SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ.விடம் இருந்துதான் விலகினோமே தவிர இந்துத்துவ கொள்கையில் இருந்து விலகவில்லை: அயோத்தியில் உத்தவ் தாக்கரே பேட்டி

2020-03-08@ 00:16:34

அயோத்தி: இந்துத்துவ கொள்கையில் இருந்து விலகவில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிரா முதல்வராக கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதியன்று உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் பூர்த்தியானதை தொடர்ந்து. முதல்வர் உத்தவ் தனது குடும்பத்துடன் நேற்று அயோத்திக்கு சென்று ராம ஜென்மபூமியில் வழிபாடு நடத்தினார். பின்னர்,  உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2018 நவம்பரில் நான் இங்கு (அயோத்தி) வந்தபோது ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. பிறகு, 2வது முறை கடந்த 2019, நவம்பரில் இங்கு வந்தபோது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பு என்னை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் பிறகு, நான் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றேன். இப்போது, 3வது முறையாக இங்கு வந்திருக்கிறேன்.

நான் ஒவ்வொரு முறை அயோத்திக்கு வரும் போதும் ராமர் கோயில் குறித்த நல்ல தகவல் கிடைக்கிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நான் நேற்று தொலைபேசியில் பேசினேன். அப்போது நாம் உறுதியாக ராமர் கோயில் கட்டுவோம் என்று அவரிடம் தெரிவித்தேன்.  மேலும், கோயில் கட்டுவதற்காக சிவசேனா 1 கோடி நிதி வழங்கும் என்றும் அவரிடம் உறுதி அளித்துள்ளேன். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்திருப்பதால் இந்துத்துவ கொள்கையில் இருந்து எங்கள் கட்சி விலகி விட்டதாக பா.ஜனதா தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். நாங்கள் பா.ஜவிடம் இருந்துதான் விலகியிருக்கிறோம். இந்துத்துவ கொள்கையில் இருந்து விலகவில்லை. இந்துத்துவ கொள்கையில் சிவசேனா எப்போதும் உறுதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். நேற்று மாலை அயோத்தியில் உள்ள சரயூ ஆற்றங்கரையில் நடைபெற்ற ஆர்த்தி பூஜையில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த நிகழ்ச்சியை உத்தவ் தாக்கரே ரத்து செய்து விட்டு மும்பை திரும்பினார்.

அயோத்தி வருகைக்கு எதிர்ப்பு; 3 சாமியார்களுக்கு வீட்டு காவல்
ராமரை கற்பனை உருவம் எனக் கூறிய கட்சியினருடன்,  கூட்டணி சேர்ந்து மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்ததால், அவரது வருகையின்போது கருப்புக் கொடி காட்டுவோம் என  அயோத்தி அனுமன்கர்கி கோயில் சாமியார் ராஜூ தாஸ், தபஸ்வி சவானி கோயில் சாமியார் பரமஹன்ஸ் தாஸ், இந்து மகாசபா தலைவர் ராகேஷ் தத் மிஸ்ரா ஆகியோர் கூறியிருந்தனர். இந்நிலையில் அயோத்தியில் வழிபட உத்தவ் தாக்கரே நேற்று வந்தார். அவரது வருகைக்கு முன் மூன்று சாமியார்களின் வீடுகளுக்கு போலீசார் சென்று அவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர். உத்தவ் தாக்கரே வருகைக்கு அயோத்தி சாமியார்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அயோத்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் கட்டுமானத்துக்காக தனது தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்