SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி கிச்சன்னு ஆரம்பிச்சு மோசம் போன கதையை கூறுகிறார்: wiki யானந்தா

2020-07-07@ 00:12:53

‘‘சென்னைக்கு சென்று வந்த  அதிகாரியால கலெக்டர் ஆபிஸே பீதியில் இருக்கிறதா சொல்றாங்களே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ் 2வது தளத்தில் செயல்படும் கனிம வளத்துறையில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா வந்திருச்சாம். இந்த துறையின் பெண் அதிகாரி ஊரடங்கு காலத்தில் சென்னைக்கு வாரத்துக்கு 3 முறை சென்று வந்துள்ளாராம். இதனாலேயே, அலுவலகத்தில் வேலைசெய்யும் 8 பேருக்கும் கொரோனா வந்ததா ஒரே பேச்சு, இருந்தாலும், அந்த பெண் அதிகாரி தனக்கு நெகட்டிவ் சர்டிபிகேட் வாங்கி வச்சிட்டு தினசரி ஆபிசுக்கு வந்திட்டு போயிட்டிருக்காராம். எப்போதும் காரில் பந்தாவா வந்து இறங்கும் அவர், இப்போ யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக நுழைவு வாயிலிலேயே காரை நிறுத்தி விட்டு நடந்தே, ஒரு ஓரமா செல்கிறாராம். இதனால், பெண் அதிகாரிய கண்டு ஒட்டுமொத்த கலெக்டர் ஆபிசும் பீதியில இருக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காய்கறி சந்தையில கூட வம்பு வளர்க்குதாமே ஆளுங்கட்சி...’’
‘‘திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தையினால் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குறைந்த விலையில் தங்களது காய்கறி தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வாரச்சந்தை 4 மாதங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து காய்கறிகள் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் காய்கறி தற்காலிக சந்தை அமைப்பதற்காக செயல் அலுவலர் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தார். பரந்த இப்பகுதியில் வாரச்சந்தை அமைந்தால் பொதுமக்கள் பயனடைவர். கொரோனா காலம் என்பதால், சமூக விலகலையும் முறையாக பயன்படுத்த முடியும். ஆனால் தனது உறவுகளை திருப்திப்படுத்தும் வகையில், ‘உள்ளுர் வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். மற்ற ஊர் வியாபாரிகள் யாரும் இங்கு வரக்கூடாது’ எனக்கூறி ‘அதிமுக நகர் முக்கிய நிர்வாகி’ இந்த காய்கறிக் கடைகள் அமைவதையே தடுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.

அதிகாரிகளோ, ‘சந்தையை மாற்றி வைப்பதால் மற்ற பகுதிக்காரர்கள் வருவதை எப்படித் தடுக்கலாம்?’ என்கின்றனர். உள்ளூர் பொதுமக்களும், ‘உள்ளூர்க்காரர்களிடம் மட்டுமே அனைத்து காய்கறிகளும் கிடைத்து விடாது, அத்தோடு வெளியூரிலிருந்து வந்தால்தான் வியாபாரப்போட்டியில் விலை குறைவும் இருக்கும்’ எனக்கூறி அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென வாக்குவாதம் செய்து வருகிறார்களாம். மொத்தத்தில் இந்த தற்காலிக காய்கறி சந்தையை அமைக்க முடியாமல், பொதுமக்களுடன், அதிகாரிகளும் தவியாய் தவித்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யுனிவர்சிட்டியில என்ன களேபரம்..’’
‘‘புகாருக்கே அசராதவரு, கொரோனா பீதியில மனசு மாறுனதுதான் மாங்கனி மாவட்டத்துல பரபரப்பா பேசப்படுது. கொரோனா காரணமா எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் முழு ஊரடங்குல இருக்குது. பல கல்வி நிலையங்கள இழுத்து மூடுனாலும், மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில மட்டும் வழக்கம் போல பணி நடந்துச்சு. அதுவும் அரசாங்கம் சொன்ன 50 சதவீதம் பேருதான் வரணும்னுகிற ரூல்ஸ கூட மதிக்காம, எல்லா வாத்தியாருங்களையும் யுனிவர்சிட்டிக்கு வர வச்சாங்க.
எல்லாரும் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாலும், நிர்வாகம் எதுவும் கண்டுக்கலயாம்.

