SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சரான அப்பா கையெழுத்தை போட்டு கோடிக்கணக்கில் கமிஷன் பார்க்கும் மகனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-02-12@ 00:57:38

‘‘ஊராட்சிலேயும் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுத்து இருக்காங்க தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சிச் செயலர் பணிக்கு 10 லட்சம் ரூபாய் வரை அதிகாரி வாங்கினாராம். அத்துடன் பணம் கொடுத்தவரை ஊராட்சி செயலாளராகவும் நியமிச்சுட்டாராம். அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் இல்லையாம். அவர் கொடுத்த இருப்பிட சான்றிதழ் போலியாம். ஊராட்சி செயலாளராக நியமிக்கப்பட்டவர் கொடுத்த 10 லட்சத்தை அதிகாரிகள், புரோக்கர்கள் பகிர்ந்து கொண்டார்களாம். சம்பந்தப்பட்ட ஊழியருக்கு சம்பளம் வழங்கும்போதுதான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்றிய உயர் அலுவலர் நீண்ட விடுமுறையில் சென்று விட்டாராம்... ஊராட்சி செயலாளர் பதவியில் முறைகேடு நடப்பதை தடுக்க போட்டி தேர்வு வைக்கவும், நேரடி நியமனத்தை தடுக்கணும்னு நேர்மையான அலுவலர்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட கீழ்மட்ட அதிகாரியின் அரசியல் செல்வாக்கு பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள உழவர் சந்தையும் அரசியலில் சிக்கி வதைப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு உண்மையான விவசாயிகள் பலர் புறந்தள்ளப்பட்டு, ஆளும்கட்சி தயவுடன் வியாபாரிகள் பலர் உள்ளே புகுந்துவிட்டனர். இவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இங்கு, கடந்த 15 ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த ஒரு பெண் விவசாயிக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. அவர், உழவர் சந்தை முன்பு காய்கறி மூட்டைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை சென்றது.
அவர் உரிய விசாரணை நடத்தி, உழவர் சந்தை நிர்வாக அலுவலரை இடமாற்றம் செய்தார். ஆனால், கலெக்டர் உத்தரவு செல்லாமல் போய்விட்டது. காரணம், மேலிடத்திலிருந்து அவ்வளவு பிரஷ்ஷர். வேறு வழியில்லாமல், கலெக்டர் பின்வாங்கி விட்டார். தலை தப்பிய அந்த அதிகாரி, ‘ஐயா உத்தரவு போட்டாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என தம்பட்டம் அடித்து வருகிறார்... ஆனால் அதிகாரிகள் வட்டாரமோ... ஆடும் வரை ஆடு... அடங்கிய பிறகு அட்ரஸ் இல்லாமல் போன எத்தனை அரசியல் சப்போர்ட்டோட ஆடின அதிகாரிகளை பார்த்து இருக்கோம்...’’ என்று சொல்லி சிரிக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிவல மாவட்டத்தின் அமைச்சரின் மகன் நிழல் அமைச்சராக வலம் வருகிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் வரும் மாவட்டத்தில் கடவுள் பெயரை முதல் பாதியாகவும் நிலவின் மற்றொரு பெயரை மறுபாதியாகவும் கொண்ட அமைச்சர் உள்ளார். இந்த அமைச்சரின் மகன் தான், தொகுதி முழுவதுமாகவே நிழல் அமைச்சராக வலம் வருகிறாராம்.
இவர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை நேரடியாக வீட்டிற்கே வரவழைத்து வேண்டிய வேலைகளை முடித்துக்கொள்கிறாராம். அவர் கூறும் பணிகளை செய்ய மறுக்கும் அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைத்து காரியத்தை சாதித்து வருகிறாராம். எல்லா அரசு திட்டங்களிலும் அமைச்சரின் மகனை, வீட்டில் சந்தித்து 15 சதவீதம் கமிஷன் தொகையை கொடுக்க வேண்டுமாம்.
போட்டோவிற்கு போஸ் கொடுப்பதுடன், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொடங்கி வைப்பது வரை மட்டுமே அமைச்சரின் பணியாம். இதில் ஒரு படிமேலே போய் அப்பா போலவே மகன் அரசு கோப்புகளில் கையெழுத்துபோட்டு கோடிக்கணக்கில் பணத்தை பார்க்கிறாராம். இதை பார்த்த கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாம்... ஊராட்சி செயலாளர் பணிக்கு அமைச்சரின் மகன் ₹3 முதல் ₹5லட்சம் வரை வசூலித்ததாக கட்சியினரே அதிருப்தியுடன் கூறுகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் எழுத்துத்தேர்வு இல்லாமல் நேர்முகத்தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் அரசு வேலைகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக பணி வழங்கப்படுகிறதாம். இப்படி அமைச்சரின் மகன் கூறியவர்களுக்கு பணி வழங்கப்படவில்லையென்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்களாம்... சொந்த கட்சிக்காரன் போனால் கூட இந்த கையில் காசு அந்த கையில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் என்று அதிரடிக்கிறாராம் என்று வேதனையுடன் இலை தொண்டர்கள் புலம்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தென்காசியில என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆழ்வார்குறிச்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான சாலை பணிகளுக்கு தொடக்க விழா நடந்தது. ஆலங்குளம் தொகுதி என்பதால் கோதையானவர் எம்எல்ஏ அரசு துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள துறை செயலர்களை சந்தித்து இப்பணிகளுக்கு அனுமதி பெற்று வந்தாராம். இந்நிலையில் சாலை பணிகள் துவக்க விழாவிற்கு இலை தரப்பை மட்டும் அழைத்த அதிகாரிகள், தொகுதி கோதையான எம்எல்ஏவை அழைக்கலையாம். இதனால் கொதிப்படைந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் இலை தரப்பு எம்.பி. அங்கு வந்து ‘இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்கள் பிரதிநிதியாகிய நீங்கள் வாருங்கள். நாம் இணைந்தே விழாவை தொடங்கி வைப்போம்’ எனக்கூறி எம்எல்ஏவை சாலை பணிகள் தொடக்க விழாவுக்கு அழைத்து சென்றார். ‘கஷ்டப்பட்டு தொகுதிக்கு திட்டத்தை நாம கொண்டு வந்தா, அதிகாரிகள் அதை இலை சாதனைன்னு சொல்றாங்களே என்று கோதையானவர் வருத்தப்பட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்