SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடும் தண்டனை தேவை

2020-07-04@ 02:23:28

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்ணினத்தை போற்றி பாடிய பாரதி பிறந்த தமிழ் திருநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பது பெரும் சாபக்கேடாக உள்ளது. புதுக்கோட்டை அறந்தாங்கி சம்பவம் கல்நெஞ்சக்காரர்களை கூட கனல் கக்கும் விழிகளுடன் கொதித்தெழ செய்துவிடும் அளவிற்கு மோசமானது. வடமாநிலங்களில் தான் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள், பலாத்காரங்கள் அடிக்கடி அரங்கேறும் சம்பவங்கள் என்றிருந்த நிலையில் தமிழகத்தில் அதுபோன்ற கொடூரங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க எவ்வளவு கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தாலும் அதையும் மீறி கசப்பான சம்பவங்கள் நடந்து கொண்டே இருப்பது சமூக அவலமாகவே பார்க்கப்படுகிறது.

கைபேசியில் இணையத்தை திறந்தால் கணக்கின்றி உலா வரும் ஆபாச படங்களின் தாக்கம் வயது வித்தியாசமின்றி அனைவரது எண்ணங்களையும் மிக கீழ்த்தரமாக்கிவிட்டது. மது, கஞ்சா போன்ற போதைகள் இந்த எண்ணங்களுக்கு தீனி போடுகிறது. ஆபாச இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து அதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்தாலும், முழுமையாக இணையதளத்தில் இருந்து அவற்றை நீக்க முடியவில்லை. குழந்தைகள் ஆபாசபடங்களை டவுன்லோடு செய்து பார்த்து ரசிக்கும் நபர்களை பிடிப்பதற்கு என்றே காவல்துறை பிரத்யேகமாக செயல்பட்டும் அந்த தவறை செய்பவர்களுக்கு பயம் வந்ததாக தெரியவில்லை.

ஒரு விஷயத்துக்கு ஒரு வாலிபன் அடிமையாகும் போது அது பல்வேறு கெட்டபழக்கவழக்கங்களையும் கூடவே அழைத்துவந்துவிடும். அதுபோன்று தான் சமூகத்தில் ஒரு மோசமான சம்பவத்தை அனுமதித்துவிட்டால் அது பல்வேறு கிளை சம்பவங்களுக்கு காரணமாகிவிடும். எனவே சிறுமிகளுக்கு எதிரான பலாத்காரங்களுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனையை குற்றவாளிகளுக்கு நிறைவேற்ற வேண்டும். டெல்லி நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எத்தனை சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ‘தாமதமான நீதியும், மறுக்கப்பட்ட நீதியே’ என்று சட்டம் சொல்கிறது.

பாதிக்கப்பட்ட பெற்றோரின் நிலையில் இருந்து ஒவ்வொரு குடிமகனும் இச்சம்பவத்தை சிந்தித்துபார்க்க வேண்டும். எங்கோ, யாருக்கோ நடந்தது போன்று எளிதாக கடந்துவிட்டால் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாகிவிடுவோம். மகளிர் அமைப்புகள் இதற்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெற்றோருக்கும், இறந்த சிறுமிக்கும் நீதியை வென்றெடுத்து தரவேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் மட்டுமின்றி இச்சமுதாயம் ரௌத்திரம் பழக சொல்லித்தர வேண்டியது அவசியம். காமம் என்ற போதை தலையில் ஏறிவிட்டால் நாட்டுக்கே பெரும்கேடாக அது அமைந்துவிடும். இயற்கை பொங்கி எழுந்து கொரோனா போன்ற கோர முகத்தை காட்ட தொடங்கிவிடும்.பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் வலுவான சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசும், சட்டமும் இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. பலாத்கார வழக்குகளில் விசாரணையை துரிதமாக முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கினால்  மட்டுமே சட்டத்தின் மீது பயம் ஏற்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்