SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்திரியை தேடும் மக்களின் நிலைமையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-04-06@ 00:39:34

‘‘என்ன விக்கி நாளுக்கு நாள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கும் நேரம் குறைந்து கொண்டே வருது... என்ன காரணம்...’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒரே காரணம் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்பதுதான். ரேஷன் கடை முதல் சிக்கன் கடை வரை பெரும்பாலான கடைகளில் மக்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டுள்ளனர். இதில் ஒருவருக்கு கொரோனா இருந்து அவர் மூலம் கூட்டத்தில் பரவினால் 3வது நிலையை தமிழகம் தாங்காது. பொதுமக்களில் பலரும் இந்த வெயில் காலத்தில் யார் 11 மணிக்கு மேலே மார்க்கெட், மளிகை பொருள் வாங்கப் போறா... பேசாம கடைகள் மூடும் நேரத்தை இன்னும் குறைக்கலாம் என்பதுதான் பேச்சாக இருக்கிறது... இறைச்சி கடைகளில் கூடிய கூட்டமே இதற்கு சாட்சி... இன்று இல்லாவிட்டால் நாளை இறைச்சி சாப்பிடலாம் என்கிற பரந்த சிந்தனை கூட இல்லாமல் முட்டிமோதி இறைச்சி வாங்கிக் ெகாண்டு தங்களை வெற்றி வீரர்களாக வீட்டில் காட்டி கொண்ட ஆண்களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடிந்தது. இதெல்லாம் தான் அரசுக்கு கொரோனா நெருக்கடியை ஏற்படுத்தி மூட வைத்தது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலெக்டர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு அரசு பணிகளை கவனித்து வர்றாராமே, என்ன காரணம்...’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் கொரோனா பரவிய உடனேயே முத்துநகர் மாவட்டத்தை காக்க பம்பரமாக சுழன்று பணியாற்றியவர் அந்த மாவட்ட கலெக்டர். ஊரடங்கு உத்தரவு வந்த உடனேயே பொதுமக்களிடம் அச்சத்தை தவிர்க்க முகக் கவசம், சானிடைசர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒவ்வொரு யூனியனிலும் கடை திறப்பு, அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடிச் செல்ல டோர் டெலிவரி, மக்களுக்கு கிருமிநாசினி சுரங்கப்பாதை என அடுத்தடுத்த கட்டத்திற்கு மாவட்டத்தை முன்னிறுத்தி வருகிறார். கொரோனா பரவிய உடனேயே ஒவ்வொரு அரசு ஆஸ்பத்திரியாக ஆய்வுப் பணியை மேற்கொண்டு முடித்தார். அந்த அரசு ஆஸ்பத்திரி ஆய்வுதான் அவருக்கே சிக்கலாகி இருக்கிறது. அதாவது கலெக்டர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கும் ஒரு நாள் ஆய்வுக்கு சென்றாராம். இந்நிலையில் அங்கு பணியாற்றிய டாக்டர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட அந்த ஊரின் பெரும் பகுதி தற்போது தனிமையில் இருக்கிறதாம். இதனால் சுழன்று பணியாற்றிய அந்த மாவட்ட கலெக்டரும் பணிக்கு நடுவே தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாராம். அருகில் கூட யாரையும் அனுமதிப்பதில்லையாம். மக்கள் வெரிகுட் என்கிறார்கள்.. ஊழியர்கள் இப்படிதான் தன் கீழ் பணியாற்றுபவர்களை பாதுகாப்பவராக இருக்க வேண்டும் என்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகர அமைச்சரை மக்கள் எதுக்கு தேடுறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில், கொரோனா நிவாரணமாக பணம், பொருட்களை வழங்கிட்டு வர்றாங்க... முதல் நாளிலேயே மதுரையில் கல்லும், மண்ணும், வண்டுமாக அரிசி விநியோகிக்கப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியதாம்... உடனே, அத்தனை கடைகளிலும் நல்ல அரிசி மாற்றப்பட்டதாம்... ‘ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணப் பொருட்களை பெறாதவர்களுக்கு, பெற்றுள்ளதாக எஸ்எம்எஸ் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என எச்சரித்திருந்தாராம் தெர்மோகோல் அமைச்சர். இந்நிலையில், மதுரையின் ரிசர்வ் லைன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரேஷன் பொருட்கள் வாங்கியவர்களுக்கான பணம், பொருட்களுடன் 10 கிலோ அரிசி மட்டுமே போட்டு அனுப்பி வைத்து விட்டனராம்... ஆனால், ‘20 கிலோ அரிசி’ என்று இவர்கள் எல்லோருக்குமே எஸ்எம்எஸ் வந்திருக்கிறதாம்... இதுதொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்த 2 எண்களுக்கு கூப்பிட்டால் யாருமே எடுப்பதில்லையாம்... இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு போய் கேட்டால், ‘ஸ்டாக் குறைச்சலுங்க’ எனச் சொல்லி விரட்டி விடுகிறார்களாம்... மேலும், பல ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயில் ₹100க்கு கட்டாயம் சோப்பு, டீத்தூள், சேமியா.. இப்படி ஏதாவது வாங்கியே ஆக வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவதும் நடக்கிறதாம்.. இதனால கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பேட்டியளித்த தெர்மோகோல் அமைச்சரை, மதுரை மக்கள் வலைவீசி தேடுகிறார்களாம்.... புகார் சொல்ல... ’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரகசியம் காக்க யார், யாருக்கு உத்தரவு போட்டு இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா தொற்று நோய் பாதித்தவர்கள் பற்றிய விவரங்களை, குமரி மாவட்ட மருத்துவக்கல்லூரி டீன் அல்லது கண்காணிப்பாளர், டாக்டர்கள் யாரும் வெளியே கூற கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சொல்லியிருக்காம். பரிசோதனை முடிவு வந்ததும், கலெக்டருக்கு மட்டும் தான் தெரிவிக்க வேண்டும். பின்னர் அது தொடர்பாக மூச்சு கூட விடக்கூடாது என கடுமையான கண்டிப்புகள் கலெக்டரிடம் இருந்து சென்று இருக்கிறதாம். இதனால் நாள் தோறும் மற்ற மாவட்டங்களில் மாலை 6 மணிக்கெல்லாம் விவர பட்டியல் கூறப்பட்டாலும், குமரி மாவட்டத்தில் பாதித்தவர்களின் விபரங்களை இரவு 9 மணி ஆனாலும் வெளியிடுவதில்லையாம். அதுமட்டுமில்லாமல் இந்த விவரங்களை மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடம் கேட்டால், நாங்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் கூற கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எங்களிடம் இது பற்றி கேட்காதீர்கள் என கூறி போனை துண்டித்து விடுகிறார்களாம்.
இதனால் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கூட பாதிப்பு பற்றிய புள்ளி விவரங்கள் எடுக்க திணறுகிறார்கள். கொரோனா பாதிப்பு பற்றி எந்த வித ஒளிவுமறைவும் இருக்க கூடாது. மக்களுக்கு நடந்தவற்றை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டும், இவர்கள் மட்டும் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா என்ற ஆதங்கம் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வந்துள்ளது. இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என்று அமைதியாக இருப்பதாக மக்கள் பிரதிநிதிகள் கூறி வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்