SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொலைநோக்கு பார்வை

2020-07-09@ 00:52:57

கொரோனா பிரச்னையில் இருந்து மீண்டு, இயல்புநிலைக்கு திரும்புவது எப்போது...? - இன்றைய தேதியில், கூகுளில் தட்டினாலும் விடை கணிக்க முடியாத கேள்வி. அதேசமயம், மக்களின் நலன் மீது அதிக அக்கறை கொண்ட அரசுகள், கடிவாளத்தை இறுக்கிப் பிடித்து, பாதிப்பு அளவை கட்டுக்குள் வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. ஊரடங்கு என்ற ஒற்றை நடைமுறையை மட்டும் வைத்துக் கொண்டு கொரோனாவை வழிக்குக் கொண்டு வர நினைப்பது சாத்தியமான வழிமுறையாக தெரியவில்லை. ஊரடங்கு துவங்கி நூறு நாட்களைக் கடந்த பிறகும் கூட, நம்பிக்கைக்குரிய மாற்றங்கள் தென்படவில்ைல என்றால், போகிற பாதை சரியில்லை என்றுதான் பொருள். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்து, உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டிய இடத்தில் தமிழகம் தற்போது இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வழிமுறைகளை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது மட்டுமே இன்றைய தேவை. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகள் அரசிடம் இன்னமும் தென்படாதது கவலையளிக்கிறது.

குளறுபடியான நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தின் கொரோனா தலைநகரமாக சென்னை மாறியது. கட்டுப்பாடுகள் வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்ததால், சென்னையில் இருந்து 4 வழிச்சாலைகள் வழியாக மாநிலத்தின் சகல திசைகளுக்கும் கொரோனா தடையின்றி பயணம் சென்றது. நிலைமை, கண்ணுக்கு முன் அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருப்பது தெரிகிறது. ஆனாலும், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு இன்னமும் மந்தநிலையில் தான் இருக்கிறது. சென்னையில் நிலைமை சற்று ஆறுதல் அளிக்கும் திசையில் செல்லும் அதேநேரத்தில், பிற மாவட்டங்களில் தொற்றின் வீரியம் அதிகரிக்கிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் தினமும் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தினமும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளையும், அதன் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று பாதித்தவர்களின் சதவீதம் அபாய நிலையில் இருக்கிறது. பரிசோதனை அளவை இன்னமும் அதிகரித்து, தொற்றாளர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே, இந்த மாவட்டங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

அதேசமயம், தனிமைப்படுத்தும் முகாம்களில் உணவு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடியோடு சரியில்லை என்று புகார் மேல் புகார்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் வருகின்றன. தனிமைப்படுத்தும் முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய வசதிகள் இல்லை; சரியாக கவனிக்கப்படவில்லை என்றால், மக்கள் தாங்களாக முன்வந்து சோதனைக்கு வர அஞ்சும் நிலைமை உருவாகும். பாதிப்பு அதிகமிருக்கும் மாவட்டங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதி, சிகிச்சைக்கு வருபவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு. எல்லைகளில் கண்காணிப்புக் குறைவு தான், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தொற்று அதிவேகமாக பரவக் காரணமாக அமைந்தது. தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து அடித்துப் பிடித்து சொந்த ஊர் வந்தவர்கள் எல்லாம், மீண்டும் சென்னைக்கு திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். முறையான பரிசோதனைகள் இல்லாமல், மீண்டும் அவர்களை அனுமதிப்பது... சிக்கலை இன்னும் அதிகப்படுத்தி விடலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்