SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி, நீலகிரியை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் பீதி; அதிகாரிகள் ஆய்வு

2020-05-31@ 02:53:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, நீலகிரியை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில் எருக்கஞ்செடி, பப்பாளி, அரளி மற்றும் வாழை மரத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படர்ந்து, செடிகளின் இலைகளை கபளீகரம் செய்திருந்ததை நேற்று முன்தினம் மாலை அப்பகுதி விவசாயிகள் பார்த்து வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இரவு நேரமானதால் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அங்கு செல்ல இயலவில்லை. இதையடுத்து, நேற்று கலெக்டர் பிரபாகர், வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மோகன்ராம், பையூர் வேளாண்மை ஆராய்ச்சி மைய தலைவர் தமிழ்செல்வன், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரலகிரி கிராமத்துக்கு சென்று, அங்கு செடிகள் மற்றும் மரங்களில் படர்ந்திருந்த வெட்டுக்கிளிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, சில வெட்டுக்கிளிகளை பிடித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததால், அவை மயங்கி விழுந்து இறந்தன.

இதுகுறித்து நேரலகிரியை சேர்ந்த விவசாயி சிவாஜி கூறுகையில், நாங்கள் இது போன்று கூட்டமாக வெட்டுக்கிளிகளை பார்த்ததில்லை. இந்த பகுதியில் 1 கி.மீ சுற்றளவில் வெட்டுக்கிளிகள் பரவி உள்ளது. இதை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனிடையே நீலகிரி மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய பயிர்களை அழித்துள்ளன. திருவட்டார் அருகே வெட்டுக்கிளிகள்: குமரி மாவட்டத்தில் திருவட்டார் அருகே வெட்டுக்குழி, முளவிளை போன்ற பகுதிகளில் நேற்று காலை வாழை மரங்களில் இலைகள் முழுவதும் அரிக்கப்பட்டு காம்புகள் மட்டும் இருப்பதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ரப்பர் மரங்கள், புதிதாக நடவு செய்த ரப்பர் கன்றுகள், அன்னாசி தோட்டம், மரவள்ளிக்கிழங்கு, தேக்கு மரங்கள் போன்றவற்றிலும் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் பல ஏக்கர் பரப்பில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வெட்டுக்கிளிகள் மரம் மற்றும் செடிகளில் அழிவை உண்டாக்கியுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோதங்கராஜ், ேவளாண்மை அதிகாரிகள் களப்பணியாளர்கள் அந்த பகுதி முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டனர். மரங்கள் மற்றும் தாவரங்களில் இருந்த வெட்டுக்கிளிகளை படமெடுத்து கோவை வேளாண். பல்கலைக்கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பினர். அவர்கள் ஆய்வில் அது சாதாரண வெட்டுக்கிளி என்பது தெரியவந்தது.

அழிப்பது எப்படி?
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் படையெடுத்தாலும் அதனை உடனடியாக எதிர்கொள்ள உயிரி பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன மருந்துகள், மருந்து தெளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு வைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் டிரம் அல்லது டின்கள் கொண்டு ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதை தடுக்கலாம். வேம்பு சார்ந்த தாவர பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தி தடுக்க முடியும். லாம்டாசைஹோளோத்ரின் மருந்தை தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

உள்ளூர் வெட்டுக்கிளிதான்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதா என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமை செயலாளர் சண்முகம், வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அளித்த பேட்டி: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ஊட்டி ஆகிய மாவட்டங்களில் காணப்படுபவை, உள்ளூர் வெட்டுக்கிளிகள் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ஜூலை மாதம் வரை இருக்கும். இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை.

ஆனாலும் தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகளும் உள்ளன. எனவே விவசாயிகள், வயல்களில் காணப்படும் உள்ளூர் வெட்டுக்கிளிகளை கண்டு, பாலைவன வெட்டுக்கிளிகள் என அச்சப்பட வேண்டாம். இருப்பினும், வெட்டுக்கிளிகள் கூட்டமாக இருப்பதை பார்த்தால், விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்