SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

2013-07-26@ 00:17:52

சென்னை : இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார்.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும்.

தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது.

அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை. ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள். மிலாது நபி தினத்தன்று விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு, அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர், சிறுபான்மையினர் நல ஆணையம், விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு, உருது அகாடமி, காயிதே மில்லத் மணிமண்டபம்,

இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு, உமறுபுலவருக்கு மணிமண்டபம், திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:

இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

amoxicilline amoxicillin amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்