SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணம் கிடைக்காது என்பதால் ஆம்புலன்சுகளை நீண்ட கியூவில் நிறுத்தி அனுப்பும் காக்கிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-06-04@ 00:54:00

‘‘ஆபீஸ்ல புகுந்து அதிகாரிகளை மிரட்டிய இலை கட்சி பிரமுகரின் கோர தாண்டவத்தை பார்த்து அதிகாரி அறைக்குள்ளேயே முடங்கிட்டாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜல்லிக்கட்டு ஊர்லதான் இந்த இலை நிர்வாகியின் மல்லுக்கட்டு நடந்தது... மதுரை அருகே அலங்காநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த ‘செல்வத்தின் பெயர் கொண்ட’ பெண் அலுவலரை திடீர்னு மாத்திட்டாங்களாம்... இந்த பெண் அலுவலர், முன்னாள் தலைவரின் கணவரும், இலைக்கட்சியின் முக்கிய பிரமுகருமான ‘திருப்பதி’ மலையின் மறுபெயர் கொண்டவருக்கு சப்போர்ட்டா இருந்தாங்களாம்... இந்த இடமாற்றத்திற்கு, சக பேரூராட்சி பணியாளர்கள் தான் காரணம் என்று கருதிய இலை பிரமுகர், அலுவலகத்திற்குள் நுழைந்து பணியாளர்களை தரக்குறைவாக திட்டிட்டாராம்...
‘‘எனக்கு வேண்டியவரை இடமாற்றம் செய்தவர்கள் யாரும் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.. வெளியேறுங்கள்’’ என்று கடுமையாக அர்ச்சித்தாராம். இந்த சத்தத்தை கேட்ட செயல் அதிகாரி அலுவலக அறையில் பயந்து போய் முடங்கிட்டாராம். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால், தன்னை மாற்றி விடுவார்களே என்ற அச்சத்தில் இலையின் தொல்லையை கண்டு கொள்ளாமல் அடக்கி வாசித்தாராம்... இதனால் பேரூராட்சி ஊழியர்கள் மனவேதனை படறாங்க. மாநில அளவிலான பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்திலும் புகார் தெரிவித்திருக்கிறார்களாம். ஆனாலும், இதைப்பற்றி யாருமே கண்டுக்கலையாம்... அலுவலக சிசிடிவி கேமராவுல பதிவாயிருக்கும்ல... அதை வச்சாவது நடவடிக்கை எடுங்க என்கின்றனராம்... இந்த சம்பவத்தால் பேரூராட்சி பணியாளர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.    
‘‘ கோவையில பெரும் தொகையை ஏப்பம் விட்ட நபரின் ஆட்டத்தை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகரில் ஒன்றான வடவள்ளியில் 17, 18 மற்றும் 19 வார்டுகளில் நடக்கும் மாநகராட்சி முக்கிய பணிகள் பலவற்றை இங்குள்ள முக்கியஸ்தர் ஒருவர் அபகரித்துக்கொண்டாராம். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் போர்வெல் இணைப்பு தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டாராம், இந்த முக்கியஸ்தரின் உதவியாளர். மேலும், கடந்த முறை நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மேற்கண்ட பகுதிகளில் ஓட்டு வாங்கி தருவதாகக்கூறி கட்சியின் மேலிடத்தில் பெரும் தொகை பெற்று ஏப்பம் விட்டு விட்டாராம். இந்த லட்சணத்தில், இவருக்கு, கூட்டுறவு பதவி வேறு கொடுத்திருக்காங்க... விஷயம் முழுவதுமாக தெரிந்தவுடன், பதவி உடனே பறிக்கப்பட்டு விட்டது. வடவள்ளி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் எந்த வேலை நடந்தாலும் இவரது தலையீடு அளவுக்கு அதிகமாக உள்ளதாம். பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கக்கூட இவரது அனுமதியை நாடவேண்டியுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் புலம்புகின்றனர். இப்பகுதி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது. ஆனாலும், இத்தொகுதி எம்.எல்.ஏ.வால் எதுவும் தன்னிச்சையாக செய்ய முடியாது. அவரும், இவரிடம் சரண்டர். எல்லாம் அந்த அப்பனுக்கே வெளிச்சம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மனசாட்சி இல்லாம காக்கிகள் நடந்துக்கிட்டாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ராமநாதபுரம் மாவட்ட காவல் சோதனைச்சாவடி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லையில் பார்த்திபனூரில் பக்கத்துல இருக்காம்... மதுரை - ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் நாள்தோறும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனைச்சாவடியை கடந்துதான் செல்ல வேண்டுமாம்... இங்கு காவல் பணி என்றாலே ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு ரொம்ப குஷியாயிருமாம்... காரணம் இரவு நேரங்களில் செல்லும் சரக்கு லாரிகள் முதல், ‘சரக்கடித்து’ வாகனம் ஓட்டும் பலரிடமும் அதிரடியாக பணம் வசூலிக்கப்படுமாம்... இதை போலீசார் பங்கு போட்டு கொள்வது வழக்கமாம். கொரோனா ஊரடங்கால் பகலிலேயே வாகனங்கள் தணிக்கை என்ற பெயரில் வசூலில் ஈடுபட ஆரம்பிச்சுடுறாங்களாம்.... வாகனங்களை வரிசையாக நிற்கவைத்து சோதனையிடுவதால் அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் செல்வதில் கூட சிரமம் ஏற்படுதாம்... இதுகுறித்து பலமுறை ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்திற்கு புகார் செய்தும் நடவடிக்கை இல்லையாம்... இதனால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நொந்து போய் இருக்காங்களாம்... ‘ஆம்புலன்ஸ்களை சோதனைச்சாவடி, டோல்கேட்டில் நிறுத்தக்கூடாது என்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, மற்ற வாகனங்களை சோதனை என்ற பெயரில் வசூலித்த பிறகே எங்களை அனுப்புகின்றனர். இதனால் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லும் நோயாளிகள் பலருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது’ என புலம்புறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உளவு துறைக்கு ரயில்வே மருத்துவமனை டென்ஷனை கொடுக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு ரயில்வே ஊழியர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு விபத்து மற்றும் படுகாயமடைந்த நபர்களை சிகிச்சைக்கு அழைத்து வருவார்கள். அவர்கள் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் விசாரிக்க சென்றால் அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பதிலே சொல்வதில்லையாம். மேலும் அவர்களிடம் உங்களது உயரதிகாரிகளிடம் சென்று நீங்கள் போலீஸ் துறையை சேர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக ெலட்டர் வாங்கி வாருங்கள். அப்போதுதான் தகவலை தருவோம் என திருப்பி அனுப்புகிறார்களாம். அதுவும் தற்போது கொரோனா சம்பந்தப்பட்ட தகவல்களை சரிவர போலீசாரிடம் வழங்குவதில்லையாம். சமீபத்தில் கூட கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை அனுப்பி வைப்பதற்கு இறந்தவரின் உறவினர்களை படாதபாடு படுத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது என தெரியாமல் ரயில்வே போலீசாரும் உளவுத்துறை போலீசாரும் நொந்துபோய் உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்