SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதர் கழிவை மனிதரே அகற்றும் மானுட அறத்திற்கே புறம்பான முறைக்கு முற்றாக தடைவிதிக்க வேண்டும்! : சீமான் வலியுறுத்தல்

2020-07-16@ 16:01:29

சென்னை : மனிதர் கழிவை மனிதரே அகற்றும் மானுட அறத்திற்கே புறம்பான முறைக்கு முற்றாக தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தி உள்ளார். இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் இறங்கிய சேஷன்சாய் என்பவர் அதிலிருந்து வெளியான நச்சுக்காற்று தாக்கி மூச்சுத்திணறி உள்ளே மயக்கமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற நாகராஜ் என்பவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். ஆனால் இருவரும் நச்சுக்காற்றால் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் எனும் செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதேபோன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா, ஆலங்குளத்தைச் சேர்ந்த பாண்டி, தினேஷ், பாலா ஆகிய 4 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிக்காக கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியபோது நச்சுக்காற்றில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல இலட்சம் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள விண்வெளியையும், அதில் உள்ள கோள்களையும் துல்லியமாக ஆராய அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் வந்துவிட்ட இந்த நவீன காலத்திலும் இன்னும் மனிதர் கழிவை, சக மனிதர்களே வெறும் கைகளால் சுத்தம் செய்யும் அவலநிலை நீடிப்பதென்பது மானுட அறத்திற்கே புறம்பானது.

தற்காலத்தில் கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகள் காற்று அமுக்கிகள் மூலம் உறிஞ்சப்பட்டு கழிவுநீர் ஊர்திகளில் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்படுகின்றது. அப்படியான வாய்ப்பும், வசதியும் இருந்தும் இன்னமும் சில இடங்களில் மனித கழிவுகளை மனிதர்களே வெறும் கைகளால் தொட்டிக்குள் இறங்கி உயிரைப் பணயம் வைத்து சுத்தம் செய்வது அறியாமை மற்றும் அலட்சியத்தின் வெளிப்பாடாகும். அதை அரசும் அனுதிப்பதென்பது மாபெரும் கொடுமை.

பெரும்பாலும் இவ்வாறான கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிகளில் சமூக அடுக்கில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களே ஈடுபடுகின்றனர் என்பதால் அவர்களின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. குரல் கொடுக்க யாருமில்லாத காரணத்தினால் இவ்வாறான துயர நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவது என்பது மேலும் வேதனைக்குரியது.

எனவே தமிழக அரசு விழித்துக்கொண்டு இனியும் இதுபோன்று கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி மனிதர் கழிவை மனிதரே அகற்றும் முறைக்கு முற்றாக தடைவிதிக்க வேண்டும். மேலும் நவீன கருவிகளை கொண்டு கழிவுநீரினை அகற்றும் பணியில் ஈடுபவர்களுக்கும் தேவையான தற்காப்பு அணிகலன்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மருத்துவ முதலுதவி கருவிகளும் கொண்டு செயல்படுவதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை கொண்ட சட்டவிதிகளை உருவாக்கிட வேண்டும் என்றும் இதை மீறுவதும், மீறப் பணிப்பதும் தண்டணைக்குரிய குற்றமாக கருதி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது இத்துயர நிகழ்வில் உயிரிழந்த இருவர் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் உரிய இழப்பீடினை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'. என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்