SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பு பணி ஊழியர்களுக்கு 2 மாசமா சம்பளம் போடாத அவலத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-04@ 01:36:53

‘‘கொரோனா ஒழிப்பு பணியில ஈடுபட்டிருக்கிற தற்காலிக ஊழியர்களுக்கு 2 மாசமா சம்பளம் தரலை... தெரியுமா...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அட கஷ்ட காலமே... சொல்லு கேட்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனாவுல கோட்டை விட்ட தமிழக அரசு, இப்போ எதைத் தின்னா பித்தம் தெளியுங்கிற நிலைமையில இருக்கு... எதையும் முறையாக முன்கூட்டி திட்டமிடாம செய்யுறதால பல பிரச்னைகளில் அரசு மாட்டிக்கிட்டு முழிக்குதாம்... சமூக பரவலானத கூட ஒத்துக்காத இந்த அரசு, கொரோனா பரவலை தடுக்க 2,230 சுகாதார ஆய்வாளர்களை தற்காலிகமாக ஏப்.26ல் நியமிச்சதாம்... மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம், ஆனா ஒரு வருஷம் தான் வேலை தருவோங்கிற ‘ஸ்ட்ரிக்ட் கண்டிஷனோட’ வேலைக்கு சேர்த்தாங்களாம்.... சும்மா ஒண்ணும் வேலைக்கு சேர்க்கலையாம்... 50 முதல் 60 லகரம் வரை வாங்கிட்டுத் தான் சேத்தாங்களாம்’’ என்றார்.


‘‘இது வேறய்யா...?’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமாம்பா... வேலைக்கு சேர்ந்து 2 மாதம் ஆகியும் இந்த ஊழியர்களுக்கு சம்பளம் தரலையாம்... இதனால விரக்தியடைந்த பணியாளர்கள், கொரோனா தடுப்புப்பணியில வேகம் காட்டுறதில்லையாம்... இதனால வைரஸ் தொற்று, ரொம்ப வைரலா பரவுதாம்... களப்பணியில் முன்னால இருக்கிற சுகாதார ஆய்வாளர்களுக்கு சொன்ன சம்பளத்தை முறையா மாசம் தவறாமா போடணுமா, வேண்டாமா? நிரந்தரம் இல்லாத வேலைக்கு, லட்சம் வரை கொடுத்துட்டு, இப்ப கை காச போட்டு தினசரி செலவு செஞ்சிட்டு, சம்பளம் எப்ப வரும்னு புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்’’ என்றார்.

‘‘ரேஷன் பொருட்கள் சப்ளையில் குளறுபடி நடக்குதாமே..’’
‘‘திருவண்ணாமலை மாவட்டத்துல, ரேஷன் பொருட்களை நம்பி வாழும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு நாளும் ரேஷன் கடைங்க முன்னாடி நீண்ட வரிசையில் நிக்குற கூட்டமே அதுக்கு சாட்சி. ஊரடங்கு அமலில் இருக்குறதால வேலையில்ல, கூலியும் இல்ல. இதனால ரேஷன்ல கொடுக்குற பொருளை மட்டுமே நம்பி, லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்குது. இதுல, நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு வழங்குற அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களோட அளவு கடந்த சில மாசமா குறைவா வருதாம். இதனால விற்பனையாளருங்களே அதிர்ச்சியடைஞ்சிருக்காங்க. ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 5ல் இருந்து 7 கிலோ வரைக்கும் பொருட்கள் குறைவா இருக்குதாம். ஏற்கனவே, ரேஷன் கடைகள்ல 80 முதல் 85 சதவிதம் கார்டுகளுக்குதான் பொருட்கள் சப்ளை செய்றதா புகார் சொல்றாங்க.

இப்படி ஒரு படி மேல போய், எடை மோசடியும் தொடங்கிடுச்சாம். இதுகுறித்து புகார் தெரிவிச்சா, அதிகாரிகள் எங்களை மிரட்டுறாங்கன்னு விற்பனையாளருங்களே குமுறிவர்றாங்க. ரேஷன் கடைகள்ல பொருட்கள் இறக்கும்போது எடை போட்டு சரிபாத்து இறக்குவதில்லை. அவசர அவசரமாக  இறக்கிட்டு போய்டுறாங்க. பொருட்களை விநியோகிக்கும் போதுதான், பற்றாக்குறை தெரியுது, இதுக்கு முன்னாடியெல்லாம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வெளியே தெரியல. இப்போ,  ஊரடங்குனால பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் பொருட்களை நம்பி வர்றாங்க, எப்படி சமாளிக்குறதுனு தெரியலையேனு விற்பனையாளர்கள் வேதனைபடுறாங்களாம். மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்கனும்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவை மாநகராட்சி விவகாரம் இருக்கிறதா சொன்னியே..’’
‘‘கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் இரண்டெழுத்து பெயர் கொண்ட ஒரு உதவி கமிஷனர் பணிபுரிகிறார். இவர், கடந்த 2015ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரே மண்டலத்தில் பணிபுரிகிறார். பணி ஓய்வுபெறும் வயதை ஏற்கனவே எட்டி விட்டார். ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, மூன்றாவது வருடமாக மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு, முறைப்படி ஓய்வு கொடுக்காமல், தொடர்ந்து 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்படுவதால், இவருக்கு அடுத்த நிலையில், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் அலுவலர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பணி நீட்டிப்பு வழங்குவது தவறான முன்னுதாரணம், இதை ரத்து செய்ய வேண்டும் என சக அலுவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நடவடிக்கை, மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இவரது பதவிக்காலம், கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால், பதவி நீட்டிப்பு வழங்கி, ஜூலை 3ம் தேதிதான் அரசாணை வந்துள்ளது. இடைபட்ட மூன்று நாட்கள் எந்த கணக்கு? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த மூன்று நாட்களும் இவர் பணிபுரிந்துள்ளார். கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார். இது, முற்றிலும் விதிமீறல் என மாநகராட்சி அலுவலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சட்டத்திட்டம் எல்லோருக்கும் சமம் என்பது வெறும் பேச்சளவில் மட்டும்தான் உள்ளது, அரசியல் வலு உள்ளவர்கள் மட்டும் காரியம் சாதிக்கிறார்கள்... நியாயவாதிகள் தோற்றுப்போகிறார்கள்... என மாநகராட்சி அலுவலர்கள் புலம்பி தள்ளுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்