SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்

2020-06-29@ 15:42:33

நன்றி குங்குமம் தோழி

உலகெங்கிலும் ஊரடங்கு மெதுவாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு நம்மைவிட்டு முழுவதுமாய் நீங்கவில்லை.ஊரடங்கின் போது மக்கள் பெரிதும் ‘மிஸ்’ செய்த அனுபவம், நண்பர்களுடன் ஜாலியாக ஹோட்டல்களிலும் கஃபேக்களிலும் சென்று அரட்டை அடிப்பதைத்தான். இதனால் ஊரடங்கிற்குப் பின் பலரும் நண்பர்களை சந்திக்க உணவகங்களுக்கு படை எடுப்பார்கள் என்பதால், பல ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பல வணிகங் களில், உணவகங்களுக்கும் பெரிய இழப்பு உண்டு. கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க பலரும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இருந்தும், ஒரு சிலர் இன்றும் ஹோட்டல் உணவையே நம்பி இருக்கின்றனர். இதனால் ஊரடங்கு  நேரத்திலும்  ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது.

இப்போது ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு, மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பல நாடுகளின் அரசும் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், உணவகங்கள் குறைந்த வாடிக்கையாளர்களுடன் இயங்க தயாராகி வருகின்றனர்.

ஹோட்டலுக்குள் நுழையும் முன் உடல் வெப்ப அளவை பரிசோதிப்பது, மாஸ்க் அணிவது, ஹாண்ட் வாஷ்/சானிடைசர் வழங்குவது எல்லாமே அத்தியாவசிய அடிப்படை விதிமுறைகளாகிவிட்டன. இது தவிர, உலகில் பல நாடுகளிலும், உணவகங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதுமையான முயற்சிகள் செய்துவருகின்றன.

குறைந்த பட்சம், இரண்டு மீட்டர் இடைவெளியை கடைப்பிடித்து, அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தையும் வழங்க, உணவகங்கள் கண்ணாடி கேபின்கள் முதல் ரோபோக்கள் வரை பல யுக்திகளை பயன்படுத்தி தங்கள் உணவகத்திற்கு மக்களை ஈர்த்து வருகின்றனர்.  

நெதர்லாந்தில் க்ரீன் ஹவுஸ் போன்ற கண்ணாடி அறைகள்,   அலங்கார  விளக்குகள்,  வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த வசதியாக இருக்கைகள் மற்றும் மேசைகளும் அமைத்துள்ளனர்.

தாய்லாந்தில் ஒரு உணவகத்தில். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இருக்கைகளுக்கு மத்தியில் பாண்டா பொம்மைகளை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அமைதியான மனநிலையை கொடுக்க முயற்சித்துள்ளனர். இதே போல பல உணவகங்கள் காலியான இருக்கைகளில் கார்ட்டூன் பொம்மைகளும், கரடி பொம்மைகளும் வைத்து மக்களை உற்சாகப்படுத்துகின்றனர்.    
 
ஜெர்மனியில், ஒரு உணவகத்தில் ஒருவர் மட்டுமே மேசையில் அமர்ந்து உண்ணக்கூடிய நிலைமையில், மக்களின் தனிமையைப் போக்க, மெனிக்குயின் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல, ஆஸ்திரேலியாவில் ஒரு உணவகத்தில், காலியான இருக்கைகளில் மனிதர்கள் உருவத்தில் கார்ட் போட் கட்-அவுட் உருவகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சில உணவகங்கள், ரோபோக்களை பயன்படுத்தி உணவை பரிமாறுகின்றனர். இதன் மூலம் மனிதர்களின் தொடர்பே இல்லாமல் கொரோனா பரவலின் பயமில்லாமல், பாதுகாப்பான மனநிலையுடன் நிம்மதியாக வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம்.

தென் கொரியாவில், மேசைக்கு நடுவே ப்ளாஸ்டிக் அல்லது கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. ஃப்ரான்ஸில், முகக்கவசம் போன்ற வடிவமைப்பில், பிரம்மாண்டமான ப்ளாஸ்டிக் உடற்கவசங்கள் அமைக்கப்பட்டு. இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் ஒரே நாளில் ட்ரெண்டாகி நூற்றுக்கணக்கான உணவகங்கள், இந்த ப்ளாஸ்டிக் ஷீல்டுகளை தேர்ந்தெடுத்து, வடிவமைப்பாளரை அணுகியுள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு உணவகத்தில், குளியல் அறையில் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் திரைச் சீலைகளை, மேசைகளுக்கு நடுவே பொருத்தி
உள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிய கட்டுப்பாடுகள் இல்லாமல், அதே சமயம் பாதுகாப்பாகவும் நண்பர்களுடன் உணவை ருசிக்கலாம்.
வல்லுனர்கள் சிலர், கொரோனாவிற்குப் பின், உணவகங்கள் இனி பெரும்பாலும் திறந்தவெளி இருக்கைகள், ட்ரைவ்-இன் போன்ற வசதிகளை
கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தும் என்கின்றனர்.

இனி உணவகங்களில் சில காலத்திற்கு பெரிய குழுவாக அமர்ந்து சாப்பிட முடியாமல் போகும். ஒரு மேசையில் 4 பேர்  வரை மட்டுமே அனுமதிக்கப்படலாம். உணவகங்களில் இனி ஊழியர்கள் எப்போது மே மாஸ்க்கும், கையுறை களும் அணிவது வாடிக்கை யாகலாம்.

மெனு கார்டுகளும், மொபைல் போனில் பார்க்கும்படியோ அல்லது யாரும் தொடாமல் பெரிய போர்டுகளாகவோ அல்லது ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய விதத்தில் பேப்பர் மெனுக்களாக அச்சிடப்பட்டு வரலாம். இனி பல பேர் பகிர்ந்து உண்ணும் உணவுகள் இல்லாமல், எளிமையான உணவுகளே சில காலம் இருக்கும் எனவும் கணிக்கின்றனர்.   

கொரோனா பாதிப்பிற்குப் பின், மக்கள் உணவகங்களுக்குச் செல்வது குறையும் என்று நினைத்ததற்கு மாறாக, வழக்கமாக உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களில் எழுபது சதவீத மக்கள், மீண்டும் ஊரடங்கிற்குப் பின் உணவகங்களுக்குச் செல்வார்கள் என்றே கூறப்படுகிறது.

மால்கள், திரையரங்குகளுக்குச் செல்ல மக்கள் தயங்கினாலும் உணவகங்களுக்கு செல்வதை அவர்கள் தவிர்க்கப்போவதில்லை என்றே இதன் மூலம் தெரிகிறது. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சுத்தமான பாது காப்பான உணவையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அரசாங்கம் வழங்கும் சிறப்பு விதிமுறைகளை பின்பற்றி சமையலறை முதல் கழிவறை வரை, உணவகத்தை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்வதை  இனி  ஒவ்வொரு உணவகமும் உறுதி செய்ய வேண்டும்.

ஸ்வேதா கண்ணன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்