SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழு ஊரடங்கால் முடங்கிய சென்னையில் காற்று மாசு குறைந்தது: மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தகவல்

2020-07-05@ 00:06:07

* முதலாம் ஊரடங்கு காலத்தில் 78.6 சதவிகிதம் காற்று தரக் குறியீடு நல்ல நிலையில் இருந்ததாகவும், இரண்டாம் ஊரடங்கு காலத்தில் 94.7  சதவிகிதம் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்ததாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை: முழு  ஊரடங்கால் சென்னை மக்கள் முடங்கியுள்ளதால், மீண்டும் காற்றில் பரவும் மாசு குறைந்து மக்கள் சுவாசிப்பதற்கு ஏற்ற வகையில்  மாறியிருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த  மார்ச் 21ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவலில் நகர் பகுதிகளில், உலக அளவில் 2ம் இடம்  பிடிக்கும் அளவுக்கு சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை கடும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  பல்வேறு பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

பலர் வேலை இழந்து தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். பலர் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமலும், அன்றாட கூலி  தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் அளவுக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இப்படி எதை எடுத்தாலும், எந்த துறையை எடுத்தாலும்  மிகுந்த பாதிப்பை சந்தித்து வரும் சூழ்நிலையில், சில நல்லது இந்த ஊரடங்கால் நிகழ்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு என்பது  உலக அளவில் ஒரு பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், சென்னையில் மக்கள் நடமாட்டம் மீண்டும் முழுமையாக  கட்டுப்படுத்தப்பட்டதால் கடந்த 15 நாட்களாக காற்று மாசு குறைந்து நல்ல காற்றை சுவாசிக்கும் அளவுக்கு வந்துள்ளது.  தளர்வுகளுடன் ஊரடங்கு  இருந்த நிலையில், தற்போது கடந்த மாதம் ஜூன் 19ம்தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 சென்னையை பொறுத்தவரை சராசரியாக தினந்தோறும் 30 லட்சம் வாகனங்கள் இயக்கப்படும். தற்போது முற்றிலுமாக இந்த போக்குவரத்து  முடக்கப்பட்டுள்ளது. ஒருசிலர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வெளியில் வருகின்றனர். இதனால் சென்னை  மாநகரில் உள்ள சாலைகளில் மிகவும் குறைவான வாகனங்களே செல்கின்றன.  ஆங்காங்கே போலீசார் செக் போஸ்ட் அமைத்துள்ளதால், மக்கள்  வெளியில் வருவது குறைந்து முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. சென்னையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றின் மூலம் பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

குறைந்த பணியாளர்களுடன் மீண்டும் இயக்கப்பட்ட இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை குறைந்துள்ளது.  இதுபோன்ற காரணங்களால் சென்னையில் முன்னெப்போதும்  இல்லாத வகையில் காற்றின் மாசு குறைந்துள்ளது. முன்னதாக காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது 4  இடங்களில் அதற்கான மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலமாக தினசரி காற்றின் தரம் கண்காணிப்படும். இவை முறையே ஆலந்தூர், மணலி  கிராமம், மணலி, வேளச்சேரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.  

தற்போது இவ்விடங்களில் எடுக்கப்படும் காற்றின் அளவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், முதல் ஊரடங்கிற்கு முந்தைய  காலமான மார்ச்  1 முதல் மார்ச் 23 வரையிலான காலத்தில்  காற்று தரக் குறியீடானது சராசரியாக 61.5 ஆகவும், முதலாம் ஊரடங்கு காலமான  மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான காலத்தில் காற்று தரக் குறியீடு 42.3 ஆகவும், இரண்டாம் ஊரடங்கு காலமான ஏப்ரல் 15 முதல்   மே 3  வரையிலான காலத்தில் காற்று தரக் குறியீடு 29.3 ஆகவும் குறைந்திருந்தது தெரியவந்தது. மூன்றாம் ஊரடங்கானது சில தளர்வுகளுடன்  அமல்படுத்தப்பட்டதால் அந்த நாட்களில் மட்டும் காற்று தரம் 34.3 ஆக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு முந்தைய காலத்தில் 37.4 சதவிகித நாட்கள் மட்டுமே காற்று தரக் குறியீடானது நல்ல நிலையில் இருந்ததாகவும் முதலாம் ஊரடங்கு  காலத்தில் 78.6 சதவிகிதம் காற்று தரக் குறியீடு நல்ல நிலையில் இருந்ததாகவும், இரண்டாம் ஊரடங்கு காலத்தில் 94.7 சதவிகிதம் காற்றின் தரம்  நல்ல நிலையில் இருந்ததாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வாகன  போக்குவரத்து, தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. இதனால் மீண்டும் காற்று மாசு அதிகரித்த நிலையில், கடந்த ஜூன் 19ம்தேதி முதல் சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் காற்று மாசு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.  அதாவது, காற்று தரக் குறியீடானது ஆலந்தூரில் -47, வேளச்சேரி-78,  மணலி-31, நுங்கம்பாக்கம்-78, கோயம்பேடு 46, பெருங்குடி -57 என்ற அளவிலும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காற்றில் உள்ள 10 மைக்ரான்  அளவு கொண்ட நுண்துகள்கள், கார்பன்மோனாக்சைடு, கந்தக டை ஆக்ஸைடு போன்றவற்றின் அளவும் ஆய்வுக்குட்படுகிறது. அதன் அடிப்படையில்  இந்த முடிவுகள் வெளியிடப்படுகிறது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்