SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளுக்கு ஷாக்

2020-07-10@ 03:57:02

இந்திய நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயம் ஆண்டுதோறும் பாழ்பட்டு கொண்டே வருகிறது. பருவநிலை மாற்றங்களால் விளைச்சல் சரியில்லை, விளைபொருட்களுக்கு சரியான விலையில்லை என திண்டாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அடுத்த ‘ஷாக்’ கொடுக்க மத்திய அரசு ஏற்கனவே தயாராகி விட்டது. இவ்வாண்டு தொடக்கம் முதலே ‘மின்சார திருத்த சட்டம் 2020’ஐ நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இச்சட்டத்திருத்தம் அமலாக்கம் செய்யப்பட்டால் தமிழகத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்தாகும். வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது. நெசவாளர் உள்ளிட்ட தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இச்சட்டத்திருத்தம் குறித்த பேச்சுகள் எழும்போதெல்லாம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றன.

இத்தகைய சட்டத்திருத்தத்தை இதற்கு முன்பு 3 முறை கொண்டு வரமுயன்று மத்திய அரசு தோற்றுப் போனது. இப்போதும் எதிர்ப்பு வலுக்கும் நிலையில் அதை நிறைவேற்ற பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மின்துறை அமைச்சர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர்களை சந்தித்து நேரடியாக ஆதரவு கேட்டு வருகிறார். விவசாயத்தை உயிர்நாடியாக கொண்ட தமிழகம் இச்சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பாதிப்புகளை விவரித்து முதல்வர் தரப்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

நீட் உள்ளிட்ட விஷயங்களில் தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பின்னர் மத்திய அரசின் முடிவுகளுக்கு துணைபோன வரலாறுகள் இன்றைய அரசுக்கு உண்டு. அவ்வாறு மின்சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், தமிழகத்தில் விவசாயத்தின் கதி அதோ கதிதான். காவிரிக்கும், முல்லை பெரியாறுக்கும் தண்ணீர் கேட்டு போராடும் விவசாயிகள், இலவச மின்சாரமும் கிடைக்காமல் போனால் என்ன செய்வர்? ஏற்கனவே விவசாயிகளுக்கு நிலையான உற்பத்தி, விளைபொருட்களுக்கு இரு மடங்கு ஆதார விலை என மத்திய அரசின் அறிவிப்புகள் எல்லாம் அல்வா போன்றே சுவையை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் நடைமுறையில் அவை எதுவுமே செயல்பாட்டுக்கு வரவில்லை.

மத்திய அரசு இச்சட்ட திருத்தத்தை செயல்படுத்த முனையும் காலமும் பொருத்தமற்றது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால், தொழில்கள் எல்லாம் நசிவுற்றுள்ளன. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. விவசாய விளைபொருட்களை வெளிமாநிலங்களுக்கு மட்டுமல்ல, பக்கத்து மாவட்ட சந்தைக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை. இத்தகைய சூழலில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் விவசாயிகள் தலையில் பேரிடியாக அமையும். அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வரும் மத்திய அரசு, மின்துறையையும் தனியார் கையில் தாரை வார்க்கவே இச்சட்டத்திருத்தத்தை கொண்டு வர துடிக்கிறது.

மின்சார துறையில் தனியார் ஏஜென்சிகள், துணை லைசென்ஸ் ஆகியவை வழங்கப்பட்டால், கிராமப்புற மின்சேவைகள் பாதிப்புக்குள்ளாகும். தமிழக மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு மத்தியில் இருந்து வர வேண்டிய தீர்வு தொகை ஆயிரக்கணக்கான கோடியாக உள்ளது. அத்தொகையை வழங்கி தமிழக மின்வாரியத்தை வாழ வைத்தாலே மத்திய அரசுக்கு கோடி புண்ணியம் கிட்டும். மாறாக இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகளின் சாபத்தையே மத்திய அரசு பெற வேண்டியது வரும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்