SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டசபையில் சிறப்பு மசோதா தாக்கலாகுமா?

2020-02-14@ 21:40:28

திருச்சி: காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சிறப்பு மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு1ல் விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.  மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நடந்த அரசு விழாவில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர், விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் இனி டெல்டா மாவட்டங்களில் வராது. இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தொடங்குவதற்கான அனுமதியை வழங்க மாட்டோம். ஏற்கனவே, நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் பணிக்கு மத்திய அரசுதான் அனுமதி வழங்கி உள்ளது. மாநில அரசு தடையில்லா சான்று வழங்கவில்லை என்றார். முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பணிகளை நிறுத்த தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து மனு அளித்தார். அதில், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட இருப்பது பற்றியும், அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சிறப்பு சட்டம் இயற்றுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேளாண் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த மசோதாவை வரும் 18 அல்லது 19ம் தேதி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இந்த மசோதா மீது விவாதம் நடைபெறும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் அந்த பகுதியில் எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது. வேளாண் தொழில் மட்டுமே நடைபெறும். ஐஓசி, ஓஎன்ஜிசி, வேதாந்தா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் 95 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் பணி செய்ய ஏலம் எடுத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வெளியேற்றப்படுமா, இதற்கு மத்தி–்ய அரசு சம்மதிக்குமா போன்ற விவரங்கள் சட்டசபையில் நடைபெறும் விவாதத்தின் முடிவில் தெரியவரும். ஒருவேளை தமிழக அரசு உறுதியாக இருந்து நிறுவனங்களை வெளியேற்ற முயற்சித்தால் ஏலம் எடுத்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடவும் வழி உள்ளது. நீதிமன்றத்தில் கூட  அரசின் கொள்கை முடிவு என வாதிடலாம். ஆனால் மத்திய அரசு சம்மதிக்காவிட்டால், இந்த மசோதா தாக்கல் ஆகாமலே போகலாம். அல்லது தாக்கல் ஆனாலும் அது நிலுவையில் போடலாம் என கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pune1

  புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

 • hathraas1

  நாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை!: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா?

 • chinamartyrs1

  நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

 • arch1

  அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..!!

 • 01-10-2020

  01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்