங்களை கேட்டறிந்து, தனது சக மாணவ நண்பர்கள் ராமநாத சாஸ்திரி, அரவிந்தன், சிவபிரகாசன் போன்றோருடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில் அதிகாலையில் வீடு வீடாக சென்று நாளிதழ் விற்கும் பணியை செய்த கலாம், ஆரம்பக்கல்வி முடித்த பின் ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் உயர்நிலை கல்வியை முடித்தார். பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் முடித்தார். தொடர்ந்து, சென்னை எம்ஐடியில் விமான தொழில்நுட்ப படிப்பை தேர்வு செய்து தனது இளவயது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். படிப்படியாக கல்வித் தகுதியை வளர்த்துக்கொண்ட கலாம், தொடர்ந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு அக்னி ஏவுகணை சோதனையை வென்றெடுத்தார். அக்னி வெற்றிக்குப்பின் இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் அறியப்பட்ட அப்துல்கலாம், இந்திய விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என நாள் முழுவதும் இடைவிடாது பணியாற்றிய கலாம், கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்.

புதிய விஷயங்களை அவ்வப்போது படித்து தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் படித்து தெரிந்துகொள்ள தூண்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இந்திய விண்வெளித்துறையில் மட்டுமல்லாது, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை வளர்ச்சி குறித்தும் சிந்தித்து செயலாற்றி வந்த கலாம், 2002ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் தான் படித்த துவக்கப் பள்ளியில் மாணவர்களை சந்தித்து பேசிய நிகழ்ச்சியே பின்னாளில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களை சந்தித்து உரையாடும் சம்பவங்கள் நிகழ காரணமாயிற்று.2002, ஜூலை 26ம் தேதி நமது நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்ற காலம் முதல் வெளியூர் பயணங்களின் போது பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாகேவ கொண்டிருந்தார்.

2020ம் ஆண்டுக்குப் பின் இந்தியா மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்று நம்பிக்கையூட்டிய கலாம், ஜனாதிபதி பதவி முடிந்தப் பின்பும் ஓய்வின்றி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து எதிர்கால இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளித்து அவர்களிடையே உரையாடி வந்தார். குழந்தைகள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரது அன்புக்கும் பாத்திரமாகி அவர்களின் ரோல் மாடலாக விளங்கி வந்த அப்துல்கலாம் 2015ம் தேதி மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோதே உடல்நலம் பாதித்து மரணமடைந்தார்.

தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவே உழைத்து இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டிய கலாமின் மறைவு நாட்டையே உலுக்கிய சம்பவமாகிப்போனது. இன்று கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம். இந்நாளில் அவரது நினைவை போற்றும் வகையில் ராமேஸ்வரத்திலுள்ள கலாம் நினைவிடத்தில் அவரது கனவை நனவாக்கும் வகையில் அறிவுசார் மையம், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.

* ஆசிரியப்பணியில் அலாதி பிரியம்
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா உட்பட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற கலாம் ஆசிரியப்பணி செய்வதில் அலாதி பிரியம் கொண்டவராக விளங்கினார். பாட்னாவிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வருகை பேராசிரியராகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும், திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்