கொரோனா பரவிடும்னு வாத்தியாருங்க உயர்கல்வித்துறைக்கு புகார் அனுப்பியும், பலனில்லாம போச்சு. இந்த நேரத்துலதான் அந்த மாவட்டத்துல பாதிப்பு அதிகமாகி, யுனிவர்சிட்டியிலயே கொரோனா வார்டு போட முடிவு செஞ்சாங்க. இதனால பீதியின் உச்சத்துக்கே போன நிர்வாகம், திடீர்னு 15 நாள் லீவு கொடுத்து எல்லோரையும் வீட்டுலயே இருக்க சொல்லிட்டாங்க. இதத்தான் நாங்களும் அப்போவே சொன்னோம். வலியும், வேதனையும் அவங்கவுங்களுக்கு வந்தாதான் தெரியும்னு வாட்ஸ் அப்ல வாத்தியாருங்க மெசேஜ் அனுப்பிட்டிருக்காங்களாம்’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரி நிலவரம் எப்பிடி இருக்கு..’’
‘‘புதுச்சேரியில் டெபாசிட் வாங்காத தாமரை தலைவர் நடவடிக்கையால், புதுச்சேரி நிர்வாகிகளுக்குள் வெட்டுக்குத்து நடக்காத குறையாக பிரச்னை நீள்கிறதாம்.
 மோடி கிச்சன் என ஆரம்பித்து ரூ.5 வெரைட்டி சாதம், ரூ.10க்கு 4 இட்லி அல்லது மூன்று சப்பாத்தி என பொதுமக்களுக்கு மலிவு விலை உணவகத்தை முதல்கட்டமாக 3 இடங்களில் துவக்கி வைத்தாராம். ஆனால் 4 நாட்கள் கூட ஒழுங்காக நடக்கவில்லையாம். என்ன என்று விசாரித்தபோது தாமரை தலைவர் நிர்வாகிகளுக்கே மோடி மஸ்தான் வேலையை காட்டிவிட்டதாக புலம்பி வருகின்றனராம். மோடி பெயரில் கிச்சன் ஆரம்பிக்க பணம் தருகிறேன் என நிர்வாகிகளிடம் கூறி துவங்க சொன்னாராம். ஆனா கடைசியில எதுவுமே தரலையாம். இதனால் நஷ்டப்பட்டு போன பாஜக நிர்வாகிகள் நீங்க சொல்லித்தானே ஆரம்பித்தோம் இப்போ இப்படி பண்ணீட்டிங்களே என புலம்பியிருக்கின்றனர்.

நிதியுதவி செய்வதாக சொன்னவர்கள் செய்யவில்லை. நான் என்னப்பா பண்றது என பதிலுக்கு பீலிங் ஆனாராம். கொஞ்ச நாள் கழித்து மோடி கிச்சன் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியதாக தகவல் பரவியதும். பலர் நேருக்கு நேராக சாமியானவரை கிழித்து தொங்க விட்டனர். அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் கொடுக்கிறேன், என தனியாக வசூல் வேட்டை நடத்திவிட்டு கடைசியில அரைகிலோ அரிசி கொடுத்துவிட்டு, நிவாரணம் கொடுத்துவிட்டதாக கணக்கு காட்டினாராம். இதெல்லாம் தெரிந்ததும் பதவியை வைத்து ஆளும் கட்சியிடமும், மக்களிடம் வசூல் பார்க்கும் தலைவரை வசூல் தலைவர் என பெயர் வைத்து அழைக்கின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்