SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுகொள்ளப்படாத ஐகோர்ட் உத்தரவு: செங்கல் சூளைக்காக அழிக்கப்படும் பனை மரங்கள்: மாநில அரசு கவனம் செலுத்துமா?

2020-07-06@ 13:56:55

கடையம்: செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அழிக்கப்படும் அவலம் தொடர்கிறது. இதைத் தடுக்கவும், பனைகளை பெருக்கி பனை பொருளாதாரத்தை  மேம்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. தென்மாவட்டங்கள் முழுவதும் தரிசு நிலங்கள் தொடங்கி தேரி நிலங்கள் வரை பரந்து வளர்ந்து நிற்கின்றன பனை மரங்கள். தமிழகத்தில் கோடிக்கணக்கில் வளர்ந்திருந்த பனைமரங்கள் தற்போது லட்சங்கள் என்ற எண்ணிக்கையாக குறைந்து விட்டன. செங்கல் சூளைகளுக்காகவும், விறகு, வீட்டு உபயோகத்திற்காகவும் பனைமரங்கள் வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதுதவிர பனைமரங்களை பராமரிக்க தேவையான ஊழியர்கள் கிடைக்காததாலும் பட்டா நிலங்களில் இருந்த பனை மரங்கள் கூட பட்டுப்போகத் துவங்கின.

சமீபகாலமாக இளைய சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மனமாற்றத்தால் குளக்கரை, சாலையோரம் உள்பட பல இடங்களில் பனைமரங்கள் நடப்பட்டு வருகின்றன. இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி ஏராளமானோர் பனைமர வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பனைமரங்கள் வெட்டி கடத்தப்படுவது இன்றும் தொடர்வது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த தாட்டான்பட்டி பிள்ளைகுளத்தில் மானாவாரி குளக்கரை, அரசு புறம்போக்கு இடத்தில் நின்றிருந்த 400க்கும் மேற்பட்ட பனைமரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம கும்பலால் வெட்டி சூறையாடப்பட்டன. இதுகுறித்து பனை வாழ்வியல் இயக்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இளைய பாரதம்  அமைப்பினர் சம்பந்தப்பட்ட விஏஓ உள்ளிட்டோர் மீது அளித்த மனுக்கள் விசாரணையில் உள்ளன.

இதே போல் கடையம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டப்பட்டு லாரிகளில் செங்கல்சூளைகளுக்கு கொண்டு செல்லப்படும் அவலம் தொடர்கிறது. இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கஜா புயல் தாக்கத்தின்போது பனைமரங்கள் மட்டும் சேதம் அடையாமல் இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழக அரசு கடலோர மாவட்டங்களில் பனைகளை நடவுச்செய்ய முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கிய நிலையில், மற்றொரு புறம் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில சின்னத்தை அவமதிக்கும் வகையிலும் பனைகளை சமூக விரோத கும்பல் வெட்டிக்கடத்தி வருவது வேதனை தருவதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே தமிழரின் அடையாளமான பனைகளை வெட்டினால் தண்டனை என்ற அதிரடி வழிகாட்டுதல் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி மாதத்தில் வழங்கியுள்ளது. இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு பனை வாழ்வியல் இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர். எனவே, தேசிய மற்றும் மாநில சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள யாவற்றையும் அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தேசிய விலங்கான புலி, தேசிய பறவையான மயில், மாநில விலங்கான வரையாடு, மாநில பறவையான மரகதப்புறா ஆகியவற்றை வேட்டையாட தடையும்,

தண்டனைச்சட்டமும் இருக்கும் நிலையில் மாநில மரமான பனைகளை சிதைப்பதை அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. பனைகளை பெருக்கி பனை பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு இயற்கை மற்றும் பசுமை ஆர்வலர்கள் மத்தியில் பலமாக
எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-10-2020

  01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • supersonic30

  இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!: 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது..புகைப்படங்கள்..!!

 • up30

  உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

 • elephant30

  போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

 • newyark30

  கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்