SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் ஆதரவே முக்கியம்

2020-07-12@ 00:23:32

16 வது தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி, ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 40.8 சதவீத வாக்குகள் பெற்ற அதிமுகவுக்கும், 39.7 சதவீத வாக்குகள் பெற்ற திமுக அணிக்கும் இடையே 1.1 சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம். சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே 22ம் தேதியுடன் முடிவடைகிறது.

நடைபெற  உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொது முடக்கம் நாட்டையே முடக்கி போட்டிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான திமுக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளோடு காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு மக்கள் குறைகளை தீர்க்க ஏற்பாடு செய்து வருகிறார். அதோடு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்கிறார்.

அதே நேரத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக ஆட்சியாளர்களோ, மக்களின் குறைகளை தீர்ப்பது பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை. அவர்களது கவலையெல்லாம் எவ்வளவு கோடிக்கு டெண்டர் விடுவது என்பதில்தான் உள்ளது. அதோடு அடுத்த தேர்தலில் ஏதாவது செய்து வெற்றி பெற வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இதற்காக தங்களுக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகளை சட்டம் - ஒழுங்கு பகுதிகளில் நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றார்போல போலீஸ் அதிகாரிகளை அரசு நியமனம் செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பையும் மீறி சட்டம் -ஒழுங்கு கெடும் வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

குறிப்பாக, சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் வைத்தே 2 வியாபாரிகள் அடித்துக் கொல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விவகாரங்களில் போலீசுக்கு உறுதுணையாக இருப்பது அதிமுக அரசு. குறிப்பாக சாத்தான்குளம் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டாலும் மாஜிஸ்திரேட்டை மிரட்டிய டிஎஸ்பி, ஏஎஸ்பி போன்ற அதிகாரிகளை அரசாங்கம் காப்பாற்றி நல்ல பதவி கொடுத்துள்ளது.

மக்களுக்கு நண்பனாக, காவலனாக இருக்க வேண்டிய அரசு இப்போது, போலீசுக்கு அதிலும் குறிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் நண்பனாக, பாதுகாவலனாக மாறியுள்ளது. காவல் துறை பலத்தில் தேர்தலை வெல்ல இது ஒன்றும் வார்டு தேர்தல் அல்ல, சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெற மக்களின் ஆதரவு மட்டுமே போதும். அது இல்லாதபோதுதான் அதிகார பலம், போலீஸ் பலம், பண பலம் போன்றவற்றை நம்பி களத்தில் குதிக்க வேண்டியுள்ளது. மக்கள் ஆதரவே முக்கியம், போலீஸ் அதிகாரிகளின் ஆதரவு அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்