SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்கத்தை நிறுத்திய தொழிற்சாலைகள் வாழ்க்கையை தொலைத்த தொழிலாளர்கள்

2020-05-27@ 00:28:32

* போட்ட காசெல்லாம் பாழாய் போச்சு
* ஊரடங்கால் பொழப்பு படு நாசமாச்சு
* 5,000 கோடி இழப்பு
* 40,000 தொழிலாளர் பாதிப்பு
* வேலைக்கு ஆளில்லை சரிந்தது கட்டுமான தொழில்
* 9 லட்சம் பேர் வாழ்வாதாரம் என்ன?
* சின்னச்சின்ன தொழில்கள் சிதைந்து போன பரிதாபம்

தொழிற்சாலை தொடங்கி, நிறைய பேருக்கு வேலை தர வேண்டும் என்பது சிலரின் கனவு. சொந்தக்காலில் நிற்க சிறிய அளவில் தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் சிலர். இப்படி ஒரு தொழில் தொடங்கி பாடுபட்டு உழைத்து, போட்டிகளை சமாளித்து கொஞ்சம் ெகாஞ்சமாக முன்னேறியவர்களை, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது கொரோனா.  கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 4வது முறையாக, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கெடுபிடிகளில் தற்போது சில தளர்வுகள் வந்தாலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்பை பார்த்தால், இன்னும் நீட்டிக்கப்படுமோ என்ற கவலையும் பயமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு கொரோனா ஊரடங்கு மக்களை மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கிவிட்டது. வேலைவாய்ப்பு குறைவு, தொழில் முடக்கம் ஆகியவற்றால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. தொழிலாளர்கள் இடம்பெயர்வால் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை பல இடங்களிலும் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. 2021ம் ஆண்டில் உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோ மொபைல்துறையாக இந்திய ஆட்டோ மொபைல் துறை மாறும் எனக்கூறி வந்த நிலையில் கொரோனா  அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது. விற்பனை கடுமையாக சரிந்ததால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் ஜவுளித்தொழில் அடியோடு நசிந்துவிட்டது. நாமக்கல்லில் லாரி தொழில் முடங்கி கிடக்கிறது.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில்  ஏராளமானோர் சிறிய, நடுத்தர முதலீட்டில் சில்வர் பட்டறை தொழில் செய்து வருகின்றனர். மதுரை நகருக்குள் மட்டுமே 10 ஆயிரம் பேர் தகரப் பொருட்கள்  தயாரிப்பு பட்டறைத் தொழிலில் உள்ளனர். ஸ்டீல், மர பர்னிச்சர்  தயாரிப்புகள், அப்பளக் கம்பெனிகள், நெசவகங்கள், போல்டு நட்டுகள், ரப்பர்  பொருட்கள், மினி வேன், லாரிகளுக்கு பாடி கட்டுதல், ஸ்டவ் அடுப்புகள் தயாரிப்பு, மோட்டார் வாகன உதிரி பாகங்கள், நிக்கல், குரோமியக்கம்பெனிகள்,  செருப்பு மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள், ஊதுபத்தி, சிலேட்டுக்குச்சி என  ஏராளமான தொழில்களும் முடங்கியுள்ளன.

இன்னும் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன.  இந்த சூழலில் பிரதமர் நரேந்திரமோடி ₹20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 5 கட்டங்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஊக்க சலுகை திட்டங்களை விவரித்தார்.  நமக்கு பயனுள்ள அறிவிப்பு வரும் என காத்திருந்த மக்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான வரையறைகளிலும் மத்திய அரசு மாற்றங்கள் செய்தது. அதன்படி சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ₹3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இத்துறைக்கு பல்வேறு சலுகைகள், கூடுதல் கடன் கிடைக்க அறிவிப்புகள் வெளியாகின.

இருப்பினும் தொழில் நிறுவனங்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போதுள்ள கடன் சுமையுடன் மேலும் தாங்க இயலாத கடன் சுமைதான் அதிகரிக்கும். இந்தநிலைமை சீரடைய 8 முதல் 10 மாதங்கள் வரை ஆகலாம். அதற்கு இடைப்பட்ட காலத்தில் தொழிலை மேம்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும் வழியில்லாத நிலைதான் உள்ளது என்கின்றனர் தொழில் துறையினர். தற்போது அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள் எல்லாம்  தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டங்கள் மட்டுமே. அதே வேளையில் தேவைகளும், அதற்குரிய நுகர்வோரும் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையாகி மீண்டும் வர்த்தகம் சூடுபிடிக்கும். அதற்கு பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற மக்களின் கைகளில் பணம் புரள வேண்டும். அதனால் அரசு இதற்காக இனி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நீடிக்கிறது.

