SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பகல் கனவு

2020-07-08@ 02:38:47

சீனாவில் துவங்கி, உலகையே மிரட்டி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. மனித உயிர்களை காவு வாங்கும் இந்த வைரஸை ஒழிக்க ஒரே வழியாக தற்போது இருப்பது ஊரடங்கு மட்டுமே. விலகியிருந்தால் தப்பிக்கலாம் என்பதுதான் ஒரே மருந்தாக உள்ளது. சமூக விலகல் வழியாகத்தான் இத்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என டாக்டர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், ஊரடங்கு வீண் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. மத்திய-மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. முழு ஊரடங்கு, பின்னர் தளர்வுகள் என தவணை முறையில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஜூலை 31 வரை தொடர்கிறது. நூறு நாட்களை தாண்டிச்செல்லும் இந்த ஊரடங்கால் என்ன பலன்? என ஆராய்ந்து பார்த்தால், எல்லாம் வீண் என்றே தோன்றுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் ஊரடங்கு வீணாகிப்போய்விட்டது.

முழு ஊரடங்கு என அரசு அறிவித்தால், ஊரடங்கிற்கு முந்தைய நாட்களில் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டதுபோல மக்கள் கடை வீதிகளில் திருவிழா கூட்டமாக குவிந்து விடுகின்றனர். இதனால் கொரோனா தொற்றும் கூடவே பலரிடம் ஒட்டிக்கொள்கிறது. முழு ஊரடங்கு தளர்வுக்கு அடுத்த நாளும் இதே நிலைதான் தொடர்கிறது. சென்னையில் 17 நாள் முழு ஊரடங்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பும், பின்பும், மக்கள் வீதியில் சமூக இடைவெளியின்றி திரண்டதை அரசால் தடுக்க இயவில்லை.

இதனால் முழு ஊரடங்கு காலகட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இனி என்னாகுமோ? என தெரியவில்லை. முழு ஊரடங்குக்கு அடுத்த நாள் சகஜ நிலைக்கு திரும்பி மக்கள் கூடும் கூட்டத்தால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதுதான் இதுவரை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக எத்தனை பேருக்கு பாதிப்பு என எண்ணிக்கொண்டே இருப்பதில் மட்டுமே தற்போது அரசின் கவனம் போகிறது. தடுப்பில் முற்றிலும் கோட்டை விட்டுவிட்டது. மத்திய-மாநில அரசுகள், ஊரடங்கில் தளர்வுகள் என்ற பெயரில் பலவாறு அலட்சியம் காட்டுவதால், கொரோனா ஒழிப்பு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த பேராபத்தில் இருந்து மக்களை காக்க, ஊரடங்கையும் தாண்டி, எமர்ஜென்சி ஒன்றே சிறந்த மருந்து. மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வீடு தேடி சென்று வழங்கிவிட்டு, தொற்று வெகுவாக குறையும் வரை வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் தண்டனை என்பதை கறாராக பின்பற்றினால் மட்டுமே இக்கொடிய வைரஸை ஒழிக்க முடியும். கொரோனா தொற்றுக்கு, அரசியல், ஜாதி, மதம், வயது, பாலினம், உயர்ந்தவன்,  தாழ்ந்தவன் என எந்த வேறுபாடும் கிடையாது. இன்று அடுத்தவருக்கு தொற்றினால்,  நாளை நம்மையும் தொற்றும். அதனால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதில் வெற்றிகொள்ள முடியும். இல்லாவிட்டால் ஊரடங்கு நீட்டிப்பு என்பது பகல் கனவாகவே முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்