SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக அநீதி

2020-07-05@ 00:05:09

‘‘மண்டல் கமிஷன்’’ என்று எல்லோராலும் அறியப்பட்ட, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம் சரண் சிங் பிரதமராக  இருந்தபோது 1979ல் அமைக்கப்பட்டது. பீகார் மாநில முதலமைச்சராக இருந்த பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் அதன் தலைவராக இருந்தார். 1980ல்  சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 51% வாழ்வதாகவும், அவர்களுக்கு  கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 10 ஆண்டுகள் கழித்து
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, 1990 ஆகஸ்ட் மாதத்தில் இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு  அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பின் நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின்தான், இந்த இடஒதுக்கீடு அமலானது. வேலை வாய்ப்பில் இதை அமல்படுத்த 10 வருடம் ஆனது.  கல்வியில் அமல்படுத்த 17 வருடங்கள் ஆனது. தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இந்த 27 சதவீத இடஒதுக்கீடு, ₹8  லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அதற்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் குடும்பங்கள்  கிரீமிலேயர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை. ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும்  சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில்  கொள்ளப்பட வேண்டும் என்று 1993ல் மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணை தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில்தான் இதுவரை  இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜ அரசு இடஒதுக்கீடு விவகாரத்தில் தனது சித்து வேலையை காட்டத் துவங்கி உள்ளது. கிரீமிலேயர் விவகாரத்தில்,  பிப்ரவரி மாதம் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க  கணக்கில் கொள்ளப்போவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசு ஊழியர்கள், பெரு நகரங்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தாய், தந்தையரின் குழந்தைகளுக்கு இந்த புதிய நடைமுறையால் வாய்ப்பு பறிபோகும்  என்பதால், மத்திய அரசு  சமூக நீதிக்கு எதிரான இந்த அறிவிப்பை அமல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.  தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தது.

கொரோனா பாதிப்பு துவங்கியதால் இந்த விவகாரம் அத்தோடு மக்கள் மனதில் இருந்தும் மறந்துபோனது. ஆனால், ஆட்சியாளர்கள் திரைமறைவில்  செயல்பட்டு வந்துள்ளனர். இதுவரை, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்  திடீரென தனது எதிர்ப்பை கைவிட்டு, அரசின் முடிவை ஆதரித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோரின் நலன் காக்க வேண்டிய ஆணையமே, அவர்களுக்கு  எதிராக செயல்படுவது சரியல்ல. பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் சரி, மத்திய அரசும் சரி தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  கிரீமிலேயர் கணக்கில் சம்பளத்தையும் கணக்கில் கொள்ளும் முடிவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் போராடி  பெற்ற இடஒதுக்கீடு பெரும்பாலானவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். சமூக நீதி மறைந்து சமூக அநீதி தலைதூக்கிவிடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்