SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிந்திக்க வேண்டிய நேரம்

2020-07-11@ 00:13:38

உ லகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளை சந்தித்து வரும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவை கண்டு அச்சப்பட தேவையில்லை. நம்மிடம் அனைத்து வியாதிக்கும் மூலிகை மருந்துகள் உள்ளது என்று நம்பிக்கை ஊட்டியவர்கள் சித்த மருத்துவர்கள். ஆனால், சித்த மருத்துவம் என்பது ஆன்மிகம் சார்ந்த ஒரு விஷயமாக கருதி புறக்கணிக்கப்பட்டதால் அதன் சிறப்பு மக்களிடம் பெரிய அளவில் சென்றடையாமல் போய்விட்டது. தமிழ் இலக்கிய பாடல்கள் மூலம் சித்தர்கள் அனைத்து வியாதிகளுக்கும் மருந்து தயாரிக்கும் முறையை வகுத்து கொடுத்துள்ளனர். இதில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு மருந்து தயாரித்து தரும் மருத்துவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் அரசின் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அவர்களது தயாரிப்புகள் முடங்கிபோய் உள்ளது. மனிதனின் உடலில் வியாதி உருவாக காரணிகளாக வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் விளங்குவதாக கூறும் சித்த மருத்துவர்கள், இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்கு பத்திய முறைப்படி மருந்து கொடுத்து குணமாக்கி வருகிறார்கள். கொரோனாவை சமாளிக்க முடியாமல் அலோபதியே ஆட்டம் கண்டுவிட்ட நிலையில், கபசுர குடிநீர் குடித்தால் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று உரக்க சொன்னது சித்த மருத்துவம் தான்.  அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் சித்தாவில் அதிகம் உள்ளது. அதை சித்த மருத்துவர்கள் அரசிடம் எடுத்து சொன்னால், அதை பரிசோதனைக்கு உட்படுத்தி பார்க்காமல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஒடுக்குவது முறையல்ல. சித்த மருத்துவ ஆராய்ச்சியில் இருக்கும் மருத்துவர் ஒருவர் சட்ட போராட்டம் நடத்தி தனது மருந்தை ஆயுஸ் நிறுவன ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இப்படி அனைத்து மருத்துவர்களும் சட்ட போராட்டத்தை எதிர்கொள்வது சாத்தியமில்லை. அதனால் அவர்கள் மருந்தை முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தி நோய் எதிர்ப்புக்கு சிறந்தது என்று தெரியவந்தால் ஏற்றுக்கொள்வதும், இல்லாதபட்சத்தில் நிராகரிக்கவும் அரசுக்கு உரிமையுண்டு. நம்மிடம் உள்ள பாரம்பரிய மருத்துவ வளத்தை பயன்படுத்திக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. எனவே, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வுக்குட்படுத்துவதற்காக நிதி ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசும் இந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும். இதிலுள்ள மருத்துவ நிபுணர்களை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனாவின் தாக்கத்தால் நமது பாரம்பரிய மருந்துகளின் சிறப்பை உணர்ந்து கொள்வதற்கான காலம் கனிந்துள்ளது. எனவே சித்த மருந்துகளின் மீது கவனத்தை திருப்பி சிந்திக்க வேண்டிய அவசியமான நேரமிது என்பதை நீதிமன்றமும் எடுத்து கூறியுள்ளதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். சித்த மருந்துவ முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதி களுடன் கூடிய மையத்தை மாவட்டங்களில் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருந்துகள் ஆய்வு செய்து பல்வேறு நோய்க்கு முன்னெச்சரிக்கை அரசு மேற்கொள்ள ேவண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்