SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் தொல்லையால் மனைவி உட்பட 4 பேரை கொன்ற ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு: செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2020-03-12@ 00:06:49

சென்னை: கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகள், அம்மா ஆகிய நான்கு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.சென்னை பம்மல் நந்தனார் தெரு, ரங்கநாதன் அபார்ட்மென்டில் வசித்து வந்தவர் தாமோதரன் என்கிற பிரகாஷ் (40), பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தினார். இவரது மனைவி தீபா (35), மகன் ரோஷன் (7), இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். மகள் மீனாட்சி (4), யு.கே.ஜி. படித்து வந்தார். இவர்களுடன் தாய் சரஸ்வதி (60)யும் இருந்தார். தாமோதரனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2017 டிசம்பர் 12ம் தேதி  குடும்பத்துடன் தற்கொலை செய்வது தொடர்பாக மனைவியுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். பிறகு மனைவி மற்றும் தாய் சரஸ்வதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்பு தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோரை கத்தியால்   குத்தி கொலை செய்தார். தானும் கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் மயங்கியுள்ளார்.

இதுபற்றி அறிந்த மைத்துனர் குமரவேல் மற்றும் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் ஆகியோர் சங்கர் நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டுக்கு வந்தபோது, நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தாமோதரன் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 5 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தீபா, சரஸ்வதி, ரோஷன், மீனாட்சி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தீவிர சிகிச்சையில் தாமோதரன் மட்டும் உயிர் பிழைத்தார். வீட்டில் தாமோதரன் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:நான் எவ்வளவோ முயன்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தேன். ஆனால், மத்தியஅரசின் பண மதிப்பு இழப்பால் ஜவுளி தொழிலில் வளர்ச்சி அடைய முடியவில்லை. விலைவாசியும் அதிகமாக இருந்ததால், கடன் வாங்கி கடன் வாங்கி வாழ்ந்தேன். கடன் அதிகமானது. இப்படியே சென்றால், என் குடும்பத்தை போல் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசும் மக்களின் தொழில் வளர்ச்சி குறித்து கண்டுகொள்ளவே இல்லை. வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்து வருபர்களில் நானும் ஒருவன். நான் துணிக்கடன் கொடுத்த இடத்தில் இருந்து பணமும் வரவில்லை.

அதனால், தொழில் நடத்த முடியவில்லை. மொத்தம் குடும்பமும் என்னுடன் வரவேண்டும் என்று நினைத்து என் குடுபத்தினரையும் அழைத்து செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என அதில் கூறப்பட்டு இருந்தது.மேலும் தாமோதரன் போலீசாரிடமும், நீதிபதியிடமும் இதேபோல் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை  கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி வேல்முருகன் அரசு தரப்பு மற்றும் சாட்சிகள் 22 பேரிடம் விசாரணை செய்து நேற்று இரவு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

அதில் கூறியிருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 309ன் கீழ் தற்கொலைக்கு முன்ற வழக்கிலிருந்து தாேமாதரனை விடுதலை செய்வதாகவும், பிரிவு 302ல் 4 பேரை கொலை செய்த வழக்கில் சாகும்வரை தூக்கிலிட வேண்டும். குற்றவாளி தொடர்ந்து சிறையில் இருந்ததால் அபராதம் எதுவும் கட்ட தேவையில்லை. இந்த தண்டனையை உறுதிப்படுத்த இதற்கான ஆவணங்கள் ஒரு வார காலத்திற்குள் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களான கத்தி மற்றும் ஆவணங்கள் மேல்முறையீடு முடிந்தவுடன் அழிக்கப்படவேண்டும் என கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சீதாலட்சுமியும், எதிர்தரப்பில் வழக்கறிஞர் ராஜ்குமாரும் ஆஜராகினர்.

2 ஆண்டில் மூன்று பேருக்கு தூக்கு
செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இரண்டு வருடத்தில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு கடந்த 19.2.2018 அன்று நீதிபதி வேல்முருகன் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதேபோன்று, திருப்போரூர் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கு சிறுமியை கொலை செய்த வழக்கில் 15.2.2019 அன்று தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். தற்போது, மூன்றாவதாக  ஜவுளிக்கடை உரிமையாளர் தாமோதரன் தனது மனைவி, தாய், இரண்டு  குழந்தைகளை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்