SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவை விழிப்புணர்வு

2020-07-13@ 02:12:50

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயால் 1.29 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா என தொடங்கி சுமார் 220 நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்தியாவில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் முக்கிய மாநிலமாக திகழும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா பட்டியலை நாளுக்கு நாள் உற்றுநோக்கினால், நோயின் தன்மை இப்போதைக்கு தீருவதாக தெரியவில்லை. நோய் வீரியம் கொண்டு எழுந்தபோது தலைநகர் சென்னைதான் சமூக பரவலின் தலைமையிடமாக காட்சியளித்தது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தினமும் 4 ஆயிரம் எனில், அதில் சென்னையில் மட்டுமே குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேர் இடம் பெற்றிருந்தனர். தொடர்ச்சியாக அமலான ஊரடங்கு, சமூக பரவலின் சங்கிலி உடைப்பு உள்ளிட்டவற்றால் சென்னையில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

சென்னை, மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மக்களாலும், ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காததாலும் வேலூர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில் கூட சமீபத்தில் போடப்பட்ட ஊரடங்கு ஓரளவுக்கு பயனளித்து வருகிறது. தமிழகத்தில் இம்மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் போடப்படும் முழு ஊரடங்கில் மயான அமைதி நிலவுகிறது. ஆனால் வார நாட்களில் பிற மாவட்ட மக்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றனர். விளைவு முன்பின் தெரியாத நபர்கள் அதிகம் சந்திக்கும் நகர்புறங்களில் கொரோனாவின் கொட்டம் அதிகரிக்கிறது.

கொரோனா பரவலுக்கு தொடர்ச்சியாக நாம் அரசை குற்றம் சொல்லுவதில் அர்த்தமில்லை. அந்நோயோடு வாழ பழகி கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் அடிக்கடி ஊரடங்கு போடுவதும் அபத்தமே. முகக் கவசம், சானிட்டைசரால் கைகளை கழுவுதல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தாங்களே வலுவாக முன்னெடுக்க வேண்டும். நமக்கு மிகவும் வேண்டியவர் என நினைத்து கொண்டு ஒருவரிடம் அன்னியோன்யமாக பழகுவது, பாதுகாப்பு கவசங்கள் இன்றி செயல்படுவது ஆகியவை நோயை அதிகரிக்க செய்யும்.

இவ்வாண்டில் கொரோனா நோய் தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகளுக்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. எனவே பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டோடு, அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செல்வதே நோயில் இருந்து தப்புவிக்கும். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசிற்கும் சிற்சில கடமைகள் உள்ளன. விழிப்புணர்வு நடவடிக்கை களில் அரசு காட்டுகிற அக்கறையை, மற்ற விஷயங்களில் காட்டுவதில்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது நோயாளிகளை முகம் சுழிக்க வைக்கிறது. கொரோனா வார்டுகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் கூட இருப் பதில்லை. பணியில் இருக்கும் மருத்துவ துறை ஊழியர்கள் வார்டுகளுக்கு வந்து எட்டிப்பார்ப்பதில்லை. மாவட்டங்கள் தோறும் தனிமைப்படுத்துதல் முகாம்களும் தேவையான அளவு இல்லை. இத்தகைய குறைபாடுகளை களைய அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ வசதிகள் மேம்பட்டால் மட்டுமே கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருந்து விலகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்