SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று தப்பிய ரவுடி கும்பல் தலைவன் சிக்கினான்: துப்பாக்கிமுனையில் ம.பி.யில் கைது; கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை

2020-07-10@ 00:20:22

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபேயை மத்தியப்பிரதேச போலீசார் நேற்று துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர். தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட அவன் உஜ்ஜைனி கோயிலில் சாமி கும்பிட வந்த போது சுற்றிவளைக்கப்பட்டான். துபேயை தேடும் வேட்டையில் அவனது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். 5 நாள் தலைமறைவாக இருந்த துபே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவன் ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே. இவன் மீது கொலை உள்ளிட்ட 60 வழக்குகள் உள்ளன.

இவன் கூட்டாளிகளுடன் தனது கிராமத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று டிஎஸ்பி தலைமையிலான போலீசார் குழு அங்கு சென்றனர். போலீஸ் வருவதை முன்கூட்டியே அறிந்த ரவுடி விகாஸ் துபே கும்பல், பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி, போலீசார் மீது அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் கொல்லப்பட்டனர். விகாஸ் தப்பி சென்று தலைமறைவானான். அவனுக்கு துப்பு கொடுத்த இன்ஸ்பெக்டர் உட்பட சில போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால் தலைமறைவான விகாைச பிடிக்க உபி போலீசார் தீவிரம் காட்டினர். அவனை பிடிக்க 25 தனிப்படை அமைக்கப்பட்டது. விகாஸ் குறித்து தகவல் தந்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர். அவனது கூட்டாளிகள் 3 பேர் போலீஸ் என்கவுன்டரில் பலியாகினர். நேற்று அதிகாலையிலும் உபியில் விகாசின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் உள்ள மகாகாளி கோயிலில் விகாஸ் தரிசனம் செய்ய வருவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு விரைந்த போலீசார், கோயிலில் தரிசனம் செய்து விட்டு பிரசாதத்துடன் வெளியில் வந்த அவனை துப்பாக்கி முைனயில் சுற்றிவளைத்து கைது செய்தனர். உடனடியாக அவனை கான்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

5 நாட்கள் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே சர்வசாதாரணமாக கோயில் நுழைவாயிலில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மபி மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், “விகாஸ் துபே மகாகாளி கோயிலுக்கு காரில் வந்துள்ளான். அவனை காவலர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அதன் பின்னர் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். விகாசை சுற்றிவளைத்த போலீசார் அவனிடம் விசாரித்துள்ளனர். பின்னர் கைது செய்துள்ளனர்” என்றார்.

ஆனால், கோயில் வளாகத்தில் இருப்பவர்கள் கூறுகையில், விகாஸ் துபே கோயிலுக்கு வந்ததாகவும்,  நுழைவு வாயிலில் ரூ.250க்கு தரிசன டிக்கெட் வாங்கிவிட்டு, அங்குள்ள கடையில் பிரசாதம் வாங்குவதற்கு சென்றதாகவும் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீசார் அங்கு விரைந்து சென்று விகாசை கைது செய்துள்ளனர். இதனால், விகாசை போலீசார் கோயிலுக்குள் வைத்து கைது செய்தனரா அல்லது தரிசனம் முடித்து வெளியே வரும்போது கைது செய்தார்களா என்பது தெரியவில்லை. இதனால் அரசியல் ரீதியாகவும் இந்த சந்தேகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

* சமாஜ்வாடியா, பாஜவா?
இதற்கிடையே விகாஸ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. விகாஸ்துபேவின் தாயார் சர்ளா தேவி கூறுகையில், ‘‘அரசு எனது மகனை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதனை செய்யட்டும். தற்போது எனது மகன் பாஜவில் இல்லை. சமாஜ்வாதி கட்சியில் உள்ளார்” என்றார். அதே நேரத்தில் இது குறித்து சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ விகாஸ் கட்சியில் உறுப்பினர் கிடையாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றார். விகாசை காப்பாற்ற அரசியல் ரீதியாக சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

* அறை விட்ட போலீஸ்
உஜ்ஜைனி மகாகாளி கோயிலில் கைது செய்யப்பட்டவுடன் விகாஸ் துபே ஆத்திரத்தில் ‘நான் தான் விகாஸ் துபே, கான்பூர்காரன்’ என சத்தமாக கத்தினான். உடனே அங்கிருந்த போலீசார் அவனை தலையில் அறைந்தனர். தன்னை அறைந்தது யார் என்பதை விகாஸ் திரும்பி பார்த்துள்ளான். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்