SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயரும் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2020-07-03@ 00:22:46

சென்னை: சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற 2 அப்பாவிகளை கொடூரமாக கொலை செய்தவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டினால், உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.ஆட்சி பலத்தை, அதிகார பலத்தை, போலீஸ் பலத்தை காண்பித்து கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற, கடந்த ஒருவார காலமாக அ.தி.மு.க. அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. ஜெயராஜ் குடும்பத்தின் வற்றாத கண்ணீரும், மக்கள் போராட்டமும், வணிகர் பெருமக்கள் ஒன்றுபட்டு நடத்திய கடையடைப்பும், உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களின் முன்னெடுப்பும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த  அழுத்தங்களும், நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த அரிய உத்தரவுகள், ஊடக ஆதாரங்கள் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டதால், அ.தி.மு.க. அரசு சட்டப் பொறியில் சிக்கிக் கொண்டது.

பொது மக்களின் இந்த ஒருங்கிணைந்த போராட்டம் இல்லாமல் போயிருக்குமானால், ‘‘செங்கல்லை விழுங்கிவிட்டுச் செறித்துவிட்டது’’ என்று சொல்லி இருப்பார் முதலமைச்சர். இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர்,  இரண்டு உதவி ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும், இரண்டு காவலர்களான முருகன், முத்துராஜ் ஆகியோரும்   கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. புதிதாக முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது கொலைகளுக்கும் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.   அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்கு காட்டுவதாக இருக்கக் கூடாது. கண்துடைப்பு கைதாக இது மாறிவிடக்கூடாது. நீதிமன்றமும் வழக்கின் தடம் மாற்றத்தை அனுமதிக்காது. ஏன் இதனைச் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், இந்த கொடும் சம்பவத்தின்  தொடக்கத்திலிருந்தே  இதனை எப்படியாவது மறைக்க நினைத்தது தமிழக அரசு. இது ‘லாக் அப் மரணமே அல்ல’ என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன் பங்குக்கு மற்றொரு தீர்ப்பைச்  சொன்னார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதியரசர்கள் உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, சாத்தான்குளம் போலீசார் மிரட்டினார்கள்.  மாஜிஸ்திரேட் துணிச்சலாக இதுகுறித்து உயர் நீதிமன்றப் பதிவாளருக்குப் புகார் கொடுத்தார். இந்த ஆட்சியில் அப்பாவி மக்கள் மட்டுமல்ல, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இவ்வளவும் ஆட்சி மேலிடத்தின் அனுசரணை  இல்லாமல், உயர் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு  இல்லாமல், சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது. இத்தோடு கடமை முடிந்ததாக தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது. யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. இரண்டு பேர் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ‘பிரெண்ட்ஸ் ஆப் போலீசை’ சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.  இந்த வழக்கை முறையாக, சட்ட நெறிமுறைகளின்படி, நீதிநியாய வழிமுறைகள் எள்ளளவும் பிசகிடாமல்,  அரசு தீவிரமாக எடுத்து நடத்த வேண்டும். குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.முதலமைச்சரின் கடமை இத்துடன் முடிந்துவிட்டதாக அவரோ மற்றவர்களோ கருதிக்கொள்ளக் கூடாது. கடமையும் பொறுப்பும் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து, கண்ணியம் மேலோங்க நடந்து கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பெண்கள், சிறுமிகள், பொதுமக்கள் பாதுகாப்பு மீது அக்கறை காட்டுங்கள்: அரசுக்கு வேண்டுகோள்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறிருப்பதாவது: கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் படுவேகமாக பரவி வருவது கவலையடையச் செய்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஜூன் 29ம் தேதி மாலையில் விளையாடச் சென்ற சிறுமி, இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் தேடி அலைந்து ஜூலை 2ம் தேதி காலையில் உயிரற்ற உடலினை கண்டெடுத்துள்ளார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரிய வந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் - சிறுமிகள் - பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும். இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

 • choco-fac-fire-27

  அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்