SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு ஊழியருங்க கடுப்பான விவகாரத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-08@ 00:53:55

‘‘ஒரு கண்ணுல நெய், மற்றொரு கண்ணுல சுண்ணாம்பு வைக்கலாமா அரசு...’’ என்றபடியே வந்தார் விக்கியானந்தா.
‘‘யாரை சொல்றீரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிவகங்கை மாவட்டத்துல கடந்த ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியிட மாற்றம், கைது, சிறை, வழக்குன்னு பல விஷயங்கள் தொடருது; இன்றுவரை, அதன் பாதிப்புகளினால் அவதியடைந்து வருகின்றனராம்... வழக்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தொடர் நீதிமன்ற வாய்தாக்களை எதிர்கொண்டும், ‘17ஏ’ நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பெற முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகின்றனராம்... சில மாவட்டங்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை போல், சிவகங்கை மாவட்டத்திலும் அதே ரத்து  நடவடிக்கை இருக்கும்ன்னு  எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியதாம்... இதனால் தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம்...’’ என்றார் விக்கியானந்தா.
அதென்ன, சாத்தான்குளம் விவகாரம் போலீஸ் மத்தில ரொம்ப அவமானமா நினைக்கறாங்களாமே...

பின்னே இருக்காதா, சாதாரண சம்பவமா அது; காவல் துறை உங்கள் நண்பன்னு சொல்லிட்டு இப்படி நடக்கலாமா? குறிப்பா, உயர் அதிகாரிகள் மனது வேதனை படறாங்க; இது சமீபத்தில் மாங்கனி மாவட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்பட்டதாம். மாங்கனி மாவட்டத்திற்கு வந்த மேற்கு மண்டல ஐஜி, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினாராம். அந்த கூட்டத்தில் பேசிய ஐஜி, பொதுமக்களிடம் நற்பெயரை சம்பாதிக்கும் வகையில் ஒவ்வொரு போலீசாரும் பணியாற்ற வேண்டுமென்றும், அவர்களின் குறைகளை அதிகாரிகள்தான் தீர்த்து வைக்கணுமுன்னும் அறிவுறுத்தினாராம். அத்தோடு, கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயரை சம்பாதிச்சோம். ஆனால் சாத்தான்குளம் சம்பவத்தால், போலீசுக்கு இருந்த நற்பெயர் களங்கப்பட்டிருக்குனு வெதும்பினாராம். அதனால அனைவரும் கவனமுடன் பணியாற்றி நல்ல பெயரை வாங்கனுமுன்னு கேட்டுக்கிட்டாராம். ஐஜியே ரொம்ப பீல் பண்ணிட்டாருனு மாங்கனி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ரொம்ப பேசிக்கிட்டிருக்காங்களாம்.

பெண்களுக்கான டூவிலர் வழங்கும் திட்டத்தில் செம வசூலாமே...எங்கே நடந்தது...சொல்லுங்க விக்கி...
தமிழக அரசு பணிபுரியும், வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற ஆண்டுக்கு 2.50 லட்சம் மிகாமல் வருவாய் ஈட்டும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வாகனம் பெறும் மகளிருக்கு வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீத வாகன விலை இதில் எது குறைவானதோ அது பயனாளிக்கு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிருக்கு ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில், மகளிர் திட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெறும் மகளிர் அவற்றை பூர்த்தி செய்து வழங்கும் நிலையில் அதன் மீது விசாரணை நடத்தி அந்த விண்ணப்பங்கள் மகளிர் திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படுகிறது. இதை வைத்து இருசக்கர வாகனத்துக்கு விண்ணப்பித்துள்ள பயனாளிகளிடம் வேலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் வரை கட்டாய வசூல் நடக்கிறதாம்.

அட, இந்த கேவலம் இன்னும் போகலியா...வசூல் மன்னர்களாக இருக்காங்களே...
இதுக்கே இப்படின்னா எப்படி...ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் அரசமரத்தடி கடவுள் பெயரை கொண்டவர். இவர், அலுவலகத்தில் பக்தி பழமாக தன்னை காட்டிக்கொண்டு, நேர்மையாக இருப்பதாக சக அலுவலர்களிடம் நடந்துகொள்வார். ஆனால், வசூல்வேட்டையில் அத்தனை பேரையும் மிஞ்சி விடுகிறாராம். வழக்கமாக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூல் செய்வதற்காகவே புரோக்கர்களை வைத்து கல்லா கட்டி வருவார்கள். ஆனால், இவர் கொஞ்சம் வித்தியாசமாக காய் நகர்த்துகிறார். அதாவது, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களையே வசூல் ஏஜெண்டாக நியமித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் இருந்து கார், லாரி, பஸ் என அனைத்து வாகன பதிவிற்கும் ஆயிரக்கணக்கான ரூபாயை போக்குவரத்து ஆய்வாளர்களே பேரம் பேசி கறந்து விடுகிறார்களாம். பணம் கொடுக்காவிட்டால் எந்த வேலையும் இங்கு நடப்பதில்லை. அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மாலையில் வசூலை கூட்டி, கழித்து அள்ளிச்சென்று விடுகிறார் இந்த அதிகாரி. வசூலாகும் பணத்தை தராமல் புரோக்கர்கள் தன்னை ஏமாற்றி விடுவதால், போக்குவரத்து ஆய்வாளர்களை கொண்டே இந்த வசூல்வேட்டையை கச்சிதமாக நடத்தி வருகிறார் இந்த அதிகாரி.

மலைக்கோட்டைல  அப்படி  என்ன மருத்துவமனை விவகாரம்...
மலைக்கோட்டை மாநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பணியில் உள்ள டாக்டர்கள் கடும் வேதனையிலும், பீதியிலும் உள்ளார்களாம்... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போதும், மருந்து மாத்திரைகள் கொடுக்கும் போதும் பாதுகாப்பு கவச பிபி உடைகளை அணிந்து செல்கின்றனர். அந்த உடைகளை அணியும் போது ஜிப் அறுந்து விடுவதாகவும், கையுறை அணியும் போதே கிழிந்து விடுவதாகவும் கூறி டாக்டர்கள் வேதனை அடைகின்றார்களாம்... பலமுறை தரமான உடை மற்றும் கையுறைகளை வாங்க கூறியும் மருத்துவமனை நிர்வாகம் ஏனோ அதனை காதில் போட்டு கொள்வதில்லை என டாக்டர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம்...
இதே போல் சவக்கிடங்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள், கொரோனா தாக்கி உயிரிழப்பவர்களின் உடல்களை பாதுகாப்பாக பேக்கிங் செய்வதற்கான கவர் இல்லாமல் பிளாஸ்டிக் கவரில் உடல்களை பத்திரப்படுத்தி அனுப்புவதால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளார்களாம்... இவர்களின் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பதாக மருத்துவமனை வளாகம் முழுவதும் எதிரொலிக்கிறதாம் என்று  முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்