SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லீவு போட்டதால் சுகாதாரத் துறை செயலாளரை தூக்கியடித்த விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-05@ 00:21:04

‘‘புதுச்சேரியின் பவர்புல் மேடம் இன்னும் பவர் காட்டுகிறாராமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் கடந்த காலங்களில் முதல்வர் பரிந்துரைத்து அதன் பின்னரே அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. யாருக்கு அதிகாரம் என நீதிமன்றம் வரை முட்டிய மோதியதில் எல்லாம் வீணாகிப்போச்சுதாம்...  இப்போது முதல்வருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை எப்போது எந்த துறைக்கு மாற்றுகிறார்கள் என்று கூட தகவல் சொல்வதில்லையாம். பவர்புல் பெண்மணி, அதிரடியாக அதிகாரிகளை கண்ட இடத்தில் தூக்கி வீசுகிறாராம். ஐஏஎஸ் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லையென தகவல் வந்தால், அவர்களிடமிருந்து துறைகள் உடனே பறித்து, வேறு ஒருவருக்கு கொடுத்துவிடுகிறாராம்.  நீட்டிய இடத்தில் ஒப்புதல் அளிக்க தலைமை செயலரும் தயாராக இருக்கிறார், வேறு என்ன செய்ய முடியும்.  சுகாதாரத்துறை செயலர் பொறுப்பை வகித்து வந்த பிரசாந்தா கொரோனா நேரத்தில் நீண்ட விடுப்பை போட்டுவிட்டு ஊருக்கு போனாராம். அவர் நோய் தொற்று அபாயத்தில் பயந்து கொண்டு சென்றதாக பரவலாக புரளி கிளப்பிவிட்டனர்.

இதில் கடுப்பான பவர்புல்பெண்மணி அந்த துறையின் பொறுப்பை மருத்துவம் படித்த கலெக்டருக்கு கூடுதலாக கொடுத்துவிட்டார். தகவல் கேள்விப்பட்ட பிரசாந்தா வேகமாக மீண்டும் பணியில் சேர  ஓடிவந்தாராம். அமைச்சருடன் கோவிட் மருத்துவமனைக்கு கூட  ஆய்வுக்கு போனாராம்.  பவர்புல் பெண்மணியோ, நீங்க திரும்பி வந்தாலும் உங்களுக்கு சுகாதாரம் இல்லை. ஒன்றும் இல்லாத சிறுபான்மையினர் நலம், வனத்துறையை பார்த்தால் போதும் என ஓரங்கட்டிவிட்டாராம்.. லீவு போட்டது ஒரு குத்தமா.. என செயலர் புலம்புகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நூறு நாள் திட்டப் பணியில் வில்லங்கம் நடக்குதாமே..’’‘‘உலகநாடுகள் மட்டுமில்லாமல், தமிழகத்திலும் அதிகளவில் கொரோனா பாதிப்பால் வேலை இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் வெளியூருக்கு சென்று வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூரிலேயே வேலைக்கு போக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி 100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் கல்லா கட்டி வருகிறார்களாம்.இந்த திட்டத்தில் புதிதாக வேலைக்கு செல்ல விரும்பினால் பதிவேடு அவசியம். அந்த பதிவேடுகள் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பணித்தளப்பொறுப்பாளர்கள் ஒரு அட்டைக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் மட்டுமே புதிய நபர்களுக்கு அட்டை வழங்குகிறார்களாம்.

ஏற்கனவே கொரோனாவால் வேலை இழந்த நிலையில் 100 நாள் திட்டத்துக்கும் லஞ்சம் கொடுத்துத்தான் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஏழை மக்கள் புலம்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற லஞ்சம் பெறும் பணித்தளப்பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறப்பு எஸ்.ஐ.க்களுக்கு எல்லா நாளும் தீபாவளி என்கிறார்களே.. அது என்ன விஷயம்..’’‘‘மாங்கனி மாநகரில் கருப்பான ஊரை சேர்ந்த ஸ்டேசனில் 2 சிறப்பு எஸ்ஐக்களுக்குத்தான் எல்லாநாளும் தீபாவளி. அந்த வழியாக கேரளாவுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுமாம். ஐநூறு வெட்டினால் தான் மாடு நடக்குமாம். அதே நேரத்துல எல்லை தாண்டியும் வசூல் வேட்டை நடத்துறாங்களாம். தொப்பூர் சோதனை சாவடியில் இருக்கும் போலீஸ் நண்பர் ஒருவர் மாடு லாரி வரும் தகவலை கொடுப்பாராம்.  பக்கத்து மாவட்ட எல்லைக்குள் சென்று மேம்பாலத்துக்கடியில் போய் நின்னுக்கிட்டு வாங்க வேண்டியத வாங்கிட்டுத்தான் வருவாங்களாம். இப்படியே ஒருநாள், மாட்டு லாரியை மடக்க அரசு ஜீப்புல வேகமா போயி பஸ்சுல மோதிட்டாங்களாம். என்ன செய்வது என்று தெரியாம தவிச்ச சிறப்பு எஸ்.ஐக்கள், போலீஸ் ஜீப்புல பஸ் மோதிடிச்சு என்று பிளேட்ட மாத்திட்டாங்களாம். வெளிப்படையா நடக்கும் இந்த வசூல், நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்?  இல்லை என்றால் எதற்கும் ஒரு விலை இருக்கத்தானே செய்யும் என்று சிரிக்கிறார்கள்  நேர்மையான காக்கிகள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறு ஏதும் வில்லங்க தகவல் இருக்கா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சிறிய அளவில் கடை அமைத்து, பின்னர் மெதுமெதுவாக அந்த இடத்திலேயே கட்டிடம் கட்டி சிலர் தொழிலும் நடத்துகின்றனர். சிலர் இந்த கடைகளை பிறருக்கு வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை ‘ஜாலி’யாக அனுபவித்தும் வருகின்றனர். முழுக்க முழுக்க ‘ஆளும் கட்சியினரின்’ அதிகார பலத்திற்குள்தான் இந்த இடங்கள் சிக்கிக் கிடக்கின்றன.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருக்கும் அத்தனை இடங்களையும் கணக்கிட்டு மாநகராட்சி மீட்கவேண்டும். மேலும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி மேலே எழுந்து வரும் வகையில், புறம்போக்கு இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டால், நல்ல வருமானம் கிடைக்கும். உள்ளூர்க்காரர்களுக்கும் வியாபார வாய்ப்பு பெருகும். ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றி உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். ஆளும்கட்சியினருக்கு அடிபணிந்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்காவிட்டால், மாநகராட்சியை மீட்டுக் கொண்டு வருவது ரொம்பவும் சிரமமாகிவிடும் என்று திண்டுக்கல் பகுதி ஒட்டுமொத்த மக்களும் முணுமுணுத்து வருகின்றனர். இந்த மக்களின் முணுமுணுப்பு, மாநில அரசின் காதுகளைச் சென்று சேர்வது மிக அவசியம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்