தூத்துக்குடியில் 1,500 சிறிய மற்றும் பெரிய ஏற்றுமதி
நிறுவனங்கள் உள்ளன. இவற்றை நம்பி 15,000 பேர் உள்ளனர்.  இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி, வத்தல், கல், மண், ஜல்லி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.  இறால், நண்டு உட்பட கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25,000 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய கட்டுமான வல்லுனர் சங்க பொதுக்குழு
உறுப்பினர் சிறில் கூறுகையில், ‘தனியார் கட்டுமான நிறுவனங்கள் எடுத்துள்ள திட்டங்களில் 25 சதவீத பணிகள் மட்டுமே இப்போது நடக்கிறது. பழைய விலையில் எடுத்து செய்த புராஜக்ட்கள் விலைவாசி உயர்வால் முடங்கியுள்ளன. 50 சதவீத பணியாளர்கள் வடமாநில தொழிலாளர்கள், அவர்கள் திரும்பி சென்றதாலும் பணிகள் முடங்கியுள்ளன. மற்றபடி மத்திய அரசு அறிவித்த ₹20 லட்சம் கோடியில் கட்டுமான தொழிலில் எந்த திட்டமும் வரவில்லை’ என்றார்.

கடைசியில் மக்களுக்கு பூஜ்யம்  தானா
20,00,000,00,00,000  - என்னாது இது,  தெரியுதுல்ல. கொரோனா வைரஸ் பயங்கரம் வர்க்க பேதம் இல்லாமல் ஏழை, நடுத்தரவர்க்கம், என நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது. கார்ப்பரேட் முதல் பெட்டிக்கடை வரை முடங்கிவிட்டது. இவர்களை காப்பாற்ற மத்திய அரசு அறிவித்ததுதான் இந்த பெருந்தொகை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாளாக அறிவித்த சலுகைகள் அந்தந்த துறையினருக்கு போய் சேர்ந்ததா...சேருமா? சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியா? சைபர் எண்ணும் ேபாது தலைசுற்றும்; கடைசியில்...? பலதரப்பட்ட துறைகளின் உண்மை நிலை குறித்த ஒரு வேதனை தொடர்.

* 5,000 கோடி பாதிப்பு
மிக குறைந்த முதலீட்டில் சிறு குடும்பங்கள் பிழைத்து வந்த, சிறிய தொழில்கள் கொரோனா ஊரடங்கால்
சின்னாப்பின்னம் ஆகிவிட்டன. அவற்றில் சில:

* சிக்கலில் சிக்கிய கொசு வலை
கரூரில் ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்பில் 50,000 தொழிலாளர்கள் உள்ளனர். ₹50 கோடி வரை தேக்கம் அடைந்துள்ளது. பஸ் பாடிகட்டுதலில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தினமும் 30 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

* நசுங்கிய பாத்திர தொழில்
மதுரை, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் சில்வர், அலுமினிய, பித்தளை பாத்திரப் பட்டறைகள் உள்ளன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கும் பல கோடி இழப்பு.

* கருகிய தீப்பெட்டி தொழில்
குட்டி சிவகாசி எனப்படும் குடியாத்தத்தில் செமி ஆட்டோமெடிக் தீப்பெட்டி உற்பத்தி கூடங்கள் 15ம், 150 சிறு தீப்பெட்டி உற்பத்தி கூடங்களும் இயங்கி வருகின்றன. இதை நம்பி 5,000 தொழிலாளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு ₹2 கோடி.

* நைந்து போன கைத்தறி தொழில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25,000 பட்டு கைத்தறி கூடங்களும், 1,000 விசைத்தறி கூடங்களும் உள்ளன. 50,000 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு 1 லட்சம் பட்டுச்சேலைகள் தேக்கத்தால் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

* மீன் வலை
இந்தியாவில் மொத்த மீன் வலை உற்பத்தியில் 70 சதவீதம் குமரியில் தான்; வடமாநில தொழிலாளர்கள் இல்லாததால் 50% உற்பத்திகூட நடக்கவில்லை. 1,000 கோடி பாதிப்பு. 20 லட்சம் கோடி நிவாரணத்தில் 5 ரூபாய் கூட கிடைக்கவில்லை. என மீன் வலை தயாரிப்போர் சங்க பொதுசெயலாளர் நாகூர்கான் கூறினார்.

* அறுந்து போன கயிறு தொழில்
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கயிறு பொருட்கள் உற்பத்தியாளர் கலைமாறன் கூறுகையில், ‘‘குமரி மாவட்டத்தில் 100 மில்களுக்கு மேல் தென்னை நார் தயாரிக்கின்றன. இதில், 50,000 பேர் நேரடியாகவும்,1 லட்சம் பேர் மறைமுகமாகவும் கயிறு தயாரிக்கும் பணிக்கு வாய்ப்பு பெறுகின்றனர். தற்போது பல கோடி பொருட்கள் தேங்கியுள்ளன’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்