SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கும் இளைஞர்கள்

2020-06-26@ 14:13:30

* அசம்பாவிதங்களுக்கு வழி வகுக்கும் அபாயம்
* மாயவலையில் சிக்குவதால் மன உளைச்சல்

பென்னாகரம்: கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் அசம்பாவிதங்களுக்கும் வழிவகுத்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உலகநாடுகளை பீதியில் உறையவைத்துள்ள கொரோனா, மனித குலத்தின் வாழ்க்கை முறையை அடியோடு மாற்றியுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து, வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இளைஞர்கள் ஆன்ட்ராய்டு போன்களோடு வீட்டில் பொழுதை  கழித்து வருகின்றனர். மார்ச் 24ம்தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஆன்ட்ராய்டு செல்போன்களே, அவர்களது உலகம் என்று மாறிவிட்டது. இப்படி தொடர்ச்சியாக ஆன்ட்ராய்டு போன்களோடு பொழுதை போக்குவதால், உடல்நலம் குன்றி,மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, சமீபகாலமாக ஆன்ட்ராய்டு செல்போன்களில் பணம் சம்பாதிக்கிறோம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டங்களில் மூழ்கியிருப்பது,பெரும் அசம்பாவிதங்களுக்கு வழிவகுத்து வருகிறது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.குறிப்பாக இளைஞர்களை குறி வைத்து தனது மாயவலையை விரித்துள்ளது ஆன்லைன் சூதாட்டம்.தற்போது சமூக வலைதளங்களில் ஆன்லைனில் ரம்மி விளையாடுங்கள்,லட்சக்கணக்கில் பணத்தை வெல்லுங்கள் என்று விளையாட்டு வீரர்களும்,  பிரபல நட்சத்திரங்களும் அழைப்பு விடுத்து ஆசை காட்டுவதால்,இளைஞர் பட்டாளம் தன் வசமிழந்து, இந்த மாயவலையில் சிக்கிக் கொள்கிறது.

முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு,போனசாக பணம் தருவதாக இந்த நிறுவனங்கள் ஆசை காட்டுகின்றன. வேலையின்றி வீட்டில் வெறுமனே பொழுதை கழிப்பதாக நினைக்கும் இளைஞர்கள்,தங்களது வெறுமையை போக்கி கொள்ளவும்,சூதாட்டம் மூலம் பெரும் பணத்தை சம்பாதித்து தங்களது வீட்டின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் தவறாக கருதி, இந்த புதைகுழியில் விழுகின்றனர்.
விளையாட தொடங்கும் ஆரம்பத்தில்,சிறிய அளவில் பணத்தை வெல்லும் இளைஞர்கள், நாளடைவில் அதிக பணத்தை கட்டி விளையாடும் போது,தோல்வியடைவதை தவிர்க்கவே முடியாது. அதற்கு ஏற்பவே இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால்,அதனை உணருவதற்குள் பெரும்பாலான இளைஞர்கள்,இந்த சூதாட்டத்திற்கு அடிமையாகி இருப்பார்கள் என்பதால், விட்டதை பிடிக்கிறேன் என்ற பெயரில் மேலும் பணத்தை கட்டி ஏமாந்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கையில் இருப்பு முழுவதும் கரைந்துபோன பிறகு, கடன் வாங்கியாவது ஆன்லைனில் சூதாடுவார்கள். இதனால், கையில் உள்ள பணத்தையும் இழந்து  கடன்காரர்களாகும் நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில், பணத்தையும், மனநலத்தையும் இழந்து நடைபிணமாக திரியும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.  கம்ப்யூட்டர் மயமாகி விட்ட தற்போதைய நவநாகரீக உலகில்,வீடு தேடி வந்து சூதாட்டத்திற்கு அழைப்பு விடுப்பது தடுக்க முடியாத ஒன்றாக மாறியிருப்பது பெரும்  அவலமாக உருவெடுத்துள்ளது.  

நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புற இளைஞர்களும் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி, தங்கள் பணத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே,இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

* இன்றளவும், கிராமபுறங்களில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஐந்தோ,பத்தோ கையில் இருப்பதை வைத்து சூதாடுபவர்களை கண்டால்,போலீஸ் விரட்டி,விரட்டி பிடித்து கைது செய்கிறது. அவர்களிடம் உள்ள பணத்தையும் பறிமுதல் செய்கிறது. ஆனால்,ஊரறிய,உலகறிய சூதாட வரும்படி, ஆன்லைனில் அழைப்பு விடுக்கும் நிறுவனங்கள் மீது போலீசார் மட்டுமல்ல,யாராலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பது விநோதமான உண்மை.
* கிளப்களில் ரம்மி என்ற பெயரில் பணத்தை வைத்து சூதாடப்படுகிறது. அதன் பரிணாம வளர்ச்சி தான்,ஆன்லைன் சூதாட்டம். சராசரியாக 100 பேரிடம் தலா 100 வீதம் வசூலித்து,
ஒரு நபருக்கு மட்டும் 1000 பரிசாக வழங்கி விட்டு,மீதமுள்ள 9 ஆயிரம் ரூபாயை சுருட்டிக் கொள்ளும் தந்திரத்தை ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன
என்பதை அவர்கள் அறிவதே இல்லை.

வேலைக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்
சமூக ஆர்வலர் ஜீவானந்தம் கூறுகையில்,‘‘ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளாகும் இளைஞர்கள், பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாவதோடு,வேலைக்கு செல்வதையும் குறைத்துக் கொள்கின்றனர். அதோடு பணம் இல்லாத போது,வீட்டிலிருந்து பணத்தை திருடுவது,குடும்பத்தில் சண்டையிடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்,’’என்றார்.

போனஸ் என்று கூறி ஆசை காட்டி மோசடி   
இணைய வல்லுநர் பாலாஜி கூறுகையில்,‘‘ஆன்லைனில் ரம்மி எனப்படும் சீட்டாட்டத்திற்கு இளைஞர்களும் சிறுவர்களும் அடிமையாகி பணத்தை இழந்து வருகின்றனர். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய நிறைய போனஸ் முறையில் பணத்தை வழங்கி முதலில் அவர்களை கவர்ந்து வருகின்றனர். பின்பு அவர்களை அதில் பணம் செலுத்தி ஏமாற வைக்கின்றனர். அனைத்து ரம்மி செயலி நிறுவனங்களும் இதனையே கடைபிடிக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 முதல் 10 லட்சம் பேர், தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதனால் பெருமளவில் பணத்தை இழந்து வருகின்றனர்,’’ என்றார்.

கொடுப்பது போல் பறிப்பதே இலக்கு
பட்டதாரி வாலிபர் வினு அன்பழகன் கூறுகையில், ‘‘மதுவிற்கு அடிமையானால் அதிலிருந்து மீள்வது சுலபம். ஆனால் ஆன்லைன் ரம்மியில்  மூழ்கிவிட்டால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும். அதிலிருந்து மீள்வது கடினம்.  கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருகிறேன். முதலில் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணத்தை கட்டி விளையாடி வந்தேன். குறிப்பிட்ட நாள்வரை  ஜெயித்தேன். ஆனால் போகப்போக தோல்வியடைந்து பணத்தை இழந்து வந்தேன். ஒரு கட்டத்தில் கடன் வாங்கி விளையாடினேன். அப்போதும் தோல்வியே கிடைத்தது. இதனால் குடும்பத்தில் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் மிகவும் சிரமப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தேன். பணத்தை கொடுப்பதுபோல் கொடுத்து,அதிகளவில் நம்மிடமிருந்து பறிப்பதுதான் ஆன்லைன் சூதாட்டத்தின் முதல் இலக்கு,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்